செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர்.
தமிழகத்தில் நெல் சாகுபடி, இறவை, மானாவாரி, பகுதி மானாவாரியாக நடைபெற்று வருகிறது. இதில், பூச்சி, நோய்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிர், நாற்று அல்லது இளம் பருவமாக இருக்கும் போது, தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்தல், வானம் மேக மூட்டமாக இருத்தல், ஈரமான காற்று மிதமாக வீசுதல் போன்ற நிலைகளில் படைப்புழுவின் தாக்குதல் வெகுவாக இருக்கும்.
இந்தப் புழுக்கள் மாலையில் தொடங்கி இரவு நேரத்தில், கூட்டம் கூட்டமாக நாற்றுகள் மற்றும் இளம் பயிர்களின் குருத்துகளை உண்ணும். தாக்குதல் தீவிரமானால், நன்றாக இருந்த பயிர்களை, ஒரே நாள் இரவில் ஆடு மாடுகள் மேய்ந்ததைப் போல ஆக்கி விட்டு, அடுத்த வயலுக்குக் கூட்டமாகக் கிளம்பி விடும்.
இரவில் பயிரைச் சேதப்படுத்தும் இப்புழுக்கள், விடிந்ததும் மண்ணுக்குள் சென்று விடும். வயலில் பயிர்கள் சேதமாகி, தண்டுகள், தூர்கள் மட்டுமே இருப்பதை வைத்தும், இந்தப் புழுக்களின் கழிவை வைத்தும், இவற்றின் தாக்குதலை அறியலாம்.
இளம் புழுக்கள் மங்கிய பச்சை நிறத்தில், மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளைக் கோடுகளுடன் இருக்கும். வளர்ந்த புழுக்கள், அடர் பழுப்பு, சாம்பல் கலந்த பச்சையாக இருக்கும்.
புழுக்களின் பக்கவாட்டில், கறுப்புப் புள்ளிகள் இருக்கும். இவற்றின் அந்துப் பூச்சிகள், நடுத்தர அளவில் பருமனாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகளில் நன்கு படர்ந்த முக்கோண வடிவில் கரும் புள்ளிகள் தென்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
வயல் களைகளை, குறிப்பாகப் புல் மற்றும் கோரையை அகற்ற வேண்டும். மாலையில் விளக்குப்பொறி மூலம் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். வயல் ஓரங்களில் சிறிய மரக் கிளைகளைப் பரப்பி, இவற்றில் வந்து தங்கும் புழுக்களைப் பொறுக்கி அழிக்க வேண்டும். வயலில் வாத்துகளை விட்டால், புழுக்களை உண்டு விடும். வயலில் நீரைத் தேக்கிப் புழுக்களை அழிக்கலாம்.
இயற்கை எதிரிகள் இப்பூச்சிகளைத் தாக்கி அழிக்கும். குளவிகள் நடமாட்டம் நிறையத் தெரிந்தால், இரசாயன மருந்துகளைத் தெளிக்கக் கூடாது. வயலில் பறவைத் தாங்கிகளை வைத்து, பறவைகள் மூலம் இப்புழுக்களை அழிக்கலாம்.
தீவிரத் தாக்குதல் உள்ள வயலைத் தனிமைப்படுத்த வேண்டும். அதாவது, அந்த வயலைச் சுற்றி ஒரு அடி ஆழத்தில் வாய்க்காலை அமைத்தால், அதற்குள் விழும் புழுக்கள் அங்கிருந்து அடுத்த வயலுக்குச் செல்ல முடியாமல் அங்கேயே கிடக்கும். அப்போது வாய்க்காலில் சாம்பலைப் பரவலாகத் தூவி, இப்புழுக்களை அழிக்கலாம்.
இந்தப் புழுக்களுக்கு நீந்தத் தெரியாது. எனவே, இரண்டு பேர் எதிரெதிர்த் திசையில் இருந்து கொண்டு நீண்ட கயிற்றைப் பயிரின் மேற்பரப்பில் இழுத்துச் சென்றால், புழுக்கள் நீரில் விழுந்து விடும்.
இந்த நேரத்தில் ஏக்கருக்கு 800 மில்லி வீதம் ம.எண்ணெய்யை வயலில் கலந்து விட்டால், புழுக்கள் இறந்து விடும். குளோர்பைரிபாஸ் 1.5 சதத் தூள் மருந்தை, வயலின் ஓரம், வரப்பு மற்றும் களைகளில் தூவ வேண்டும்.
பூச்சி மருந்துகளை மாலையில் தெளிக்க வேண்டும். புழுக்களின் தாக்குதல் தெரிந்ததும் ஏக்கருக்கு, டைக்குளோர்வாஸ் 76% எஸ்.சி. 188 கிராம் அல்லது குயினால்பாஸ் 25% இ.சி. 800 மில்லி அல்லது டிரைஅசோபாஸ் 40% இ.சி. 400 மில்லி வீதம் தெளிக்கலாம்.
குளோர்பைரிபாஸ் 1.5 சத மருந்தை, ஏக்கருக்கு 10 கிலோ வீதம், பயிர்களின் வளர்ச்சியைப் பொறுத்துத் தூவ வேண்டும். இளம் பயிர்களில் தூவக் கூடாது. இந்த முறைகளை விவசாயிகள் கூட்டாகச் செயல்படுத்தினால், படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
முனைவர் ஜெ.இராம்குமார், முனைவர் த.தாமோதரன், முனைவர் ந.சாத்தையா, முனைவர் ச.ஆரோக்கியமேரி, வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் – 623 503.
சந்தேகமா? கேளுங்கள்!