கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019
நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம். அதைப் போல மண்வளத்துக்கும் பயறு வகை சாகுபடி முக்கியம். சிறு விவசாயிகளாலும், வளமற்ற மானாவாரியிலும் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன. ஆனால் தானியப் பயிர்களை விடப் பயறு வகைகளில் கிடைக்கும் இலாபம் அதிகம். மேலும், இதற்குக் குறைந்த நீரும், ஆட்களும் போதும். இந்தப் பயறு வகைகளை உணவுக்காக இல்லாமல் விதைக்காகப் பயிரிட்டால், மகசூலும் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும்.
பொதுவாக, சாகுபடிக்குத் தேவையான விதைகள் உற்பத்திக்கு எனச் சிறப்பு உத்திகள் உள்ளன. இவை உணவுப்பொருள் உற்பத்திக்கான உத்திகளில் இருந்து மாறுபட்டவை. விதைப்பு முதல் அறுவடை வரையில், உயரிய நுட்பங்கள் மூலம், தகுந்த ஆய்வளார்களின் மேற்பார்வையில் விதைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே விதை உளுந்து உற்பத்தி முறைகளைத் தெரிந்து கொள்வோம்.
நிலத்தேர்வு
இந்த நிலத்தில் இதற்கு முன், சான்று பெறாத அல்லது வேறு இரகத்தைப் பயிரிட்டிருக்கக் கூடாது. ஏனெனில், நிலத்தில் தங்கியுள்ள விதைகள் இப்பருவத்தில் முளைத்துக் கலவன்களாக மாறிவிடும். எனவே, அத்தகைய நிலத்தைத் தவிர்த்துவிட வேண்டும். நல்ல வடிகாலைக் கொண்ட செம்மண் மற்றும் வண்டல் மண் நல்ல திரட்சியான விதைகளைத் தரும். இத்தகைய நிலத்தை 2-3 முறை கல்ட்டிவேட்டர் மூலமும், கடைசியாக ரோட்டவேட்டர் மூலமும் நன்கு உழ வேண்டும். பிறகு, பாசனத்துக்கு ஏற்ற வகையில் பாத்திகளை அமைக்க வேண்டும்.
பயிர் விலகு தூரம்
விதை உற்பத்திக்கான நிலத்தை பிற இரகப் பயிரிலிருந்து தனிமைப்படுத்தும் தூரமே பயிர் விலகு தூரமாகும். உளுந்து தன் மகரந்தச் சேர்க்கையில் விளையக் கூடியது என்றாலும், தேனீக்கள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இனக்கலப்பைத் தவிர்க்க, குறைந்தது 5 மீட்டர் இடைவெளி இந்நிலம் இருத்தல் அவசியம்.
பருவமும் உரமும்
ஆடி மற்றும் மாசிப்பட்டம் மிகவும் ஏற்றது. பூக்கும் போதும், காய்கள் முற்றும் போதும், அதிக மழையோ வெய்யிலோ இருக்கக் கூடாது. ஏக்கருக்கு 10 வண்டி தொழுவுரம், 20 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் மற்றும் 10 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும்.
விதையளவு
ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவை. விதைப்பயறு உற்பத்திக்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஆதார விதை உற்பத்திக்கு வல்லுநர் விதைகளையும், சான்று விதை உற்பத்திக்கு ஆதார விதைகளையும் பயன்படுத்த வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 350 மில்லி லிட்டர் வீதம் 0.5% துத்தநாக சல்பேட் கரைசலை எடுத்து, அதில் விதைகளை மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து, நிழலிலும் அடுத்து வெய்யிலிலும் நன்கு உலர்த்த வேண்டும். பின்பு, ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் வீதம் பாலிமர் இராசயன ஒட்டும் கலவையை 5 மில்லி நீரில் கரைத்து விதைகளில் நன்கு ஒட்டுமாறு கலக்க வேண்டும். அதன்பின், ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி வீதம் இமிடாகுளோபிரிட் அல்லது டைமீதோயேட்டில் நேர்த்தி செய்ய வேண்டும்.
அடுத்து, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மா விரிடியில் நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, ஒரு கிலோ விதைக்கு 20 கிராம் ரைசோபியம், 120 கிராம் அசோபாஸ் வீதம் எடுத்து நேர்த்தி செய்ய வேண்டும். இப்படி நேர்த்தி செய்த விதைகளை மறுபடியும் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இத்தகைய நேர்த்திகளால், நாற்றுகள் திடமாக வறட்சியைத் தாங்கி வளரும். மேலும், 30 நாட்கள் வரையில் பூச்சித் தாக்குதல்களில் இருந்து விதைகளைக் காக்கலாம். மகசூலும் 5% வரையில் கூடும்.
பாசனம்
விதை உற்பத்திப் பயிருக்குத் தகுந்த பருவத்தில் பாசனம் செய்தல் அவசியம். விதைப்புக்குப் பிறகு மூன்றாம் நாள் உயிர் நீரும், அடுத்து மண்ணின் தன்மைக்குத் தகுந்தும் பாசனம் தேவை. பூக்கும் போதும் காய்க்கும் போதும் தகுந்த நீர் நிர்வாகம் முக்கியமாகும்.
வளர்ச்சியூக்கி
நல்ல விதைகளை வளமான நிலத்தில் விதைத்தால், பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான இரசாயனப் பொருள்கள் இயற்கையாக உற்பத்தியாகி, வளர்ச்சி மற்றும் மகசூலைப் பெருக்கும். இப்பொருள்கள் குறைந்தால், பயிரில் பல வினையியல் மாற்றங்கள் ஏற்பட்டு 40-80% பூக்கள் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதைத் தவிர்க்க, செயற்கை வளர்ச்சியூக்கிகளைத் தெளிக்கலாம்.
போதிய நீரின்மை மற்றும் வெப்பத்தால், மானாவாரிப் பயிர்களில் இலை, பூ, பிஞ்சு, காய்கள் அதிகமாக உதிரும். இதைத் தடுக்க, பயறு வகைகளுக்கு ஏற்ற வளர்ச்சி ஊக்கிகளைத் தெளிக்க வேண்டும். இதனால், ஒளிச்சேர்க்கை மூலம் இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்து, உடனே மணிகளை அடைந்து விடும். பூக்கள் அதிகமாகி நன்கு விளையும்.
உளுந்தில் 40 பி.பி.எம் என்.ஏ.ஏ., அதாவது, 4 லிட்டர் நீருக்கு 4.5 மில்லி பிளானோபிக்ஸ் வீதம் கலந்து பயிரின், 30, 40 ஆகிய நாட்களில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இலைவழி உரம்
தரமான விதை உற்பத்திக்கு போதிய ஊட்டம் அவசியம். இதற்கு நிலத்திலிருந்து கிடைக்கும் சத்துகள் மட்டும் போதாது. இலை மூலமும் அளிக்க வேண்டும். இந்தச் சத்துகள் வளரும் விதைகளை எளிதில் போய்ச் சேர்ந்து சிறந்த விதை உற்பத்திக்கு வழி வகுக்கும்.
இரண்டு சத டிஏபி கரைசல்
பயிர்கள் பூக்கும் போதும் அடுத்து 15 நாட்கள் கழித்தும் இந்தக் கரைசலை மாலையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நான்கு கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் நீரில் ஒருநாள் முழுக்க ஊற வைத்து மறுநாள் தெளிந்த கரைசலுடன் 190 லிட்டர் நீரைக் கலந்து 200 லிட்டராக ஆக்கினால், ஒரு ஏக்கரில் ஒருமுறை தெளிக்கலாம். இதனால், பயிருக்குத் தேவையான தழை மற்றும் மணிச்சத்து இலைகள் மூலம் உடனே கிடைக்கும். இதனால் 50% வரை விளைச்சல் கூடும்.
ஒரு சத யூரியாக் கரைசல்
தழைச்சத்து அதிகமாகத் தேவைப்பட்டால் 2 கிலோ யூரியாவை ஊறவைத்துத் தெளிக்கலாம். நீரில் யூரியா எளிதில் கரைந்து விடும் என்பதால் நாள் முழுக்க ஊறவைக்கத் தேவையில்லை.
பயறு அதிசயம்
டிஏபி, யூரியா, பொட்டாஷ் மற்றும் பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கிக்குப் பதிலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான பயறு அதிசயம் என்னும் சத்துக் கலவையை, 200 லிட்டர் நீருக்கு ஒரு பொட்டலம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
இலைவழி ஊட்டத்தின் பயன்கள்
பயறு வகைகளில் புரதம் அதிகமாக இருப்பதால், இந்தப் புரத மாற்றத்துக்கு மணிச்சத்து மிகவும் அவசியம். இது நிலத்திலிருந்து கிடைப்பதைவிட இலை மூலம் எளிதில் கிடைக்கிறது. மேலும், பயிர்கள் பூத்த பிறகு, வேர்களில் சத்துகளை எடுக்கும் தன்மையும், நிலத்திலிருந்து சத்துகள் கிடைப்பதும் குறைந்து விடும். எனவே, இலை மூலம் கொடுக்கப்படும் தழைச்சத்து, மணிச்சத்துள்ள டிஏபி கரைசல் அல்லது பயறு அதிசயம் நல்ல பயனை அளிக்கிறது.
பூத்த பிறகு இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தே விதைகளில் சேமிக்கப்படுகிறது. எனவே, டிஏபி மற்றும் யூரியா மூலம் கிடைக்கும் தழைச்சத்து, இலைகளைப் பச்சையாக வைத்திருந்து அதிக மாவுச்சத்து உற்பத்திக்கு உதவுகிறது. பயிரில் பூச்சி, நோயெதிர்ப்புச் சக்தி மற்றும் மணியின் எடையைக் கூட்ட பொட்டாஷ் உதவுகிறது. பிளானோபிக்ஸ், பூ, பிஞ்சுகள் உதிர்வதைத் தடுத்து அதிகக் காய்கள் பிடிக்க உதவுகிறது.
பயிர்ப் பாதுகாப்பு
உளுந்துப் பயிரில் தண்டு ஈக்கள், சாற்றை உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்தால், ஏக்கருக்கு 200 மில்லி மித்தைல் டெமட்டான் அல்லது 200 மில்லி டைமீதோயேட்டை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மஞ்சள் தேமல் நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 மில்லி மித்தைல் டெமட்டான் வீதம் தெளிக்கலாம். துருநோய் அல்லது இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 400 கிராம் மாங்கோசோப் அல்லது ஒரு கிலோ நனையும் கந்தகம் வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
கலவன்களை அகற்றுதல்
கலவன்கள் விதைப் பயிரின் இனத்தூய்மையைப் பாதிக்கும். எனவே, பூக்கும் முன், பூக்கும் போது, காய்க்கும் போது, அறுவடைக்கு முன் ஆகிய நான்கு நிலைகளில் கலவன்களை அகற்ற வேண்டும். செடிகள் பூப்பதற்கு முன், உயர வேறுபாடு, தண்டின் நிறம், வேறுபட்ட செடிகள், முந்திப் பூக்கும் செடிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். பூக்கும் போது, பூவின் நிறம் மற்றும் அளவு போன்றவற்றைக் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும். மேலும், பூக்காத செடிகள், மலட்டுத் தேமல் நோயுள்ள செடிகளையும் நீக்க வேண்டும். காய்ப்பின் போது, காய்களின் நிறம், அகலம், நீளம், காய்களில் உள்ள உரோமங்கள் ஆகியவற்றைக் கொண்டு கலவன்களை அகற்ற வேண்டும்.
அறுவடை
காய்கள் நன்கு முற்றியதும் அறுவடை செய்ய வேண்டும். தாமதித்தால் காய்கள் வெடித்து விதைகள் சிதறி விடும். அறுவடை செய்த நெற்றுகளை இண்டு நாட்களுக்கு நிழலில் நன்கு உலர்த்தி, மூங்கில் கழியால் அடித்து அல்லது இயந்திரம் மூலம் விதைகளைப் பிரிக்கலாம். பிறகு, காற்றில் தூற்றி, கல், மண், தூசியை நீக்கி விதைகளைக் காய வைக்க வேண்டும். தரமான விதைகளைப் பெற 2.36 மி.மீ. வட்டக்கண் சல்லடையால் சுத்தம் செய்து தரமான விதைகளையே சேமிக்க வேண்டும்.
விதைச் சேமிப்பு
ஈரப்பதத்தைப் பொறுத்து விதைகளின் தரம் மாறுபடும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் முளைப்புத் திறனை விதைகள் விரைவில் இழந்து விடும். குறைந்த காலச் சேமிப்புக்கு, விதைகளை 9% ஈரப்பதத்தில் காய வைத்து துணிப்பை அல்லது சாக்குப் பைகளில் சேமிக்கலாம். நெடுநாள் சேமிப்புக்கு, விதைகளின் ஈரப்பதத்தை 7-8% அளவில் குறைத்து, நெகிழித்தாள் உறையுள்ள பைகளில் சேமிக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் வீதம் கலந்து, துணிப் பைகளில் இட்டு வைத்தால், ஒன்பது மாதங்கள் வரை முளைப்புத் திறன் பாதிக்காமல் இருக்கும்.
முனைவர் கா.பரமேஸ்வரி,
முனைவர் கி.ஆனந்தி, முனைவர் ப.பரசுராமன், சிறுதானிய மகத்துவ மையம்,
அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!