பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. அதனால், நிறைவான உற்பத்திக் கிடைத்ததுடன் மண்வளமும் காக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிக விளைச்சலைத் தரக்கூடிய, இரசாயன உரங்களால் கூடுதல் பயனைத் தரக்கூடிய இரகங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்வளம் குறைந்ததோடு, மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் குறையத் தொடங்கின.
எனவே, இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை, வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது, இயற்கை உரங்களில் மிக முக்கியமானது. இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாகக் கொள்ளும் மண் புழுக்கள், அவற்றைத் தமது குடலிலுள்ள நுண்ணுயிர்கள் மற்றும் நொதிகள் மூலம் செரிக்க வைத்து, சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளும் கட்டிகளே மண்புழு உரமாகும்.
மண்புழு உரத்தின் பயன்கள்
நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் கூடும். மண்ணின் நீர்ப்பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதி அதிகமாகும். தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண் சத்துகளின் பயன்பாடு அதிகமாகும். பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்ஸின் மற்றும் பலவகை நொதிகள் உள்ளன.
மற்ற மட்கு உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். பயிர்கள் செழிப்பாக வளரவும், அதிக மகசூல் கிடைக்கவும் வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. மண்புழு உரத் தயாரிப்பைத் தொழிலாக மேற்கொண்டால் வருவாயும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஒரு கிலோ மண்புழு உர உற்பத்திக்கான செலவு ரூ.1.50 ஆகும்.
மண்புழு உர உற்பத்திக் கட்டமைப்பு
ஒரு சிமென்ட் தொட்டி, 2 அடி உயரம், 3 அடி அகலத்தில் இருக்க வேண்டும். தொட்டியின் நீளமானது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். தொட்டியின் அடிப்பகுதி சாய்வாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமான நீரை வடிகட்ட ஏதுவாக, மண்புழு உரத்தொட்டிக்கு அருகில் சிறிய சேமிப்புக் குழி அவசியம். ஹாலோ ப்ளாக், செங்கல்லைப் பயன்படுத்தியும் மண்புழு உரத்தொட்டியை அமைக்கலாம். இம்முறையில், சரியான அளவில் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியும்.
மண்புழு உர உற்பத்திப் படுக்கை
நெல் உமி அல்லது தென்னைநார்க் கழிவு அல்லது கரும்புத் தோகைகளை, மண்புழு உர உற்பத்திக் கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரம் பரப்ப வேண்டும். அதற்கு மேல் 3 செ.மீ. உயரம் ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். பிறகு, 3 செ.மீ. உயரத்தில் தோட்டக்கால் மண்ணைப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் நீரைத் தெளிக்க வேண்டும்.
கழிவுகளைப் படுக்கையில் போடும் முறை
பாதியளவு மட்கிய கழிவுகளை, 30% கால்நடைக் கழிவுடன் கலக்க வேண்டும். இக்கலவையை, மண்புழு உர உற்பத்திக் கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும். ஈரப்பதம் 60% இருக்க வேண்டும். இதில், மண் புழுக்களை விட வேண்டும். ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரமுள்ள கழிவில் இரண்டு கிலோ மண் புழுக்கள், அதாவது, 2,000 புழுக்களை விட வேண்டும். இந்தப் புழுக்களை, கழிவுக்குள் தான் விட வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. மேலாக விட்டாலே போதும்.
நீர்த் தெளிப்பு முறை
மண் புழுக்கள் உள்ள கழிவில் தினமும் நீரைத் தெளித்து வர வேண்டும். அதாவது, கழிவில் 60% ஈரப்பதம் இருக்க வேண்டும். நீரைத் தெளிக்க வேண்டுமே தவிர ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன் நீர்த் தெளிப்பை நிறுத்தி விட வேண்டும்.
மண்புழு உரத்தை ஊட்டமேற்றுதல்
அசிட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா, சூடோமோனாஸ் போன்ற உயிர் உரங்கள் மூலம், மண்புழு உரத்தை ஊட்டமேற்றலாம். இதனால், பயிர்ச் சத்துகள் மற்றும் உயிர்ச் சத்துகள் அதிகரிக்கும். மேலும், நன்மை தரும் உயிரிகள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் பெருகும். ஒரு டன் கழிவுக்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியா) வீதம், இருபது நாட்களுக்குப் பின் மண்புழுப் படுக்கையில் சேர்க்கலாம்.
மண்புழுக் குளியல் நீர் உற்பத்தி
பெரிய மண்பானை அல்லது பிளாஸ்டிக் உருளையைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் அடிப்பகுதியில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள் மற்றும் மணலை நிரப்ப வேண்டும். இதற்கு மேல், நன்றாக மட்கிய பண்ணைக் கழிவு மற்றும் மாட்டு எருவை மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.
இதன் மேல் 500 மண் புழுக்களை விட வேண்டும். பிறகு, பானை அல்லது உருளையின் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து, சொட்டுச் சொட்டாக நீரை விழச் செய்ய வேண்டும். இவ்வகையில், தினமும் 4-5 லிட்டர் நீரைக் கழிவில் விட வேண்டும். இப்படிச் செய்தால், பத்து நாட்களுக்குப் பிறகு, தினமும் 3-4 லிட்டர் மண்புழுக் குளியல் நீரை உற்பத்தி செய்யலாம்.
ஒரு லிட்டர் மண்புழுக் குளியல் நீரை, பத்து லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் வளர்ச்சி ஊக்கியாகத் தெளிக்கலாம், ஒரு லிட்டர் மண்புழுக் குளியல் நீரை, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து, பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.
மண்புழு உற்பத்தி
சிறிய துளையுள்ள மண் பானையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், காய்ந்த இலைகள் மற்றும் மாட்டுச் சாணத்தைச் சமமாகக் கலந்து போட வேண்டும். அடுத்து, 10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட்டு, பானையை ஈரக்கோணியால் மூடி வைக்க வேண்டும்.
நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஈரப்பதம் 50-60% இருக்க வேண்டும். இப்படிச் செய்தால், 50-60 நாட்களில், 50 லிருந்து 250 மண் புழுக்கள் உருவாகி விடும்.
மண்புழு உரத்திலுள்ள சத்துகள்
மண்புழு உரத்திலுள்ள சத்துகளின் அளவு, நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களைப் பொறுத்தே அமையும். பொதுவாக மண்புழு உரத்தில் 15-21% அங்ககக் கரிமம், 0.5-2% தழைச்சத்து, 0.1-0.5% மணிச்சத்து, 0.5-1.5% சாம்பல் சத்து இருக்கும். மேலும், இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு, உயிர்ச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கும்.
ஒரு எக்டருக்கு 5 டன் மண்புழு உரம் போதும். இந்த உரத்தில் 1.5% தழைச்சத்து, 0.5% மணிச்சத்து, 0.8% சாம்பல் சத்து மற்றும் 10-12% அங்ககக் கரிமப் பொருள்களும் இருக்கும். அதாவது, ஒரு எக்டரில் இடப்படும் மண்புழு உரத்தில், 75 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து இருக்கும்.
இவை, 160 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 60 கிலோ பொட்டாசுக்குச் சமமாகும். ஆண்டுதோறும் எக்டருக்கு 5 டன் மண்புழு உரத்தை இட்டால், மண்ணின் அங்ககப் பொருள்கள் 0.05% அதிகமாகும்.
மண்புழு உரப் பரிந்துரை
ஒரு ஏக்கர் நெல், கரும்பு, வாழைக்கு, 2,000 கிலோ மண்புழு உரம் தேவை. ஒரு ஏக்கர் மிளகாய், கத்தரி, தக்காளிக்கு, 1,000 கிலோ, ஒரு ஏக்கர் நிலக்கடலை, பயறு வகைகளுக்கு, 600 கிலோ, ஒரு ஏக்கர் மக்காச்சோளம், சூரியகாந்திக்கு, 1,000 கிலோ மண்புழு உரம் தேவைப்படும்.
தென்னை மரம், பழ மரங்கள் எனில், மரத்துக்கு 10 கிலோ, மற்ற மரங்கள் எனில், மரத்துக்கு 5 கிலோ, மாடித் தோட்டச் செடிகள் எனில், செடிக்கு 2 கிலோ வீதம் இட வேண்டும். மல்லிகை, முல்லை, ரோஜாச் செடிகள் எனில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 500 கிராம் வீதம் இட வேண்டும்.
மண்புழு மட்குரம் அதிகளவில் விற்பனைக்கு இருந்தாலும், அதன் அதிகப்படியான விலையால், சிறு குறு விவசாயிகள் அதை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, மண்புழு உரத்தை விவசாயிகள் அவர்களின் பண்ணைகளிலேயே தயாரித்தால், மண்வளத்தைக் காத்து மகசூலைப் பெருக்க முடியும். மண்புழு உரத் தயாரிப்புக் குறித்த பயிற்சியை விவசாயிகள் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்.
முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் ப.யோகமீனாட்சி, முனைவர் வி.எ.விஜயசாந்தி, முனைவர் சி.பானுமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர்.
முனைவர் தனுஸ்கோடி, வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்.
சந்தேகமா? கேளுங்கள்!