My page - topic 1, topic 2, topic 3

வெண்டை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.

காய்கறிப் பயிர்களில் வெண்டை முக்கியப் பயிராகும். இதன் தாயகம் எத்தியோப்பியா ஆகும். வெண்டைக் காயில் வைட்டமின்கள் ஏ, பி, சி, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, கரோட்டீன் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன.

உத்தரப் பிரதேசம், ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வெண்டை அதிகளவில் சாகுபடியாகிறது. இது ஏற்றுமதி வாய்ப்பு அதிகமுள்ள காயாகும். எனவே, தரமான காய்களை உற்பத்தி செய்து நல்ல இலாபத்தை அடைய, நவீனத் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

இரகங்கள்

வெண்டையில், கோ.2, எம்.டி.யூ.1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாய், பார்பானி கிராந்தி ஆகிய சாதா இரகங்களும், கோ.பி.எச்.எச்.1 மற்றும் 4 ஆகிய வீரிய ஒட்டு இரகங்களும் உள்ளன.

மண்

வெண்டை, அனைத்து மண்ணிலும் நன்கு வளரும். அமில, காரத்தன்மை 6-8.5 உள்ள மணற் பாங்கான மண் முதல், களிமண் வரையிலான அனைத்து நிலங்களிலும் பயிர் செய்யலாம்.

தட்ப வெப்ப நிலை மற்றும் நடவுப் பருவம்

வெண்டை வெப்ப மண்டலப் பயிராகும். காற்றின் தட்ப வெப்பம் 25-30 டிகிரி செல்சியஸ் இருப்பின், செடிகளின் வளர்ச்சி மற்றும் பூக்கள் உருவாதல் அதிகமாக இருக்கும். ஜூன் ஆகஸ்ட் மாதங்கள் வெண்டை சாகுபடிக்கு ஏற்றவை. கோடையில், மஞ்சள் நச்சுப்பயிர் நோயானது வெண்டையை அதிகமாகத் தாக்குவதால், மிகவும் கவனம் தேவை. அதிக மழை மற்றும் அதிகக் குளிருள்ள செப்டம்பர்- டிசம்பர் காலத்தில், செடிகளின் வளர்ச்சியும், பூக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

விதை நேர்த்தி

சாதாரண இரகங்கள் என்றால், ஏக்கருக்கு 3 கிலோ விதைகளும், வீரிய ஒட்டு இரகங்கள் என்றால், 1-1.5 கிலோ விதைகளும் தேவைப்படும். இவற்றை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், விதைப்பதற்கு முன், 100 கிராம் விதைக்கு 10 கிராம் அசோஸ் பயிரில்லம் வீதம் எடுத்து ஆறிய அரிசிக் கஞ்சியில் சேர்த்து விதை நேர்த்தி செய்து, 20-30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

விதைப்பு

இப்படி நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் சாதா இரகமாக இருந்தால், 45 செ.மீ. இடைவெளி உள்ள பார்களில், 30 செ.மீ. இடைவெளியில், குத்துக்கு 2 விதைகளை 1-2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். வீரிய ஒட்டு இரகமாக இருந்தால், இதே இடைவெளியில் குத்துக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும். ஊன்றியது முதல் 10 நாட்கள் வரையில், முளைக்காத இடங்களில் மீண்டும் விதைகளை ஊன்ற வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 தடவை நன்கு உழ வேண்டும். கடைசி உழவின் போது தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். மேலும், 800 கிராம் அசோஸ் பயிரில்லம், 800 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும்.

உரமிடுதல்

சாதா வகை வெண்டை சாகுபடி என்றால், அடியுரமாக ஏக்கருக்கு, 10 டன் தொழுவுரம், 8 கிலோ தழைச்சத்தைத் தரும் 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்தைத் தரும் 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 20 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். மேலுரமாக, விதைத்த 30 நாளில் 18 கிலோ யூரியாவை இட வேண்டும்.

வீரிய ஒட்டு வகை வெண்டை சாகுபடி என்றால், அடியுரமாக ஏக்கருக்கு, 16 டன் தொழுவுரம், 40 கிலோ தழைச்சத்தைத் தரும் 87 கிலோ யூரியா, 40 கிலோ மணிச்சத்தைத் தரும் 250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 40 கிலோ சாம்பல் சத்தைத் தரும் 67 கிலோ பொட்டாசை இடவேண்டும்.

இந்த உரங்களைச் செடிகளில் இருந்து 10 செ.மீ. தள்ளி, பட்டையாக இட்டு, மண்ணை அணைத்து உடனே நீரைப் பாய்ச்ச வேண்டும்.

இலைவழி உரமிடல்

ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா மற்றும் 10 கிராம் பொட்டாஷ் வீதம் கலந்து கலவையைத் தயாரித்து, விதைத்த 30 மற்றும் 45 நாளில் தெளிக்க வேண்டும். வீரிய ஒட்டு இரகம் என்றால், நீரில் கரையும் உரமான 19:19:19-ஐ, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் கணக்கில் கலந்து, 30 நாளில் இருந்து 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

நுண்ணூட்டக் கலவைத் தெளிப்பு

காய்கறிப் பயிர்களுக்கு எனத் தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து, நடவு செய்த 45 நாளில் தொடங்கி, 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும். இப்படிச் செய்வதால், சுமார் 30 சதவீதம் அளவுக்குக் கூடுதல் மகசூலைப் பெறமுடியும்.

களைக் கட்டுப்பாடு

களைகள் முளைப்பதற்கு முன், விதைத்த மூன்றாம் நாள் ஏக்கருக்கு, 900 மில்லி ப்ளுக்குளோரலினைத் தெளித்து உடனே பாசனம் செய்ய வேண்டும். பிறகு, விதைத்த 30 ஆம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

வெண்டைச் செடிகளைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் 10 இடங்களில் பறவைத் தாங்கிகளை வைக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக மண்ணிலிட வேண்டும்.

மக்காச்சோளத்தை வரப்புப் பயிராக வளர்த்து, சாற்றை உறிஞ்சும் பூச்சிகளின் நடமாட்டத்தைத் தடை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 மஞ்சள் ஒட்டுப் பொறிகளை வைத்து, சாற்றை உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். மஞ்சள் தேமல் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை அழிக்க வேண்டும். காய்த் துளைப்பான்களைக் கண்காணிக்க, ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும்.

டிரைக்கோகிரம்மா ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 40,000 வீதம், 4-5 முறை, ஒருவார இடைவெளியில் வெளியிட்டுக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும். வேப்பெண்ணெய் 10,000 பி.பி.எம். கலவை ஒரு சதம் அல்லது வேப்பங் கொட்டைச்சாறு 5 சதக் கலவையைத் தெளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

விதைத்த 45 நாள் முதல் காய்களைப் பறிக்கலாம். பயிர் 90-110 நாட்கள் வரையில் இருக்கும். நார்ப் பிடிப்பதற்கு முன், ஒருநாள் இடைவெளியில் காய்களைப் பறிக்க வேண்டும். நன்கு பராமரிக்கப்படும் நிலத்தில் ஏக்கருக்கு 6-8 டன் காய்கள் கிடைக்கும்.


ந.ரமேஷ்ராஜா, வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, வெம்பாக்கம் வட்டம், திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks