கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019
இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மராட்டியம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் செளசெள அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கொடைக்கானல், பேச்சிப்பாறை, பழனி போன்ற இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.
மண் மற்றும் காலநிலை
சௌசௌ பயிருக்கான வெப்பநிலை 180-220 செல்சியஸ் இருக்க வேண்டும். இதைக் கடல் மட்டத்திலிருந்து 1000-1750 மீட்டர் உயரத்தில் பயிரிடலாம். மேலும், ஆண்டுக்கு 300-400 செ.மீ. மழை பெய்யும் பகுதியிலும் பயிரிடலாம். இதைப் பயிரிட நல்ல வடிகால் வசதியுள்ள நிலம் வேண்டும். மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-6.5 இருக்க வேண்டும்.
பருவம்
நீர்போகத்தில், ஜனவரி-பிப்ரவரி, ஏப்ரல்-மே ஆகிய மாதங்கள், கார்போகத்தில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் என இரண்டு பருவங்களில் பயிரிடலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தின் சரிவு மற்றும் நிலவளத்துக்கு ஏற்ப, 2.5 மீ. முதல் 1.8 மீ. இடைவெளியில் 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து, அவற்றில் மட்கிய தொழுவுரம் 10 கிலோ மற்றும் மேல்மண்ணைக் கலந்து நிரப்ப வேண்டும். மேலும், 250 கிராம் தழைச்சத்து, 500 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றையும் சேர்த்துக் கலந்துவிட வேண்டும்.
விதைப்பு
எக்டருக்கு நன்கு முற்றிய 1,500 சௌசௌ காய்கள் தேவை. இந்தக் காய்களை, நடுவதற்கு 15-20 நாட்களுக்கு முன் பறித்து நிழலில் வைக்க வேண்டும். காய்களில் முளைகள் தோன்றியதும், குழிக்கு மூன்று வீதம் முளைகள் மேலே தெரியும்படி வைத்து, முக்கோண வடிவத்தில் நட வேண்டும். உள்ளூரைச் சேர்ந்த பச்சை, வெள்ளை வகைகளை நடலாம்.
பயிர் மேலாண்மை
சௌசௌ கொடிகள் நன்கு படர ஏதுவாக 2 மீ. உயரத்தில் பந்தல் அமைக்க வேண்டும். இவ்வகையில், இரண்டு மாதங்களில் கொடிகள் வளர்ந்து பந்தல் முழுவதும் படர்ந்து விடும்.
உரமிடுதல்
மே-ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கொடிகளைச் சுற்றி 25 கிலோ தொழுவுரத்தை இட்டுக் கிளறி விட வேண்டும். இத்துடன் இரண்டு பருவமழைக் காலங்களிலும் எக்டருக்கு 120 கிலோ தழைச்சத்து, 80 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து உரங்கள் தேவைப்படும். இவற்றில், மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை மட்டும் இட்டுவிட்டு, மீதியை, கொடிகள் வளர்ந்து பூக்கள் வருவதற்கு முன் இட வேண்டும்.
பாசனம்
வெப்பநிலை மிகும்போது பாசனம் அவசியம். அதிக ஈரப்பதத்தில் பாசனம் அளித்தால் அழுகல் நோய் ஏற்படும். வளர்ச்சிப் பருவத்தில், அதாவது, பூக்கள் பூக்கும் காலத்திலும், காய்க்கும் காலத்திலும் 5-7 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் கொடுக்க வேண்டும்.
அறுவடை
நடவு செய்த 90-100 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். பின்பு, வாரம் ஒருமுறை எனத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பறிக்கலாம். காய்கள் நன்கு உறுதியாகவும், முட்கள் குறைந்தும், வெளிர் பச்சையாகவும் இருந்தால் அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு கொடியில் சுமார் 200 காய்கள் என, 25-30 டன் காய்கள் ஒரு எக்டரில் மகசூலாகக் கிடைக்கும். முதலாண்டுக் காய்ப்பு முடிந்ததும் இரண்டு வரிசைக் கொடிகளுக்கு இடையே புதிதாகக் குழிகளை எடுத்துக் காய்களை நட வேண்டும். இரண்டாண்டுக் காய்ப்பு முடிந்ததும், முதல் இரண்டாண்டுக் குழிகளில் எடுக்கப்பட்ட வரிசையில் இரண்டு குழிகளுக்கு இடையே புதிதாகக் குழிகளை எடுத்துக் காய்களை நட வேண்டும்.
தாக்கும் நோய்கள்
பூசேரியம் வாடல் நோய்: இந்நோய் இலைகளில் தொடங்கி, இலைக்காம்பு வழியாகத் தண்டுக்கும் பரவி, கடைசியாகக் கொடி வாடிவிடும். நோயுற்ற செடிகளை அகற்றி விட்டு, மற்ற செடிகளைச் சுற்றி மேங்கோசெப் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் வீதம் கலந்து மண் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
பறவைக்கண் நோய்: இலைகள், காம்புகள், தண்டு ஆகியவற்றை கொல்லிடோ டிரைக்கம் என்னும் பூசணம் தாக்குவதால் இந்நோய் தோன்றுகிறது. இதை, மேங்கோசெப் என்னும் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
இலைப்புள்ளி நோய்: இலைகள் மற்றும் காய்களை இந்நோய் தாக்குவதால் வடுக்கள் போலக் காணப்படும். இலைகளில் தோன்றும் இப்புள்ளிகள் சாம்பல் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துக்கு மாறும். நோய் முற்றிய காய்கள் பழுப்பு நிற அழுகல் ஏற்பட்டுக் கெட்டு விடும். இந்நோயைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் மருந்தைத் தெளிக்கலாம்.
சாம்பல் நோய்: இந்நோய் ஸ்பெரோதுகா என்னும் பூசணத்தால் தோன்றும். மழையின்றி வெப்பம் மிகும் போது தாக்கும். இதனால் இலைகள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
தாக்கும் பூச்சிகள்
சிவப்புப் பூசணி வண்டு: முளைத்து வரும் செடிகளில் உள்ள இலைகளைச் சேதப்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பரில் வீதம் கலந்து தெளிக்கலாம்.
பழ ஈ: முழுமையாக வளராத இந்த ஈ வீட்டு ஈயைக் காட்டிலும் சற்றுச் சிறியது. இது, பிஞ்சுக் காயை அல்லது சூலகத்தைத் துளைத்து அதற்குள் முட்டைகளை இடும். முட்டையிலிருந்து வரும் புழுக்கள் காயின் உட்பாகத்தை உண்டு வளரும். பூச்சி தாக்கிய காய்கள் உருமாறிப் போவதோடு உண்ணவும் பயன்படுவதில்லை. விளக்குப்பொறி மற்றும் மருந்துப்பொறி மூலம் தாய் அந்துப்பூச்சிகளைச் சேகரித்து அழிக்கலாம்.
முனைவர் மா.ஆனந்த்,
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, சேலம் மாவட்டம்.
முனைவர் அ.சங்கரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., கோவை.
சந்தேகமா? கேளுங்கள்!