My page - topic 1, topic 2, topic 3

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

லங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும்.

அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப் போன்ற அமைப்பை ஏற்படுத்துகிறது. நீர்வாழ் தாவரங்கள் அக்வாரியத்தின் முக்கிய அங்கமாகும். இயற்கைச் சூழ்நிலை மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வாழத் தகுதியான சூழ்நிலையை உருவாக்கும் இந்தத் தாவரங்கள், ஒரு சில சத்துகளின் குறையால் பாதிக்கப்படுகின்றன. நீர்வாழ் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகளையும், அவற்றைச் சரி செய்யும் முறைகளையும் காணலாம்.

கரியமில வாயு

நீர்வாழ் தாவரங்கள் வளர்வதில் குறையிருந்தால் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது கரியமில வாயுவாகும். இலைகள் மஞ்சளாக மாறுதல், முடங்கிய வளர்ச்சி மற்றும் வெட்டுப்பட்ட இலைகள் ஆகியன, கரியமில வாயுவின் குறையால் ஏற்படுவன.

நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இவ்வாயு, அடர்த்தியான தாவர வளர்ச்சியைக் கொண்ட அக்வாரியத்தில் ஒரு லிட்டர் நீருக்கு 20-30 மில்லி கிராம் இருக்க வேண்டும். இதன் அளவை 4-6 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சிக்குப் பொட்டாசியம், பாஸ்பரஸ், நைட்ரஜன், மெக்னீசியம் ஆகியன அவசியம்.

நைட்ரஜன்: அம்மோனியம், யூரியா, நைட்ரேட் ஆகிய வடிவங்களில் நைட்ரஜனை இத்தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. நீரிலுள்ள நைட்ரஜனின் அளவானது அதிலுள்ள நைட்ரேட்டை வைத்து அறியப்படுகிறது. ஒரு லிட்டர் நீரில் 10-25 மில்லி கிராம் நைட்ரேட் இருக்க வேண்டும். நைட்ரேட்டின் துல்லிய அளவை, மெக்காரி மற்றும் நகல் முறையில் அறியலாம்.

அறிகுறிகள்: தாவரம் முழுவதும் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாதல். தாவரம் வளர்ச்சியின்றி வெட்டுப்பட்ட இலைகளுடன் இருத்தல். இலைகள் வளராமல் சிறிதாக இருத்தல். தொட்டியில் பாசிகள் பெருகுதல் ஆகியன, நைட்ரஜன் குறைக்கான அறிகுறிகளாகும்.

சரி செய்தல்: நைட்ரஜன் உரங்களைத் திரவ உரங்களுடன் கலந்து அளிக்கலாம். வணிக நோக்கில் கிடைக்கும் நைட்ரஜன் உள்ள உரத்தை இடலாம்.

பாஸ்பரஸ்: நீரிலுள்ள பாஸ்பரஸின் அளவை, அதிலுள்ள பாஸ்பேட்டின் அளவை அறிவதன் மூலம் காணலாம். அறிகுறிகள்: தாவரத்தண்டு அதிவேகமாக வளர்தல், நுனிப்பகுதி வளர்ச்சிக் குன்றியிருத்தல். சில தாவரங்கள் கருமை அல்லது ஊதா நிறத்தில் இருத்தல். நீரில் பாஸ்பரஸ் 0.1மி.கி./லிட்டர் என இருக்க வேண்டும். பாஸ்பேட்டானது இரும்புடன் எளிதாக வினை புரியும்.

சரி செய்தல்: பாஸ்பேட் உள்ள உரத்தை வாரம் ஒருமுறை இட வேண்டும்.

பொட்டாசியம்: நைட்ரஜன் மற்றும் பாஸ்பரசுக்கு அடுத்துத் தாவரங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஊட்டம் பொட்டாசியம். நீரில் இதன் அளவு ஒரு லிட்டருக்கு 5-10மி.கி. அளவில் மட்டுமே இருக்க வேண்டும்.

அறிகுறிகள்: இலைகளில் துளைகள் ஏற்படுதல். இலைத்திசுக்கள் கருகுதல் அல்லது அழுகுதல். முதலில் இலைகளில் கரும்புள்ளிகள் தோன்றி, பின்பு துளைகளாக மாறும். துளைகளைச் சுற்றி மஞ்சள் அல்லது கறுப்பு நிறப் பகுதி உருவாதல்.

சரி செய்தல்: Aqua Rebell Makro Basic Kalium போன்ற பொட்டாசியச் சத்துள்ள உரங்களை இட வேண்டும். பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் ஆகிய மூன்று சத்துகள் குறைபாடும் ஒரே நேரத்தில் ஏற்படின் Makro Basic NPK போன்ற உரத்தை இடலாம்.

மெக்னீசியம்: தாவர ஒளிச்சேர்க்கைக்கான சத்துகளில் முதன்மையானது மெக்னீசியம். ஏனெனில், தாவரத்தின் பசுமை நிறத்துக்குக் காரணமான குளோரோபில் உருவாக இது அவசியம்.

அறிகுறிகள்: நீர்த் தாவரங்கள் மஞ்சள் அல்லது பழுப்புக் கலந்த நிலையில், முதிர்ந்த இலைகளுடனும் இலை நரம்புகள் பச்சையாகவும் இருக்கும். இதைச் சரிசெய்ய மெக்னீசியம் கலந்த உரத்தை இட வேண்டும்.

நுண் சத்துகள்

இவை தாவர வளர்ச்சிக்கு மிகக் குறைந்தளவில் தேவைப்படும். இவை குறைந்தால் தாவர வளர்ச்சிப் பாதிக்கும். இவற்றில் இரும்புச்சத்து மிக முக்கியமானது. இந்தப் பட்டியலில் தாமிரம், போரான், மாங்கனீசு ஆகிய நுண் சத்துகளும் அடங்கும்.

இரும்புச்சத்து: நுண் சத்துகளில் தாவர வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது இரும்புச் சத்தாகும். ஒரு லிட்டர் நீரில் 0.05-0.1 மி.கி. அளவில் இரும்புச்சத்து இருக்க வேண்டும். இந்த அளவானது எப்போதும் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

அறிகுறிகள்: தாவரத்தின் நுனிப்பகுதி மற்ற பகுதிகளைக் காட்டிலும் வெளிரி இருக்கும். இறுதியில் இது மஞ்சள் அல்லது வெள்ளையாக மாறிவிடும். தீவிர இரும்புச்சத்துக் குறையால், தாவர வளர்ச்சிக் குன்றுதல், தாவரம் முழுவதும் கறுப்பாதல், திசு அழுகல் ஆகியன ஏற்படும்.

சரி செய்தல்: இரும்புச்சத்துள்ள உரத்தை இட வேண்டும். Aqua Rebell Mikro Spezial Eisen போன்ற உரம் நல்ல பலனை அளிக்கும். Aqua Rebell Mikro Spezial Flow grow போன்ற இரும்புச்சத்து உரங்களை, நீரிலிட்ட சிலமணி நேரத்தில் தாவரங்கள் உறிஞ்சி விடும். இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், அக்வாரியத்தில் தேவையற்ற பாசிகள் வளரும்.

மற்ற நுண் சத்துகள்

Complete Iron Fertilizers போன்ற இரும்புச்சத்துள்ள உரம், இரும்புச்சத்தை மட்டுமன்றி, பிற நுண்சத்துகள் தேவையையும் சரி செய்யும். அதேநேரம் மற்ற நுண்சத்துகள் குறிப்பிடும் வகையில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஒளியளவு

தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு ஒளியளவு மிகவும் தேவையாகும். அக்வாரியத்தில் சரியான அளவில் ஒளிப்புகாவிடில் ஒளிச்சேர்க்கை தடைபடும். இதனால் தாவரங்களின் வளர்ச்சிக் குன்றும். நீண்ட தண்டுள்ள தாவரங்கள் அதிகளவில் ஒளித்தேவையைக் கொண்டிருக்கும்.

ஒருசில தாவரங்கள் குறைந்த ஒளியில் கணுவிடைகளை மட்டும் உருவாக்கும். சில தாவரங்கள் ஒளிச்சார்பு இயக்கத்தை மேற்கொண்டு அதிக ஒளியுள்ள பகுதியை நோக்கி வளரும்.

அதிக ஒளி தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே நேரம் கரியமில வாயு மற்றும் பேரூட்டங்கள் கிடைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிக வளர்ச்சி, அதிகளவில் சத்துகளை எடுத்துக் கொள்வதையும், நுண்பாசிகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

அக்வாரியத்தில் குறைவான ஒளிபடுதல், மற்ற தாவரங்களின் நிழல், அழகுப் பொருள்களான கற்கள் மற்றும் நகரும் மரத்துண்டுகள் ஒளித்தேவையைப் பாதிக்கும்.

ஒளியின் நிறமானது தாவர நிறமாற்றத்தைத் தீர்மானிக்கும். சுத்தமான வெண்ணிற விளக்குகள், இலைகளைப் பசுமை நிறமாக்கும். இந்த விளக்குகளால் இலைகளில் ஏற்படும் நிறமாற்றம், குளோரோசிஸ் நோயைப் போல இருப்பதால், அது சத்துக்குறை எனத் தவறாகக் கருதப்படுகிறது.

6,500 கெல்வின் அளவு அலைக்கற்றையைக் கொண்ட ஒளி, தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

நீர்வாழ் தாவரங்கள் அழகுக்காக மட்டுமன்றி நீரின் தரத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. அத்துடன் மீன்களுக்கு உணவாகும் நுண்பாசிகள் வளரவும் காரணமாக உள்ளன. இப்படிப் பல்வேறு நன்மைகளைத் தரும் நீர்த் தாவரங்களின் வளர்ச்சியை அதிகரித்தால், அக்வாரியப் பராமரிப்பு மற்றும் வண்ணமீன் வளர்ப்புத்துறை மிகப்பெரிய அளவில் வளரும்.


மு.சதீஸ்,

இரா.இராஜேஷ் கண்ணன், ஆ.உமா, பா.அகிலன்,

டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி, பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks