My page - topic 1, topic 2, topic 3

உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

ளுந்தும் பாசிப்பயறும் 60-75 நாட்களில் விளையும். தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்றன. பாசன நிலத்தில் தனிப்பயிராக, மானாவாரி நிலத்தில் தனிப்பயிர் மற்றும் தானியப் பயிர்களுடன் ஊடுபயிராக, ஆற்றுப்பாசன மாவட்டங்களில் நெல் தரிசில் பயிரிடப்படுகின்றன.

மிகக் குறுகிய நாட்களில் விளைவது, காற்று மண்டலத் தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவது, மண்ணரிப்பைத் தடுத்து நிலவளத்தை மேம்படுத்துவது ஆகியவற்றால், இப்பயிர்கள் தமிழ்நாட்டின் அனைத்து வகையான பயிர்ச் சுழற்சித் திட்டங்கள் மற்றும் சாகுபடியில் முக்கியப் பயிர்களாக உள்ளன. அறுவடைக்குப் பின் கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுகின்றன.

உளுந்து, பாசிப்பயறில், 20-26% புரதமும், 50-60% மாவுச்சத்தும், 1-1.5% கொழுப்பும் உள்ளதால் மனிதர்களின் அன்றாட உணவு முறைகளில் முக்கியமாகப் பயன்பட்டு வருகின்றன.

உகந்த காலநிலைகள்

தமிழ்நாட்டில் சித்திரைப் பட்டம், ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் தைப்பட்டத்தில் பயிரிடப்படுகின்றன. இவற்றுக்கு ஒருநாளைக்கு 10-12 மணி நேர வெளிச்சம் தேவை. 20-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு வளரும். மேலும், மேக மூட்டமும் பனிப்பொழிவு இருக்கக் கூடாது. இப்பயிர்கள் வறட்சியைத் தாங்கும் திறனால், ஆண்டுக்கு 650 மில்லி மீட்டர் மற்றும் அதற்கும் குறைவாக மழையுள்ள பகுதிகளிலும் நன்கு வளர்ந்து அதிக விளைச்சலைத் தரும்.

பருவம் மற்றும் இரகங்கள்

உளுந்து: ஆடிப்பட்டமான ஜுன் -ஆகஸ்ட்டில்,  டி.9, வம்பன் 3, 4, 5, 7, கோ.5, 6 ஆகிய இரகங்கள், புரட்டாசிப் பட்டமான செப்டம்பர் – நவம்பரில், வம்பன் 3, 4, 5, 6, கோ.6, அருப்புக்கோட்டை 1 ஆகிய இரகங்கள், மார்கழி மற்றும் தைப்பட்டமான டிசம்பர் ஜனவரியில், இறவையில், வம்பன் 3, 4, 5, 6, கோ.6, திண்டிவனம் 1 ஆகிய இரகங்கள் மற்றும் சித்திரைப் பட்டமான ஏப்ரல் மேயில், டி.9, வம்பன் 3, 4, ஏ.டி.ட்டி 5 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம். ஜனவரியில் நெல் தரிசில் ஏ.டீ.ட்டி 3, 5 ஆகிய இரகங்களை விதைக்கலாம்.

பாசிப்பயறு: ஆடிப்பட்டமான ஜூலை- ஆகஸ்ட்டில் கே.எம்.2, கோ.6, 7, 8, வம்பன் 2, 3, விரிஞ்சிபுரம் 1 ஆகிய இரகங்கள், புரட்டாசிப் பட்டமான செப்டம்பர்- நவம்பரில் கோ.6, 7, 8, வம்பன் 3, விரிஞ்சிபுரம் 1 ஆகிய இரகங்கள், மார்கழிப் பட்டமான டிசம்பர் ஜனவரியில் இறவையில், வம்பன் 2, 3 ஆகிய இரகங்கள் மற்றும் சித்திரைப் பட்டமான ஏப்ரல் மேயில் இறவையில், கோ.6, 7, 8 ஆகிய இரங்களைப் பயிரிடலாம். ஜனவரியில் நெல் தரிசில் ஏ.டி.ட்டி.3 இரகத்தை விதைக்கலாம்.

