கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019
கோழிப் பண்ணைக் கழிவைப் பயனுள்ளதாக மாற்ற அறிவியல் சார்ந்த உத்திகளைக் கையாள வேண்டும். கோழியெரு என்பது கோழிகளிலிருந்து கிடைக்கும் கரிமக் கழிவுப் பொருளாகும். இதில், கோழிகளின் சிறுநீரும் மலமும் இருக்கும். கோழிகளின் குப்பைக்கூளம் என்பது, கோழியெரு, ஆழ்கூளப் பொருள்களான மரத்தூள், கடலைத்தோல், நெல் உமி போன்றவை. கோழிக்கழிவில், கோழி இறக்கையும் இறந்த கோழிகளும் அடங்கும்.
கோழிப்பண்ணைக் கழிவுகளை, திடக்கழிவுகள், திரவக் கழிவுகள் என இரு வகையாகப் பிரிக்கலாம். பண்ணைக் கழிவுகளின் அளவு, ஆழ்கூளப் பொருள்களின் வகை மற்றும் அளவு, கோழிகளின் எண்ணிக்கை, தீவன வகை, மேலாண்மை, பண்ணையின் காற்றோட்டம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
கோழிகளின் திடக்கழிவில், ஆழ்கூளப் பொருள்கள், எரு, தீவனம், கோழி இறக்கை, குஞ்சுப் பொரிப்பான் கழிவுகள், அதாவது, முட்டை ஓடு, கருவுறாத முட்டை, இறந்த கரு, உடைந்த முட்டையின் ஓடு மற்றும் இறந்த கோழிகள் அடங்கும். திரவக் கழிவில், பண்ணைக் கழிவுநீர் மற்றும் கிருமிநாசினியைப் பயன்படுத்திய நீர் ஆகியன அடங்கும்.
கழிவு மேலாண்மையின் அவசியம்
கழிவுகளை முறையாகக் கையாளா விட்டால், மேற்பரப்பு நீர், நிலத்தடி நீர், காற்று ஆகியன மாசடையும். கோழிக் கழிவுகளில் உள்ள ஈ.கோலை பாக்டீரியா, நைட்ரஜன் ஆகியவை, குடிநீரில் கலந்து நோயை ஏற்படுத்தும். கழிவுகளைக் குழியில் சேகரித்து வைக்கும் போது, துர்நாற்றமுள்ள மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் வெளியேறிச் சுற்றுப்புறத்தை மாசடையச் செய்யும். கோழிகளில் உள்ள நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படும். கழிவிலுள்ள பாஸ்பரஸ், நீரிலுள்ள பாசிகளின் வளர்ச்சியைக் கூட்டும். எனவே, நீரிலுள்ள ஆக்ஸிஜன், பாசிகளால் ஈர்க்கப்படுவதால், நீரிலுள்ள மீன்கள் மூச்சுக் காற்றின்றி இறக்க நேர்கிறது.
கோழிக்கழிவை உரமாக்குதல்
விவசாய நிலத்தில் பயன்படுத்தும் முன்பு கோழியெரு மற்றும் ஆழ்கூளப் பொருள்களை மட்கச் செய்ய வேண்டும். மட்கிய உரம் என்பது, கழிவிலுள்ள கரிமப் பொருள்கள் இயற்கையாகச் சிதைந்து உரமாக மாறுவதாகும். கோழிக்கழிவில் நைட்ரஜன் 65.5%, பாஸ்பரஸ் 68.5%, பொட்டாசியம் 83.5% உள்ளன. இவற்றை முறையாக மட்கச் செய்தால், பாஸ்பரசும் நைட்ரஜனும் கரிம நிலையில் மாற்றமடைந்து சிறந்த உரமாகும். கோழியெருவில் நிறைந்துள்ள பாஸ்பரஸ் பயிர்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
கோழிக்கழிவு பெரும்பாலும் மண்புழு உரமாக மாற்றப்படுகிறது. கோழி இறக்கை பலவினையாக்கல் மூலம் உயிர்வழிச் சிதைவடையும் நெகிழியாக மாற்றப்படுகிறது. அதாவது, இறக்கையில் உள்ள காரட்டின் என்னும் புரதத்தைத் தூளாக்கி நெகிழியாக மாற்றப்படுகிறது. இது, கோப்பை, தட்டு மற்றும் வீட்டுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.
கோழிக்கழிவைச் சேகரிக்கும் முறை
கோழிக்கழிவை முறையாகச் சேகரித்து வைத்தால், சத்திழப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைத் தடுக்கலாம். மேலும், இதில் உருவாகும் வெப்பத்தால் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இறந்து விடும். எனவே, கழிவைச் சேகரித்து நெகிழிப் பையால் நன்கு மூடி வைக்க வேண்டும். இந்தக் கழிவு, உலர் தீவனப்பயிர், மேய்ச்சல் நிலம் மற்றும் நைட்ரஜனைப் பயன்படுத்தும் பயிர்களுக்கு நல்ல உரமாகும்.
எரிவாயு, மீத்தேன், மின்சாரம் தயாரித்தல்
பண்ணையிலிருந்து பெறப்படும் உயிர் வாயுக்கள், எரிசக்தி ஆற்றல் மூலமாக இயந்திரத்தின் எரிபொருளாகி, மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. நவீனத் தொழில் நுட்பங்கள் மூலம், கோழியெரு மற்றும் ஆழ்கூளப் பொருள்களின் கரிமப் பொருள்களிலிருந்து உயிர் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. பண்ணைக் கழிவுநீரைக் காற்றோட்டம் இல்லா நிலையில் வைத்தால், உயிர் எரிவாயுக்கள் வெளியேறும். இவற்றில் மீத்தேனும் ஒன்றாகும். காற்றோட்டம் இல்லா நிலையில், திடக்கழிவில் உள்ள கரிமப் பொருள்களில் இருந்தும் மீத்தேன் அதிகளவில் வெளியேறும்.
இந்த மீத்தேன் வாயு சுத்திகரிக்கப்பட்டு, புதுப்பிக்கும் ஆற்றலாகப் பயன்படுகிறது. மீதமுள்ள கழிவு உரமாகப் பயன்படுகிறது. ஆழ்கூளப் பொருள்களும் மீத்தேன் உற்பத்தியில் பயன்படுகிறது. ஆழ்கூளப் பொருள்களின் ஆற்றல் மதிப்பு அவற்றின் ஈரப்பதத்தைப் பொறுத்தது. உலர்ந்த ஆழ்கூளப் பொருள்களிலிருந்து 9-13.5% மெகாஜூல் ஒரு கிலோ என்னுமளவில் எரியாற்றல் கிடைக்கிறது. இது நிலக்கரியின் எரிசக்தியில் பாதியாகும்.
இரத்தம் மற்றும் எலும்பிலிருந்து மீத்தேன் வாயு விரைவாகக் கிடைக்கும். கோழியிறைச்சிக் கழிவிலிருந்து மீத்தேன் உருவாக அதிக நேரமாகும். ஏனெனில், அதில் நீண்ட சங்கிலிக் கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளன. கோழியின் இரத்தம் மற்றும் எலும்பில் அதிகளவில் புரதம் மற்றும் கொழுப்பு இருப்பதால், மீத்தேன் வாயு கூடுதலாகக் கிடைக்கும். வெப்பம் மற்றும் நொதிச் சிகிச்சை செய்யப்பட்ட கழிவிலிருந்து 37-51% மீத்தேன் கிடைக்கும்.
கிருமியுள்ள நீரைச் சுத்திகரித்தல்
கோழிப்பண்ணையின் ஆழ்கூளப் பொருள்களில் கரித்தூளைத் தயாரிக்கலாம். இந்தக் கரித்தூள், கன உலோகச் சிகிச்சை மற்றும் கிருமியுள்ள நீரைச் சுத்திகரிக்கப் பயன்படும். மற்ற கரித்தூள்களை விட இந்தக் கரித்தூள் திறன் வாய்ந்தது.
இறந்த கோழிகளின் பயன்பாடு
கோழி இறக்கையில் தோராயமாக 91% புரதம், 1% கொழுப்பு, 8% நீர், சீரின் என்னும் அமினோ அமிலம் 16% இருக்கும். அதிகளவில் புரதம் இருப்பதால், கோழி இறக்கைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கரிம உரமாகவும், துணைத் தீவனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். இறந்த கோழிகளை ஆழமான குழியில் போட வேண்டும். அவற்றை எரிப்பதே சிறந்தது. மேலும், அவற்றை மட்கிய உரமாகவும், உறைநிலையில் வைத்து, கொழுப்பை நீக்கித் தீவனமாகவும் மாற்றலாம்.
திடக்கழிவைத் தீவனமாக்குதல்
இறந்த கோழிகளில் உள்ள கொழுப்பு, பல்வேறு வெப்ப நிலைகளில் நீக்கப்படுகிறது. பொதுவாக 133 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 20 நிமிடம் வைக்கப்படுகிறது. கிருமியால் இறந்த கோழிகளுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இந்தச் செய்முறை ரெண்டரிங் எனப்படுகிறது. இதிலிருந்து எலும்பு மற்றும் இறைச்சித் தீவனம் தயாரிக்கலாம். அல்லது உரமாக்கிப் பயன்படுத்தலாம்.
முட்டைக்கோழிக் கழிவில் 37-40% நைட்ரஜன் புரதச் சத்தாக உள்ளது. 40- 60% நைட்ரஜன் புரதமற்ற நைட்ரஜன் சத்தாக உள்ளது. கோழிக்கழிவைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். இக்கழிவை, இறைச்சி மாடுகளின் தீவனத்தில் 20-25% மற்றும் கறவை மாடுகளின் தீவனத்தில் 17% சேர்க்கலாம். இதனால் மாடுகளின் உண்ணும் திறன், பாலுற்பத்தி, பாலிலுள்ள கொழுப்பின் அளவு பாதிப்பதில்லை.
எனவே, கோழிக்கழிவை முறையாகப் பயன்படுத்தினால், சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதோடு, நல்ல இலாபத்தையும் ஈட்டலாம்.
மரு. ப.சுமிதா,
கு.சுகுமார், ம.அர்த்தநாரீஸ்வரன், செ.சரவணன்,
கால்நடை நுண்ணுயிரியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.
சந்தேகமா? கேளுங்கள்!