My page - topic 1, topic 2, topic 3

நல்ல வருமானத்தைத் தரும் நெல்வயல் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர்.

காஞ்சிபுர மாவட்டத்தில் நெல்லானது முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த வயதுள்ள நெல் இரகங்கள், நவரை, கார், சொர்ணவாரி மற்றும் குறுவைப் பருவத்தில் பயிரிடப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நடுத்தர மற்றும் அதிக வயது இரகங்களான, வெள்ளைப்பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியன சாகுபடி செய்யப்படுகின்றன. காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 60-70 விழுக்காடு வரை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குக் குறைந்தது 10-13 ஆயிரம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.

மேலும், வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருள்களின் விலையேற்றம் ஆகியவற்றால் நிகர இலாபம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், போதியளவு நீர் இருந்தும் நெல் சாகுபடியில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நெல் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், நெல் சாகுபடியில் அதிக வருமானம் பெறவும், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில், நெல் வயலில் மீன் வளர்ப்பு உத்தி பரிந்துரை செய்யப்படுகிறது.

இந்தத் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்தால் நெல் வயலில் களைகள் கட்டுப்படும். பூச்சிகளின் தாக்குதல்களும் குறையும். மேலும், மீன் கழிவுகள் நெல் வயலுக்கு உரமாக மாறுவதுடன், 10-15 விழுக்காடு வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.

காஞ்சிபுர மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலமான பின்சம்பா மற்றும் தாளடிப் பருவத்தில் இந்தத் தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீனை வளர்ப்பதற்கு மத்திய மற்றும் நீண்டகால இரகங்களான வெள்ளைப்பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியன மிகவும் ஏற்றவை. நெல் வயலின் வரப்பைச் சுற்றி ஒரு மீட்டர் ஆழம் ஒரு மீட்டர் அகலத்தில் கால்வாயை உருவாக்கி, மீன்களுக்கு உறைவிடத்தை அமைக்க வேண்டும்.

நெல் வயலில் கால்வாயை விட்டுவிட்டு மற்ற பகுதியில் வரிசைக்கு வரிசை, பயிருக்குப் பயிர் 25 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி, அதிக இடைவெளியில் நடவு செய்வதால் மீன்கள் வயலின் நடுப்பகுதிக்குச் சென்று இரையைத் தேட வசதியாக இருக்கும். நெல் வயலில் நீர் நுழையும் பகுதி, நீர் வெளியேறும் பகுதியில் வலைகளை அமைத்து, மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும். நடவு செய்தபின் நெல் வயலில் 5-10 செ.மீ. நீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடவு செய்து ஐந்து நாட்கள் கழித்து, ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை வயலில் இட வேண்டும். இந்த அசோலா, நெற்பயிருக்குத் தழைச்சத்தாயும், மீன்களுக்கும் நல்ல உணவாயும் அமையும். நடவு செய்த 15 நாட்கள் கழித்து ரோகு, கட்லா, மிர்கா போன்ற மீன் குஞ்சுகளை ஏக்கருக்கு 1,000-1,200 வீதம் நெல் வயல் கால்வாயில் இருப்பு வைக்கலாம்.

வாரம் ஒருமுறை மாட்டுச்சாணம் மற்றும் கிளைரிசிடியா தழைகளைக் கால்வாயில் போட வேண்டும். இவை, மீன்களுக்குச் சிறந்த உணவாகும். மேலும், வயலிலுள்ள அசோலா, களைகள், பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஆகியனவும் மீன்களுக்கு உணவாகக் கிடைக்கும். நெல் வயலில் மீன்களை வளர்க்கும் போது, இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக் கூடாது. இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேப்ப எண்ணெய், பஞ்சகவ்யா, இலைச்சாறுகள் ஆகியவற்றைத் தெளிக்கலாம்.

நெல் அறுவடைக்காலம் வந்ததும் பாசனத்தை நிறுத்தி விட வேண்டும். கால்வாயில் மட்டும் நீர் இருக்க வேண்டும். நெல் அறுவடை முடிந்ததும் கால்வாயிலுள்ள நீரை வடிகட்டி விட்டு மீன்களை அறுவடை செய்யலாம். நெல் வயலில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் ஐந்து மாதத்தில் 500-600 கிராம் எடையுள்ள மீன்களாக வளர்ந்திருக்கும். மொத்தத்தில் ஒரு ஏக்கரில் 400- 500 கிலோ மீன்களை அறுவடை செய்யலாம். இதனால், ஒரு ஏக்கரில் மீன்களின் மூலமாக மட்டும் ரூ.20-25 ஆயிரம் வரை இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இதனால் வயலின் மண்வளமும் காக்கப்படுவதால் 15 விழுக்காடு வரை நெல் மகசூலும் கூடும்.


முனைவர் பெ.முருகன், பா.குமாரவேல், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks