கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020
நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக பி.பி.டி. 5204, ஏ.டி.ட்டி. 39 ஆகிய இரகங்களில் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்குதல் உள்ளது. இதனால், 50% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.
முட்டையிடுதல்
இரவில் சுறுசுறுப்புடன் இயங்கும் ஆனைக்கொம்பன் தாய் ஈக்கள் ஒவ்வொன்றும் 100-300 சிவப்பு நிறத்தில், நீளக் குழல் வடிவ முட்டைகளைத் தனியாகவோ அல்லது 2-6 முட்டைக் குவியலாகவோ, இலையின் அல்லது இலையுறையின் மேல் இடும். அரிதாக, தேங்கிய நீரிலும் இடும்.
மேகட் புழுக்கள்
முட்டைகளிலிருந்து 3-4 நாட்களில் மேகட் புழுக்கள் வெளிவரும். வளர்ந்த இப்புழுக்கள் கால்கள் இல்லாமலும், இளஞ் சிவப்பாகவும் இருக்கும். இவை இலைகளிலிருந்து கீழ்நோக்கிச் சென்று, வளரும் நுனிப்பகுதியைத் தாக்கி, செஸிடோஜென் என்னும் நச்சைச் செலுத்தும். மேகட் புழுப்பருவம் 8-10 நாட்கள் இருக்கும். உருமாறிய நீண்ட குழல் வடிவ(வெங்காய) இலைக்குள் கூட்டுப்புழு இருக்கும். இப்பருவம் 3-5 நாட்களாகும்.
பூச்சி
ஈ வகையைச் சார்ந்த இப்பூச்சி, மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில், கொசுவைப் போல் சிறியதாக, நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வயிறு சிறியதாகவும், தடித்தும் இருக்கும். இதன் வாழ்க்கை 14-21 நாட்களாகும்.
பெருகக் காரணங்கள்
விட்டுவிட்டுப் பெய்யும் மழைத்தூறல், தொடர்ந்து மேக மூட்டமாக இருத்தல், காற்றின் ஈரப்பதம் 83-87% இருத்தல். செப்டம்பர்-நவம்பர் காலத்தில் தாக்குதல் அதிகமாக இருக்கும். பருவம் தவறிக் காலதாமதமாகப் பயிரிடப்படும் பகுதிகளிலும் இதன் தாக்குதல் மிகுந்திருக்கும்.
சேத அறிகுறிகள்
நாற்றங்கால் முதல் தூர் கட்டும் பருவம் வரை இதன் தாக்குதல் இருக்கும். மேகட் புழுக்கள் இலையுறையுள் புகுந்து நெற்பயிரின் வளர் முனையைத் தாக்கும். இதனால் இலைகள் இயல்பு நிலை மாறி வெள்ளி நிறத்தில் கொம்பு அல்லது வெங்காய இலையைப் போன்ற குழலாகத் தெரியும். இது இளம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு யானையின் கொம்பைப் போன்று இருப்பதால் இது ஆனைக்கொம்பன் எனப்படுகிறது.
குழல் போன்ற தூர்களில் வளர்ச்சி இருக்காது. கதிர்களும் வராது. குழல் நுனி வழியாக ஈ வெளியேறிய பிறகு, மேகட் புழுவின் தோல் பாதி வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும். இதன் தாக்குதல் நாற்றங்காலில் இருந்தாலும் 35-45 நாள் இளம் பயிர்களையே அதிகமாகத் தாக்கும். 10% தூர்களில் தாக்குதல் இருந்தால், அதாவது வெங்காய இலைகள் இருந்தால், அது பொருளாதாரச் சேதநிலையைக் குறிக்கும்.
கட்டுப்படுத்துதல்
அறுவடைக்குப் பின்பு அடித்தாள்களை நன்கு மடக்கி உழ வேண்டும். இல்லையெனில் அவற்றிலிருந்து முளைக்கும் தூர்களில் ஆனைக்கொம்பன் ஈயின் கூட்டுப்புழுக்கள் உறக்க நிலையிலிருந்து, அடுத்த சாகுபடியின் போது தாக்கலாம். வயல் மற்றும் சுற்றுப்புறத்தில் புல்வகைக் களைகள் இருக்கக் கூடாது. புற ஊதா விளக்குப் பொறியைப் பயன்படுத்தி, பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். வயலிலிருந்து நீரை வடித்து விட்டால் இதன் தாக்குதல் குறையும்.
கறுப்புக் குளவியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசே என்னும் புழு ஒட்டுண்ணிகள் தாக்கிய தூர்களைச் சேகரித்து 10 சதுர மீட்டருக்கு ஒன்று வீதம் வயலில் இட வேண்டும். இந்தத் தூர்களின் நீளம் குறைவாக இருக்கும். இவற்றைத் தூக்கிப் பிடித்து வெய்யிலில் பார்த்தால், ஒட்டுண்ணியின் கூட்டுப்புழுக்கள் கறுப்புக் கலந்து பழுப்பு நிறத்தில் இருப்பது தெரியும்.
தழைச்சத்து உரத்தைப் பரிந்துரை அளவில் மட்டுமே இட வேண்டும். தாக்குதல் பொருளாதாரச் சேதநிலையைத் தாண்டினால், அதாவது 10% தூர்களில் வெங்காய இலைகள் இருந்தால், ஏக்கருக்கு, பிப்ரோனில் 5 எஸ்.சி.500 மில்லி, தயோமீதாக்ஸாம் 25 டபிள்யூ.ஜி. 40 கிராம், கார்போ சல்பான் 25 ஈ.சி. 400 மில்லி, குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. 500 மில்லி ஆகிய இரசாயன மருந்துகளில் ஒன்றை, 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். அல்லது பிப்ரோனில் 0.3 ஜி குருணை 6-8 கிலோ, குயினல்பாஸ் 5 ஜி குருணை 2 கிலோ ஆகியவற்றில் ஒன்றைத் தூவி இந்த ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ்,
முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம்,
நீடாமங்கலம் -614404, திருவாரூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!