செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.
நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பல்வேறு பாதுகாப்பு முறைகளை நடைமுறையில் பின்பற்றுகிறோம், அவற்றுள் இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள் பெரும்பங்கு வகிக்கின்றன, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தொடர்ந்து பயிர்களில் தெளிப்பதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது, மேலும், நோய்க் காரணிகளில் பூசணக் கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறன் உருவாவதோடு, மருந்துகளின் நச்சுக் கழிவுகள் விளை பொருள்களைத் தாக்குவதால் அவற்றால் நம் உடல் நலமும் கெடுகிறது.
பூசணக் கொல்லிகளின் விலை அதிகமாக உள்ளதால், சாதாரண விவசாயிகளால் அவற்றை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை, இந்தச் சீர்கேடுகளைக் குறைத்து, பயிர் நோய்களைக் கட்டுப்படுத்த, உயிரியல் நோய் மோலாண்மை முறைகளைக் கையாள்வது அவசியமானது.
ஒருங்கிணைந்த பயிர் நோய் மேலாண்மையில் உயிர் எதிர்க் கொல்லிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பாக்டீரியா வகையைச் சார்ந்த சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் அதிகளவில் உயிர் எதிர்க் கொல்லியாகப் பயன்பட்டு வருகிறது. இது, டால்க் துகள்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது, நோய்க் காரணிகளைச் சிறப்பாகக் கட்டுப்படுத்துவதுடன், நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்குத் தீமை செய்வதில்லை.
இரசாயனப் பூசணக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. ஆனால், உயிர் எதிர்க் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அத்தகைய சீர்கேடு ஏற்படுவதில்லை. மேலும், நோய்க் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. சூடோமோனாஸ் ப்ளோரன்சைப் பயன்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம்.
நெல்: குலை நோய் மற்றும் இலையுறைக் கருகல் நோய்
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து, தேவையான நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, நீரை வடிக்க வேண்டும். இந்த நீரை நாற்றங்காலில் ஊற்றி விட வேண்டும்.
நாற்றுகளை நனைத்தல்: சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவை 2.5 கிலோவை, 25 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள நீரில் கலந்த பின்னர், ஒரு எக்டருக்குத் தோவையான நாற்றுகளைக் குறைந்தது அரைமணி நேரம் ஊற வைத்து நட வேண்டும். நீண்ட நேரம் ஊற வைத்தால் அதன் செயல் திறன் கூடும்.
வயலில் இடுதல்: நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து, எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் கலவையை 50 கிலோ நன்கு மட்கிய தொழுயெரு அல்லது மணலில் கலந்து இட வேண்டும்.
தெளிப்பு முறை: சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவை 0.2 சதக் கரைசலை நடவுக்குப் பின்னர், 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து, பத்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
கேழ்வரகு: குலை நோய்
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைகளுக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.
தெளிப்பு முறை: சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவை 0.2 சதக் கரைசலை, நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, பயறுவகைப் பயிர்கள்: வேரழுகல் மற்றும் வாடல் நோய்
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைகளுக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவை வீதம் நன்கு கலந்து விதைக்க வேண்டும்.
காய்கறிகப் பயிர்கள்: நாற்றழுகல், நாற்றுக் கருகல்
விதை நேர்த்தி: தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணிப் பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்றுக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைகளுக்கு 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து விதைக்க வேண்டும்.
வாழை: வாடல் மற்றும் பழ அழுகல் நோய்
கன்று நேர்த்தி: வாழைக் கன்றில் உள்ள வேர்களை அகற்றி விட்டு, களிமண் கலவையில் நனைத்து எடுத்து, அந்தக் கிழங்கில் 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவையைத் தெளித்து நட வேண்டும்.
வாழைத்தாரில் தெளித்தல்: 0.5 சத சூடோமோனாசை, கடைசி வாழைத்தார் வெளிவந்த பிறகு தெளிக்க வேண்டும். இதைப்போல, முப்பது நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யும் வரை தெளித்து விட வேண்டும்.
மாம்பழம்: ஆந்த்ரக்னோஸ் பழ அழுகல் நோய்
0.5 சத சூடோமோனாசை, காய்கள் பிடித்த 15 நாட்கள் கழித்துத் தெளிக்க வேண்டும். இதைப்போல, முப்பது நாட்களுக்கு ஒருமுறை என, அறுவடை செய்யும் வரை தெளித்து விட வேண்டும்.
கவனிக்க வேண்டியவை
சூடோமோனாஸ் பாக்டீரியக் கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது. ஆனால், மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம். இந்த பாக்டீரியக் கலவையைத் தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
பயன்கள்
இது ஒரு சிக்கன முறை. இது, பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது. பயிர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது மண்ணிலுள்ள கனிமப் பொருள்களைப் பயன்படுத்தி, பல மடங்காகப் பெருகிச் செடிகளுக்குப் பாதுகாப்பை நீண்ட காலத்துக்குத் தருகிறது. இதர உயிரினங்களுக்கும், தோட்டத்தில் உள்ள மண் புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை.
முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல்
நிலையம், காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!