விதை நேர்த்தி

தனிப்பயிராக விதைக்க எக்டருக்கு 20 கிலோ விதை தேவை. ஊடுபயிராக விதைக்க எக்டருக்கு 10 கிலோ விதை போதும். நெல் தரிசில் விதைக்க எக்டருக்கு 25 கிலோ விதை தேவைப்படும். இந்த விதைகளை நேர்த்தி செய்து விதைத்தால் அதிக மகசூலை எடுக்கலாம். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டாசிம் அல்லது திரம் பூசணக்கொல்லியுடன் கலக்க வேண்டும். இல்லையெனில் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரஸன்ஸ் உயிரியல் பூச்சிக் கொல்லியுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.

ரைசோபிய விதை நேர்த்தி

அடுத்து, ரைசோபியம் உயிர் உரத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிரியல் பூச்சிக்கொல்லியும் உயிர் உரங்களும் ஒன்றுடன் ஒத்துப்போகும் என்பதால், உயிரியல் பூச்சிக்கொல்லியில் நேர்த்தி செய்த விதைகளை, உடனே ரைசோபியத்தில் கலந்து நேர்த்தி செய்யலாம். ஆனால், பூசணக் கொல்லியும், உயிர் உரங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகாது என்பதால், பூசணக்கொல்லியில் நேர்த்தி செய்த விதைகளை, 24 மணி நேரம் கழித்துத் தான் ரைசோபியத்தில் கலக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், உளுந்துக்காக சி.ஆர்.யு. 7 அல்லது பி.எம்.பி.எஸ். 47 என்னும் ரைசோபியமும், பாசிப்பயறுக்காக சி.ஆர்.எம். 6 உயிர் உரமும் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட ரைசோபியத்துடன் பாஸ்போபாக்டீரியா மற்றும் பி.ஜி.பி.ஆர். நுண்ணுரத்தில் தலா ஒரு பொட்டலத்தைச் சேர்த்து, நன்கு ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்த கலவையில் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும். இந்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

பயிர்களுக்குத் தேவையான நுண்ணுரத் தேவையைக் குறைத்துக் கொள்ள நுண்ணுயிர் நேர்த்தியுடன், நுண்ணுரத்தையும் சேர்த்து விதை நேர்த்தி செய்யலாம். நுண்ணுர விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு முறையே துத்தநாகம் 4 கிராம், மாலிப்டினம் 1 கிராம், கோபால்ட் 0.5 கிராம் வீதம் எடுத்து, உயிர் உரங்களுடன் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

உர நிர்வாகம்

மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரமாக இட்டால், கந்தகச்சத்தைத் தனியாக இடத் தேவையில்லை. ஆனால், டிஏபியை இட்டால், பயிருக்குத் தேவையான கந்தகச்சத்தை ஜிப்சமாக இட வேண்டும்.

விதைப்பு

இறவையில் 30×10 செ.மீ. இடைவெளியிலும், மானாவாரியில் 25×10 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும். நெல் தரிசில் பயிரிடுவதாக இருந்தால், நெல் அறுவடைக்கு 5-10 நாட்களுக்கு முன்பே விதைகளை விதைக்க வேண்டும். விதைகள் நன்கு முளைத்துச் சீராக வளர்வதற்கு ஏற்ற மிதமான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீர் நிர்வாகம்

உளுந்தும் பாசிப்பயறும் ஓரளவுக்கு வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர்களாகும். இருப்பினும், இறவையில் பயிரிடும் போது பாசனம் அவசியம். எனவே, விதைகள் சீராக முளைக்க விதைப்பு நீரும் அடுத்து மூன்றாம் நாள் உயிர்நீரும் கொடுக்க வேண்டும். பயிரின் வளர்ச்சிக் காலத்தில், காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர் கட்ட வேண்டும்.

