பாரம்பரிய நெல் சாகுபடி – பண்ணைப்பள்ளிப் பயிற்சி!

நெல் சாகுபடி WhatsApp Image 2024 01 10 at 12.53.40 PM

கிருஷ்ணகிரி வட்டாரம், கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளிப் பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நெல்லில் பண்ணைப் பள்ளி என்பது, அதிக மகசூலைப் பெற்ற விவசாயியின் வயலில், மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியாகும். வெற்றி விவசாயி பின்பற்றிய உத்திகளான, விதைநேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் நிர்வாகம், அறுவடை உத்தி, அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்திகள் போன்றவற்றை, அவரது வயலில் பார்வையிட்டு, அவரைப் போலவே பிற விவசாயிகளும் அதிக மகசூலைப் பெற வழி வகுப்பதே பண்ணைப் பள்ளிப் பயிற்சியின் நோக்கமாகும்.

இப்பயிற்சியில் சிறப்புரையாற்றிய கிருஷ்ணகிரி எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் டி.சுந்தர்ராஜ், நெல்லில் பின்பற்ற வேண்டிய சாகுபடி உத்திகள் மற்றும் மண் பரிசோதனை, நீர்ப் பரிசோதனையின் அவசியத்தை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.சுரேஷ்குமார், நெல் பண்ணைப் பள்ளி, அதில் இடம்பெறும் ஆறு வகுப்புகளை நடத்தும் முறைகள், விதைநேர்த்தி முதல் அறுவடை வரையில் பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள், நுண்ணுரம், உயிர் உரம் இட வேண்டியதன் அவசியம், நடவு நட்ட மூன்று நாளில், ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

உதவி வேளாண்மை அலுவலர் மாதையன், வேளாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கியதுடன், நெல்லில் பின்பற்ற வேண்டிய உத்திகள் அடங்கிய கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் பார்வதி, அட்மா திட்டம் பற்றியும், அதன் செயல்களைப் பற்றியும், திருந்திய நெல் சாகுபடி, கோனோவீடரின் பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இதில், 25க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.


செய்தி: கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading