செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.
மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி.
இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இதன் தேவை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதனால், விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படும் பயிராக மாறியிருக்கிறது மருதாணி.
இவ்வகையில், இயற்கை வேலியாகவும், மானாவாரி நிலத்தில் தனிப் பயிராகவும், ஊடுபயிராகவும் மருதாணியை வளர்த்து வருகிறார், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் தமிழாசிரியரும், இயற்கை வேளாண்மை முன்னோடியுமான நீ.இராஜகோபால் அய்யா. அவரிடம் மருதாணி சாகுபடியைப் பற்றிக் கேட்டோம்.
“மருதாணியில முள் மருதாணி, முள்ளில்லா மருதாணின்னு ரெண்டு வகை இருக்கு. முள் மருதாணியை இயற்கை வேலி அமைக்கவும் பயன்படுத்தலாம். முள்ளில்லா மருதாணியைத் தனிப் பயிராவும், ஊடுபயிராவும் வளர்க்கலாம்.
வேலியமைக்க, ரெண்டு வரிசையில ஒரு அடிக்கு ஒரு செடியை நடணும். இந்த ரெண்டு வரிசைக்கான இடைவெளி ஒரு அடி இருந்தா போதும். இப்பிடித் தான் நான் செஞ்சிருக்கேன்.
எங்க நெலமெல்லாம் மானாவாரிக் காடுக தான். இங்க வேம்பு, மலைவேம்பு, பீனாறி மரங்களைத் தான் வளர்க்குறேன். இதுல ரெண்டு மங்களுக்கு இடையில நாலடி அஞ்சடிக்கு ஒண்ணுங்குற கணக்குல மருதாணியை வளர்க்குறேன். தனிப்பயிரா வளர்க்கணும்ன்னா, வரிசைக்கு வரிசை மூனடி, செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளியில மருதாணியை நட்டு வளர்க்கலாம்.
மருதாணி நாத்துகளை விதைகள் மூலமாவும் உற்பத்தி செய்யலாம், குச்சிகள் மூலமாவும் உற்பத்தி செய்யலாம். விதைகள் அவ்வளவு சீக்கிரமா முளைச்சு வந்துறாது. அதனால இந்த விதைகளை மணலோட நல்லா கலந்து பரப்பி வச்சு இதுல ஒரு வாரத்துக்குத் தண்ணியைத் தெளிச்சா முளை விட்டுரும்.
அப்போ இது மேல கொஞ்சமா எருவைப் பரப்பி மூடாக்குப் போட்டு வச்சா, அப்பிடியே நாத்துகளா வளந்துரும். இந்த முறையில மருதாணி நாத்துகள உற்பத்தி செய்யலாம். இந்த மருதாணி வேரு, செடிகள விட நீளமா இருக்கும்.
அடுத்து, குச்சி முறையில நாத்துகள உற்பத்தி செய்யலாம். இதுக்கு, பென்சில் கனத்துல இருக்கும் மருதாணிக் குச்சிகளை அரையடி நீளத்துல நறுக்கி எடுத்துக்கிறணும்.
பிறகு, நாத்துப் போடுற பிளாஸ்டிக் பைகள்ல மண்ணை நெரப்பி, பாதிக்குச்சி மண்ணுக்குள்ள இருக்குற மாதிரி நட்டு, பையில இருக்கும் மண்ணு காயாத அளவுல தண்ணியை ஊத்திக்கிட்டே வரணும். இப்பிடிச் செஞ்சா மூனு மாசத்துல நடவுக்குத் தகுந்த மருதாணிக் கன்னுக தயாராகிரும்.
மருதாணி, வறண்ட காடு கரையில முளைக்கக் கூடிய செடி. இதுக்குத் தண்ணியே தேவையில்ல. நெலத்தை நல்லா பக்குவமா உழுது வச்சு, மழைக் காலத்துல நட்டுட்டா போதும். எப்பிடியும் குறஞ்சது ஒரு மூனு மாசத்துக்கு நிலத்துல ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும்.
இந்தக் காலத்துலயே நல்லா வேர் விட்டு வளர்ந்துரும். அப்புறம் அப்பப்போ பெய்யிற மழையே மருதாணிக்குப் போதும். ஆண்டுக்கு ஆண்டு பலமா வளரும். மருதாணிய ஆடு மாடுக தின்னாது. அதனால, எந்தப் பாதுகாப்பும் தேவையில்ல. பூச்சியோ நோயோ தாக்காது. அதனால எந்தச் செலவும் இல்ல.
இன்னைக்கு மழையில்ல தண்ணியில்ல, வேலைக்கு ஆள் கிடைக்கல, வேலையாள் கூலி ஏறிப் போச்சுன்னு, நெறைய நெலங்கள் விவசாயம் இல்லாம சீமைக்கருவேல மரங்கள் நெறஞ்ச முள்ளுக் காடுகளா கெடக்கு.
இங்கெல்லாம் மருதாணியை நடலாம். மரங்களை வளர்த்து ஊடுபயிரா மருதாணியை நட்டு வைக்கலாம். இப்பிடிச் செஞ்சா, நல்ல நெலங்கள் பாழாப் போகாம இருக்கும்.
மூனு மாசத்துக்கு ஒரு தடவை மருதாணி மூலமா வருமானம் கெடைக்கும். குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழிச்சு, மரங்கள் மூலமா மொத்த வருமானம் கெடைக்கும்.
மருதாணியை நட்டு மூனு மாசத்துல அறுவடையைத் தொடங்கலாம். தொடர்ந்து மூணு மாசத்துக்கு ஒருமுறை அறுத்துக்கிட்டே இருக்கலாம். மருதாணி இலைக்குத் தான் காசு.
அதனால, மருதாணி இலைகள் இருக்குற குச்சிகளை அறுத்து ரெண்டு நாளைக்கு, களத்துல காயப் போட்டா இலைகள் பொலுபொலுன்னு உதிர்ந்துரும். அதை அப்பிடியே சாக்குல அள்ளி வித்துறலாம்.
இன்னைக்கு நிலமையில காஞ்ச ஒரு கிலோ மருதாணி இலையோட விலை 45 ரூவா. வாங்குறதுக்குத் தயாரா இருக்காங்க. ஒரு ஏக்கர் வேலியோரச் செடிகள்ல இருந்து, மூனு மாசத்துக்கு ஒரு தடவை, 200 கிலோ மருதாணி இலைக கிடைக்கும். இதையே தனிப்பயிரா போட்டா, எந்தச் செலவும் இல்லாம, இன்னும் கூடுதலான வருமானம் கிடைக்கும்.
இதைப்போல ஆடாதோடையும் நல்ல காசு தரக்கூடிய மூலிகை. ஆடு மாடுக தின்னாது. பூச்சி நோய்க தொல்லை எதுவுமே கிடையாது. அப்பப்போ வருமானத்தைத் தரக்கூடிய மூலிகை.
இருமலுக்கு, இளைப்புக்கு அருமையான மருந்து இந்த ஆடாதோடை. அதனால, இதுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு. இதையும் தனிப்பயிரா அல்லது ஊடுபயிரா சாகுபடி மானாவாரி நெலங்கள்ல சாகுபடி செய்யலாம். இன்னிக்கு ஒரு கிலோ ஆடாதோடை இலையோட விலை, ஒரு கிலோ 35 ரூபா.
மூலிகை சார்ந்த மருத்துவ விழிப்புணர்வு வந்துக்கிட்டே இருக்கு. அதனால, இந்த மாதிரியான மூலிகைகளுக்கு வரவேற்பு, விற்பனை வாய்ப்பு நெறையா இருக்கு.
அதனால, நல்ல நெலங்கள் முள்ளுக்காடா மாறாம இருக்கணும்ன்னா, வறட்சியைத் தாங்கி வளர்ந்து பலனைக் கொடுக்கும் இப்பிடிப்பட்ட மூலிகைத் தாவரங்களைத் தாராளமா சாகுபடி செய்யலாம்’’ என்றார்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!