பாசன வசதி குறைவாக உள்ள பகுதிகளில், செடிகள் பூக்கும் போதும், காய்கள் வளர்ச்சியடையும் போதும் பாசனம் செய்தால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். பயிர் வளர்ச்சிப் பருவத்தில் வறட்சியாக இருந்தால் 2% பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பிபிஎம் போரான் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும். எந்த நிலையிலும் நிலத்தில் நீர் தேங்கியிருக்கக் கூடாது.

களை நிர்வாகம்

உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடியில் களைக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். விதைப்பிலிருந்து 4-5 வாரங்கள் வரையில் களைகள் இருக்கக் கூடாது. விதைத்த மூன்றாம் நாள் பென்டிமெத்தலின் களைக்கொல்லியை எக்டருக்கு 3.3 லிட்டர் அளவில் 500 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம், விசிறித் தெளிப்பு முறையில் தெளிக்கலாம்.

களைக்கொல்லியைத் தெளித்த பிறகு பாசனம் செய்ய வேண்டும். விதைத்த 20-25 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். நிலத்தில் புல்வகைக் களைகள் நிறைய இருந்தால், குயிசிலோபாப் ஈத்தைல் மருந்தை, எக்டருக்கு 400 மில்லி வீதமும், அகன்ற இலைக் களைகள் இருப்பின் இமாஸ்திபயர் மருந்தை, எக்டருக்கு 400 மில்லி வீதமும் எடுத்து, விதைத்த 15-20 நாட்களில், அல்லது களைகளின் 2-3 இலைப் பருவத்தில் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியை அடிக்காத நிலையில், விதைத்த 15 மற்றும் 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

இலைவழி நுண்ணூட்டம்

காய்கள் அதிகமாகப் பிடிக்கவும் திரட்சியான விதைகள் கிடைக்கவும், இலைவழி நுண்ணூட்டமாக, ஒரு லிட்டர் நீரில் என்ஏஏ 40 மி.கி. மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மி.கி. வீதம் 625 லிட்டர் நீரில் கலந்து செடிகள் பூக்கும் போதும் அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். பயறு ஒன்டர் உரத்தை எக்டருக்கு 5 கிலோ வீதம் எடுத்து, பூக்கும் போது மட்டும் தெளிக்க வேண்டும். அல்லது 2% டி.ஏ.பி. கரைசல் அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 20 கிராம் டி.ஏ.பி. வீதம் கரைத்து, பயிர்கள் பூக்கும் போதும், அடுத்து 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

டி.ஏ.பி. கரைசல் தயாரிப்பு

ஒரு எக்டர் பயறு சாகுபடிக்கு 625 லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தேவை. முதலில் 12.5 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் நீரில் கலந்து பிளாஸ்டிக் வாளியில் ஊற வைக்க வேண்டும். டி.ஏ.பி உரம் கரைவதற்கு ஏதுவாக நன்கு கலக்க வேண்டும். மறுநாள் வாளியின் மேல் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி எடுக்க வேண்டும். இத்துடன் தேவையான அளவில் நீரைச் சேர்த்து 625 லிட்டர் கரைசலைத் தயாரித்து, விசிறி முனையுள்ள கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

பயிர்களில் 90% காய்கள் முற்றியதும், செடிகளை அறுத்து வெய்யிலில் காய வைத்து, கையினால் அல்லது இயந்திரம் மூலம் விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும். பிறகு அவற்றை 12% ஈரப்பதத்துக்கும் குறைவாக இருக்குமாறு நன்கு காய வைத்துச் சாக்குகளில் இட்டு வைக்க வேண்டும்.


முனைவர் பு.மு.சண்முகம்,

முனைவர் வை.ஹரிஹரசுதன், வேளாண்மைக் கல்வி நிறுவனம், 

குமுளுர்-621712, திருச்சி மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks