கத்தரியில் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கத்தரி BRINJAL

செய்தி வெளியான இதழ்: 2014 ஜூன்.

த்தரியைப் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கத்தரித் தோட்டங்களில் தண்டு மற்றும் காய்த் துளைப்பான் தாக்குதல் பரவலாகத் தென்பட்டு, 60-70 சத மகசூல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. கத்தரிக்காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை, அதாவது, உழவியல், உயிரியல், கைவினை, இரசாயன முறைகளைக் கையாள வேண்டும்.

சேத அறிகுறிகள்

இளம் குருத்து வாடிக் காணப்படும். நடுக்குருத்துக் காய்ந்து விடும். குருத்து மற்றும் காய்களைத் துளைத்து அவற்றுள் உள்ள திசுக்களை உண்டு கழிவைத் துளைக்கு வெளியே தள்ளும். மொக்கு மற்றும் சிறு காய்கள் உதிர்ந்து விடும். இலைகள் வாடிக் காய்ந்து விடும்.

பூச்சி விவரம்

முட்டை, வெண்மையாக இருக்கும். புழு, சிவப்புக் கலந்த ஊதா நிறத்தில் பழுப்புத் தலையுடன் இருக்கும். கூட்டுப்புழு சாம்பல் நிறத்தில், படகு வடிவப் பட்டுக்கூட்டைப் போல இருக்கும். பூச்சி, நடுத்தரமான அந்துப் பூச்சியாக இருக்கும். இதன் முன் இறக்கைகள் முக்கோண வடிவத்தில், பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். பின் இறக்கைகள் வெள்ளையாகக் கரும் புள்ளிகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

உழவியல் முறைகள்: பாதிக்கப்பட்ட அல்லது சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித் தண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும். ஒரே நிலத்தில் தொடர்ந்து கத்தரியைப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். உட்பரவல் அதிகமாக உள்ள இடங்களில் நீளம் மற்றும் குறுகலான காயுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். கத்தரி வயலைச் சுற்றிலும் இரு வரிசைகளில் மக்காச்சோளத்தைப் பொறிப்பயிராக இட்டு, காய்த் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். தோட்டத்தைச் சுற்றியுள்ள காய்த் துளைப்பானுக்கு இலக்காகும் கத்தரிக் குடும்பக் களைகளை அகற்றிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பூச்சிகள் பெருகுவதைக் கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் முறைகள்: எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகளை அமைக்க வேண்டும்.

பேக்டீரியா நோய்க் கிருமியான பேசிலஸ் துருன்ஐியென்சிஸ் வகை க்ருஸ்டஸ்கியை, எக்டருக்கு 1,500 மி.லி. தெளிக்க வேண்டும். 750 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். நடவு செய்த 30 நாட்களில் இருந்து டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை, எக்டருக்கு 50,000 முட்டைகள் வீதம் நான்கு முறை விட வேண்டும். ஐந்து சத வேப்பங்கொட்டை வடிநீரைத் தெளிக்க வேண்டும்.

இனக்கவர்ச்சிப் பொறி

இரசாயன முறைகள்: செயற்கை பயிரித்ராய்டைத் தவிர்க்க வேண்டும். காய்கள் முதிர்ந்த மற்றும் அறுவடை நேரங்களில் பூச்சிக்கொல்லியைத் தவிர்க்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி அசாடிராக்டின் 1.0% EC அல்லது 5 கிராம் அசாடிராக்டின் 0.03% WSP அல்லது ஒரு மில்லி க்லோர்பைரிபாஸ் 20% EC அல்லது 7 மில்லி டைமெத்தொயேட் 30 % EC அல்லது 1.5 மில்லி போசலோன் 35 % EC அல்லது 1.5 மில்லி குயினால்பாஸ் 25 % EC அல்லது 2 மில்லி தயோடிகார்ப் 75 % WP அல்லது 1 மில்லி தயோடிகார்ப் 75 % WP அல்லது 1 மில்லி தயோமெட்டான் 25 % EC அல்லது 1 மில்லி டிரைக்லோரோபான் 50 % EC அல்லது 2.5 மில்லி டிரையாசோபாஸ் 40 % EC வீதம் கலந்து தெளிக்கலாம்.

மேலும்,

இரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, பரிந்துரை செய்த அளவுகளில் சரியான அளவில் நீரைக் கலந்து உரிய இடைவெளியில் தெளித்தால் நல்ல பலனைப் பெறலாம்.


முனைவர் காயத்ரி சுப்பையா, முனைவர் பா.குமாரவேல் வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading