நாமக்கல் வட்டாரத்தில் இப்போது சாகுபடியில் உள்ள, சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைப் பயிரில் தென்படும் துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெறும்படி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
பயிருக்குத் தேவையான நுண் சத்துகளில் துத்தநாகம் மிகவும் முக்கியமானது. வேர்களின் நீர் கிரகிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்த இச்சத்து அவசியமாகும். எனவே, அனைத்துப் பயிர்களுக்கும் மணிச்சத்தின் தேவையில் நூற்றில் ஒரு பங்கு வீதம் துத்தநாகச் சத்து தேவைப்படும். மண்ணின் கார அமில நிலை 6 முதல் 8 வரையுள்ள நிலங்களில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படும். களர் நிலத்தில், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலத்தில் மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலத்தில் உள்ள பயிர்களுக்கு, துத்தநாகச் சத்துக் கிடைப்பதில்லை.
துத்தநாகப் பற்றாக்குறை அறிகுறிகள்
சோளம், மக்காசோளப் பயிர்களின் இளம் பருவத்தில் 2 அல்லது 3 ஆம் இலையின் அடிப்புறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும், இலைகள் அடியிலிருந்து மேல் நோக்கி வெளுத்துக் காய்ந்து விடும். நுனி இலைகள் சரிவர விரியாது. சோளத்தில் துளிர் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு மற்றும் செம்புள்ளிகள் தோன்றும். பயிர்களின் கணு இடைவெளி குறையும். கதிர்கள் தோன்ற அதிக நாட்களாகும். பயிர்களில் நல்ல வளர்ச்சி இருக்காது.
நிலக்கடலையில் 3 மற்றும் 4 ஆம் இலையில் குறைபாட்டு அறிகுறிகள் தோன்றும். இலைகள் இளம் மஞ்சள் நிறத்தில் பழுப்புப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும், இலைகள் காய்ந்து உதிரும். எள் பயிரில் நடுப்பகுதி இலை நரம்புகளின் உள்பகுதி வெளுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மேலாண்மை
பயிர்களுக்குப் பேரூட்ட உரங்களை இட்ட பிறகு, துத்தநாக சல்பேட்டைச் சம அளவு மண்ணுடன் கலந்து சீராக நிலத்தில் தூவிவிட வேண்டும். யூரியாவுடன் துத்தநாக சல்பேட்டைக் கலக்கக் கூடாது. ஏனெனில், நீர்த்துக் கட்டியாகி விடும். இவ்வுரத்தை, விதைப்புக்கு முன் இட வேண்டும். இப்படி இடுவதன் மூலம் பயிர் மகசூல் 10 முதல் 25 சதம் வரை அதிகமாகும்.
ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட் வீதம் கலந்து பயிர்களில் தெளிக்கலாம். துத்தநாகக் குறை தெரிந்ததும், இக்கரைசலை ஒருவார இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். விதைத்து 30 நாளில் தெளிக்கலாம், பிறகு 7-10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் இருமுறை தெளிக்க வேண்டும். இளம் பருவத்தில் தெளித்தால் தான் முழுப்பயன் கிடைக்கும். எனவே, பயிர்கள் நன்கு நனையும் வகையில், காலையில் வெய்யிலுக்கு முன் தெளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம் என்று கூறியுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
சந்தேகமா? கேளுங்கள்!