சிறுதானியப் பயிர்களில் அதிக மகசூலைத் தரும் உத்திகள்!

சிறுதானியப் பயிர் 162529

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021

ன்று அரிசியும் கோதுமையும் மனித இனத்தின் முக்கிய உணவுகளாக இருப்பதைப் போல, பழங்காலத்தில் சிறுதானியங்கள் தான் அன்றாட உணவுகளாக இருந்து வந்தன. அன்றைய மக்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்ந்ததற்குச் சிறுதானியங்கள் தான் காரணம். சிறுதானியப் பயிர்கள் எனப்படும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியன, எல்லாக் காலத்திலும் எல்லா மண்ணிலும் வளரும்.

இந்தப் பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை உண்டு. இவை குறுகிய காலத்தில் வளரும் பயிர்களாகும். அதாவது, 70-90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். வரகும் கேழ்வரகும் 100-120 நாட்களில் அறுவடைக்கு வரும். குறைந்த நீரில் நிறைந்த மகசூலையும் இலாபத்தையும் தரக்கூடியவை சிறுதானியப் பயிர்கள்.

பருவம்

பருவத்தே பயிர் செய், பட்டம் தப்பினால் நட்டம் என்பது பழமொழி. சரியான பருவத்தில் பயிரிடப்படாத பயிர் நட்டத்தையே தரும் என்பது இதன் பொருள். சிறுதானியப் பயிர்கள் பெரும்பாலும் மானாவாரியாகவே பயிரிடப்படுகின்றன. எனவே, மழைப் பருவமான காரீப் பருவம், அதாவது, ஜூன்-செப்டம்பர் காலம் பயிரிட ஏற்றது. குறிப்பாக, முன்பட்டம் என்று சொல்லக்கூடிய ஆடிப் பட்டத்தில் பயிரிடும் போது, பூச்சி, நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும்; நல்ல மகசூல் கிடைக்கும். இறவையில் பயிரிட, பிப்ரவரி-மார்ச் காலம் உகந்தது.

நிலம் தயாரித்தல்

கோடையுழவு: பயிரில்லாத காலத்தில் கோடையுழவு செய்வதால், கோரை போன்ற கட்டுப்படுத்த முடியாத களைகளை அழிக்கலாம். பூச்சி மற்றும் நோய்களை உருவாக்கும் காரணிகளைக் கட்டுப்படுத்தலாம். மண்ணின் நீர்ப் பிடிப்புத் திறனைக் கூட்டலாம். மண் இறுக்கத்தை அகற்றலாம்.

பசுந்தாள் உரங்களைப் பயிரிடுதல்: பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு, கொள்ளு போன்றவற்றைப் பயிரிட்டால், களைகள் கட்டுப்படும். மண் இறுக்கம் குறைந்து பொலபொலப்புத் தன்மை அதிகமாகும். மண்வளம் கூடும்.

பயிரிடும் முன்: வரப்புகளை ப்ரஸ் கட்டர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதனால், முந்தைய பயிரில் இருந்த பூச்சிகளைப் புதுப் பயிருக்கு வர விடாமல் தடுக்கலாம். எக்டருக்கு 12.5 டன் வீதம் தொழுவுரத்தை இட வேண்டும். இதனால், மண் இறுக்கம் குறையும், நீர்ப்பிடிப்புத் தன்மை கூடும். நுண்ணுயிர்களின் இயக்கம் அதிகமாகி, மண்ணுக்குள் நல்ல காற்றோட்டம் நடக்கும்.

விதைகள் சிறியதாக இருப்பதால், நல்ல முளைப்புத் திறன் கிடைக்க, நிலத்தைப் புழுதி புரள உழ வேண்டும். நிலத்தின் சரிவுக்கு ஏற்ப, 10-20 மீட்டர் அளவில் பாத்திகளை அமைத்து விதைக்கலாம்.

விதை

விதை பாதி வேலை பாதி என்னும் பழமொழியின் மூலம், தரமான விதைகள் இருப்பின், சாகுபடியில் பாதி வேலை முடிந்து விடும் என்பதை அறிய முடிகிறது. மற்ற பயிர்களில் இருப்பதை விடச் சிறுதானிய இரகங்கள் குறைவாகவே உள்ளன. வேளாண்மைத் துறை அல்லது வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் தரமான விதைகள் கிடைக்கும். விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இரசாயனப் பொருள்களில் கலந்தும், உயிர் உரங்களில் கலந்தும் என, இரண்டு முறைகளில் விதைகளை நேர்த்தி செய்யலாம். எளிமையான விதை நேர்த்தி முறையைக் கையாண்டால் முளைப்புத் திறன் கூடும்; நாற்றுகள் வீரியமாக வளரும்; வளர்ச்சி சிறப்பாக இருக்கும்; வறட்சியைத் தாங்கி வளரும்.

விதைப்பு

விதைப்புக் கருவி மூலம் விதைக்கலாம். பெரும்பாலும் சிறுதானிய விதைப்பு, தூவுதல் முறையில் நடைபெறுகிறது. இதனால், நீருக்காகவும் உரத்துக்காகவும் பயிர்களிடையே போட்டி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வரிசை விதைப்பை மேற்கொள்ள வேண்டும். வரிசை இடைவெளி 25-30 செ.மீ., பயிர் இடைவெளி 10 செ.மீ. இருக்க வேண்டும்.

பயிர்களைக் களைதல்

சேர இருந்தால் செடியும் பகை என்பது பழமொழி. அதாவது, பயிர்கள் நெருக்கமாக இருப்பது கெடுதலைத் தரும். அதனால், விதைத்த 12-15 நாளில் பயிர்களைக் களைதல் அவசியமாகும். இதனால், நல்ல காற்றோட்டம் மற்றும் சூரியவொளி பயிர்களுக்கு நன்கு கிடைக்கும். எனவே, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் குறையும்.

ஊடுபயிர்

ஊடுபயிர் செய்வதால், உறுதியாக விளைச்சல் கிடைக்கும். அதிக இலாபம் கிடைக்கும். மண்வளம் மேம்படும். எனவே, சிறுதானியப் பயிருக்குள், துவரை, அவரை, எள், பேயெள், உளுந்து, வேர்க்கடலை, கடுகு ஆகியவற்றை ஊடுபயிராக இடலாம்.

உரமிடுதல்

விதைப்பதற்கு முன், ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுரத்தை நிலத்தில் இட வேண்டும். மண்ணில் கலக்கக் கூடாது. மண்ணாய்வு செய்து உரமிடுவது நல்லது. சாமை, வரகு, தினை, பனிவரகு மற்றும் குதிரைவாலிப் பயிருக்கு எக்டருக்கு 44:22:0 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். இராகிக்கு, எக்டருக்கு 60:30:30 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும்.

மணிச்சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை இரண்டாகப் பிரித்து இரண்டு முறை, அதாவது, விதைத்த 20 மற்றும் 40 நாளில் மேலுரமாக இட வேண்டும்.

களையெடுத்தல்

களை பிடுங்காப் பயிர் கால் பயிர் என்னும் பழமொழி கூறுவதைப் போல, களையெடுக்காத நிலத்தில் கால் பகுதி விளைச்சல் மட்டுமே கிடைக்கும். அதனால், விதைத்த இருபது நாளில் முதல் களையையும், நாற்பது நாளில் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும். பல்ராம் களைக்கருவி, சைக்கிள் களைக்கருவி, பவர் களைக்கருவி மூலம் களையெடுக்கலாம்.

பாசனம்

மானாவாரி நிலங்களில் சிறுதானியப் பயிர்கள் விளைவதற்கு 350-400 மி.மீ. மழை பெய்தால் போதும். ஆனால், முக்கியப் பருவங்களில் நீர்ப் பற்றாக்குறை இருந்தால் மகசூல் இழப்பு ஏற்படும். எனவே, முளைப்புப் பருவம், பூக்கும் பருவம் மற்றும் மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால், பாசனம் செய்ய வேண்டும்.

அறுவடை

வயதை வைத்தும், புறத்தோற்றத்தை வைத்தும் அறுவடை செய்யலாம். நன்கு விளைந்து காய்ந்த கதிர்களை அறுவடை செய்ய வேண்டும். பிறகு, களத்தில் காய வைத்து அடித்துத் தானியத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து சணல் அல்லது துணிப் பைகளில் இட்டுச் சேமிக்க வேண்டும்.

கம்பைன் அறுவடை இயந்திரம் மூலமும் அறுவடை செய்யலாம். பாடு அறிந்து பட்டால், பாழும் காடும் விளையும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, முறையான செயலறிந்து பயிரிட்டால் நல்ல விளைச்சலைப் பெறலாம்.


சிறுதானியப் பயிர் DR.K.SATHIYA e1636119761638

முனைவர் கு.சத்தியா,

முனைவர் அ.நிர்மலகுமாரி, முனைவர் கி.ஆனந்தி, முனைவர் மா.இராஜேஸ்,

வெ.மணிமொழிச்செல்வி, சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்,

திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading