பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர் Baccelli EC scaled

யறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம்.

இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பும் முக்கியமானது. சரியான பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால், இவற்றில் இருந்து பயிர்களைப் பாதுகாத்து அதிக மகசூலைப் பெற முடியும்.

தமிழ்நாட்டில், நெல் தரிசு, கார் மற்றும் கோடையில் பயிரிடப்படும் பயறு வகைகளில் நச்சுயிரி நோய்கள் அதிகமாகத் தோன்றுகின்றன. இவற்றால் மகசூல் இழப்பு ஏற்படுவதால், இவற்றைத் தடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆகவே, விவசாயிகள் அவரவர் விருப்பம் போல் செயல்படாமல், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றிப் பயிர்களைப் பாதுகாக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோய்

முங்பீன் மஞ்சள் தேமல் நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படும் பயிர்கள், உளுந்து, பாசிப்பயறு, துவரை. நோய் ஏற்படும் பருவத்தைப் பொறுத்து மகசூல் இழப்பு 10 முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.

அறிகுறிகள்: முதல் அறிகுறியாக இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் காணப்படும். பிறகு, இலை முழுவதும் திட்டுத் திட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகள் தோன்றும்.

சில சமயம், நோயுற்ற இலைகள் சிறுத்தும், சுருங்கியும் இருக்கும். நாளடைவில், மஞ்சள் நிறப்பகுதி கூடிக் கொண்டே வந்து, துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும்.

நோயுற்ற செடிகள் தாமதமாகக் காய்ப்புக்கு வரும். குறைந்தளவில் பூக்கள் மற்றும் காய்கள் உருவாகும். காய்கள் சிறியதாக இருக்கும். சில நேரங்களில் காய்களும் விதைகளும் மஞ்சளாக மாறிவிடும்.

பயிரின் தொடக்க வளர்ச்சிப் பருவத்தில் நோய் ஏற்பட்டால், விதைகள் உருவாகும் முன்பே செடிகள் இறந்து விடும். இதனால், முழு மகசூல் இழப்பு ஏற்படும்.

நோய்க்காரணி பரவும் விதம்: இந்த நச்சுயிரி, பெகோமோ நச்சுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது, பெமிசியா டெபாசி என்னும் வெள்ளை ஈக்கள் மூலம் பரவும்.

களைச் செடிகளான குரோடான் ஸ்பார்சி்ப்ளோரஸ், அகாலி்பா இன்டிகா, எக்லிப்டா ஆல்பா மற்றும் இதர பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களில் தங்கி வாழும்.

மேலாண்மை: பாதிக்கப்பட்ட செடிகளை, விதைத்த 25 முதல் 45 நாட்கள் வரை அகற்ற வேண்டும். ஏக்கருக்குப் பத்துக் கிலோ விதைகளை விதைத்து, பயிர் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களைச் செடிகளை அகற்ற வேண்டும். நோயெதிர்ப்பு மிக்க வம்பன் 9, 10, 11 உளுந்து மற்றும் வம்பன் 5 பாசிப்பயறு இரகங்களைப் பயிரிடலாம்.

கோடையில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், ரபி பருவத்தில் பயிரிடலாம். கலப்புப் பயிராக, ஒவ்வொரு 15 வரிசைக்கு அடுத்து இரண்டு வரிசைகளில் 60×30 செ.மீ. இடைவெளியில் மக்காச்சோளம் அல்லது 45×15 செ.மீ. இடைவெளியில் சோளம் அல்லது கம்பைப் பயிரிட வேண்டும்.

ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் ஒட்டுப் பொறிகள் வீதம் வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ் மற்றும் 300 மி.லி. நொச்சி இலைச்சாறு வீதம் எடுத்துக் கலந்து விதை நேர்த்தி செய்து, அரைமணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பிறகு, ஒரு கிலோ விதைகளுக்கு 5 மி.லி. இமிடாகுளோபிரிட் 600 எப்.எஸ். மருந்து வீதம் கலந்து விதைக்க வேண்டும்.

விதைத்து முப்பது நாட்கள் கழித்து, 10 சத நொச்சியிலைச் சாறு, 0.1 சத போராக்ஸ் தூள் வீதம் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும்.

ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ், மட்கிய நூறு கிலோ தொழுவுரம் வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமிபிரிட் 20 எஸ்.பி. பூச்சிக்கொல்லி வீதம் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீதாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 ஈசி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் ஈசி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

தேமல் நோய்

தட்டைப்பயறு தேமல் நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படும் பயிர், தட்டைப்பயறு.

அறிகுறிகள்: வெவ்வேறு நச்சுயிரிகள் தட்டைப்பயிரைத் தாக்கும். இந்நோயால், இலைகளில் லேசான பச்சை மற்றும் அடர் பச்சை நிறம், மாறி மாறி ஏற்படும்.

இலை நரம்புகள் அடர் பச்சை நிறத்திலும், மற்ற பகுதிகள் வெளிர் பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இலைகளைத் தொட்டால் ரப்பரைப் போல இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும்.

மேலும், சிறுத்தும், நெளிந்தும் இருப்பதால், செடிகள் வளர்ச்சிக் குன்றி, புதரைப் போலக் காணப்படும். இச்செடிகளில் காய்கள் மிகக் குறைவாகவும், ஒழுங்கற்ற வடிவிலும் இருப்பதால், அவற்றில் தோன்றும் விதைகளும் சிறுத்து உருமாறிக் காணப்படும். இதனால், பெரியளவில் மகசூல் இழப்பு ஏற்படும்.

நோய்க்காரணி பரவும் விதம்: இந்த நச்சுயிரி, ஏபிஸ் கிரேக்கிவோரா, ஏ.பேபே, ஏ.காசிப்பியை, மேக்ரோசி்பம் யூபோர்பியே, மைசஸ் பெர்சிகே போன்ற அசுவினி வகைகளால் பரவும். இந்த நச்சுயிரி, களைகள் மற்றும் இதர பயறுவகைக் குடும்பத்தைச் சார்ந்த பயிர்களில் தங்கிப் பரவும்.

மேலாண்மை: தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும். வயலிலுள்ள களைச்செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். நோயுற்ற செடிகளை விதைத்த முப்பது நாட்கள் வரை பிடுங்கி அழிக்க வேண்டும்.

அதிகமான விதைகளை, அதாவது, ஏக்கருக்கு 10 கிலோ வீதம் விதைத்துப் பயிர்களின் எண்ணிக்கையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்நோயின் தாக்குதல் கோடையில் அதிகமாக இருப்பதால், ரபி பருவத்தில் பயிரிடலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து, மட்கிய நூறு கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

நோயைப் பரப்பும் அசுவினியைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 70 கிராம் தயாமீதாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடா குளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல்.
அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 ஈ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் ஈ.சி. மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலை நெளிவு நோய்

இலை நெளிவு நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படும் பயிர்கள்: உளுந்து, பாசிப்பயறு. இந்நோயால், 60 சதம் முதல் 100 சதம் வரை இழப்பு ஏற்படும்.

அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட செடிகளில் இலைகள் நெளிந்து கரும்பச்சை அல்லது வெளிரிய நிறத்தில் கெட்டியாக இருக்கும். இலைகள் வளைந்தும் நெளிந்தும் இருக்கும்.

இடைக்கணு மற்றும் இலைக்காம்புக்கு இடையிலான இடைவெளி மிகக் குறைவாக இருக்கும். நோயுற்ற பயிர்கள் வளர்ச்சிக் குன்றிப் புதரைப் போல இருக்கும். பூக்கும் காலம் தள்ளிப் போகும். பூக்கள் உருமாறி, சிறியதாக, பூ மொக்குகள் விரியாமல் இருக்கும்.

நோய்க்காரணி பரவும் விதம்: இந்த நச்சுயிரி, விதை மூலம் பரவி முதல் நிலை நோயை உருவாக்கும். இரண்டாம் நிலை நோய்ப் பரவல், வெள்ளை ஈக்கள் மூலம் நடைபெறும்.

சாறுறிஞ்சிப் பூச்சிகள் மூலம் பரவும். அரிஸ்டோ லோக்கியா, பிரேக்டியேட்டா, டிஜிட்டோரியா ஆர்வன்சிஸ் போன்ற களைச் செடிகள் மற்றும் இதர பயறுவகைப் பயர்களில் தங்கி வளரும்.

மேலாண்மை: பாதிக்கப்பட்ட செடிகளை, விதைத்த 25 முதல் 45 நாட்கள் வரை அகற்ற வேண்டும். ஏக்கருக்குப் பத்துக் கிலோ விதைகளை விதைப்பதன் மூலம் பயிர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

களைச் செடிகளை அகற்ற வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியுள்ள வம்பன் 9, 10, 11 உளுந்து மற்றும் வம்பன் 5 பாசிப்பயறு இரகங்களைப் பயிரிடலாம். கோடையில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், ரபி பருவத்தில் பயிரிடலாம்.

கலப்புப் பயிராக, ஒவ்வொரு 15 வரிசைக்கு அடுத்து இரண்டு வரிசைகளில் 60×30 செ.மீ. இடைவெளியில் மக்காச்சோளம் அல்லது 45×15 செ.மீ. இடைவெளியில் சோளம் அல்லது கம்பைப் பயிரிட வேண்டும்.

ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் ஒட்டுப்பொறிகள் வீதம் வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ் மற்றும் 300 மி.லி. நொச்சி இலைச்சாறு வீதம் எடுத்துக் கலந்து விதை நேர்த்தி செய்து அரைமணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ விதைகளுக்கு 5 மி.லி. இமிடா குளோபிரிட் 600 எப்.எஸ். பூச்சிக்கொல்லி வீதம் கலந்து விதைக்க வேண்டும்.

விதைத்து முப்பது நாட்கள் கழித்து, 10 சத நொச்சியிலைச் சாறு, 0.1 சத போராக்ஸ் தூள் வீதம் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ், மட்கிய நூறு கிலோ தொழுவுரம் வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமிபிரிட் 20 எஸ்.பி. பூச்சிக்கொல்லி வீதம் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீதாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடா குளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 ஈசி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் ஈசி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

இலைச்சுருட்டை அல்லது மொட்டுக் கருகல் நோய்

நிலக்கடலை மொட்டுக் கருகல் நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படும் பயிர்கள், உளுந்து, பாசிப்பயறு.

அறிகுறிகள்: முதலில் இலைகள் மேல் நோக்கி கிண்ணம் போல வளையும். இலைகள் வளைந்து, நெளிந்து சுருண்டிருக்கும். இலை நரம்புகள் வெளிரி இருக்கும்.

இலைகள் சுருண்டு இருப்பதால் அவற்றின் ஓரங்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் கீழ் நோக்கி வளைந்து மொரமொரப்பாக இருக்கும். இலைகளின் நரம்புப் பகுதியில் உள்ள திசுக்கள் தாக்கப்படுவதால் இலைகள் காய்ந்து விடும்.

பிறகு, இலைக்காம்பும் தாக்கப்படும். தொடக்க நிலையில் தாக்கப்பட்ட பயிரின் நுனி கருகி விடும். செடியில் ஒரு சில காய்களே உருவாகும். அக்காய்கள் உருமாறி இருக்கும். முடிவில் அதிகளவில் மகசூல் இழப்பு ஏற்படும்.

நோய்க்காரணி பரவும் விதம்: இந்த நச்சுயிரி டாஸ்போ நச்சுயிரிக் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ப்ரேங்க் ளீனியெல்லா சுலட்சி, திரிப்ஸ் டெபாசி மற்றும் சிர்டோதிரிப்ஸ் டார்சாலிஸ் போன்ற இலைப் பேன்கள் மூலம் பரவும். களைச்செடிகள், தக்காளி, பெடுனியா மற்றும் மிளகாய்ச் செடிகளில் தங்கி வாழும்.

மேலாண்மை: பாதிக்கப்பட்ட செடிகளை, விதைத்த 25 முதல் 45 நாட்கள் வரை அகற்ற வேண்டும். ஏக்கருக்குப் பத்துக் கிலோ விதைகளை விதைத்து, பயிர்க எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

களைச் செடிகளை அகற்ற வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியுள்ள வம்பன் 9, 10, 11 உளுந்து மற்றும் வம்பன் 5 பாசிப்பயறு இரகங்களைப் பயிரிடலாம்.

கோடையில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், ரபி பருவத்தில் பயிரிடலாம். கலப்புப் பயிராக, ஒவ்வொரு 15 வரிசைக்கு அடுத்து இரண்டு வரிசைகளில் 60×30 செ.மீ. இடைவெளியில் மக்காச்சோளம் அல்லது 45×15 செ.மீ. இடைவெளியில் சோளம் அல்லது கம்பைப் பயிரிட வேண்டும்.

ஏக்கருக்கு ஐந்து மஞ்சள் ஒட்டுப்பொறிகள் வீதம் வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு கிலோ விதைகளுக்கு 2 கிராம் போராக்ஸ் மற்றும் 300 மி.லி. நொச்சி இலைச்சாறு வீதம் எடுத்துக் கலந்து விதை நேர்த்தி செய்து அரைமணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

பிறகு, ஒரு கிலோ விதைகளுக்கு 5 மி.லி. இமிடா குளோபிரிட் 600 எப்.எஸ். பூச்சிக்கொல்லி மருந்து வீதம் கலந்து விதைக்க வேண்டும்.

விதைத்து முப்பது நாட்கள் கழித்து, 10 சத நொச்சியிலைச் சாறு, 0.1 சத போராக்ஸ் தூள் வீதம் கலந்து இலைகளில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ், மட்கிய நூறு கிலோ தொழுவுரம் வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால், ஏக்கருக்கு 100 கிராம் அசிட்டாமி பிரிட் 20 எஸ்.பி. பூச்சிக்கொல்லி வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு 70 கிராம் தயாமீதாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடா குளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல். அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 ஈசி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் ஈசி. மருந்தை, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

மலட்டுத் தேமல் நோய்

துவரை மலட்டுத் தேமல் நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படும் பயிர் துவரை. இந்நோய், 95 சதம் வரை இழப்பை ஏற்படுத்தும். இது, 1931 இல் பீகார் மாநிலத்தில் முதன் முதலாக அறியப்பட்டது.

இளம் பயிரில் இந்நோய் தோன்றினால் மகசூல் கிடைக்காது. விதைத்த 45 நாளில் தோன்றினால், காய்கள் உண்டாகாமல் செடிகள் மலடாக இருக்கும்.

அறிகுறிகள்: தொடக்கத்தில் இலை நரம்புகளைச் சுற்றி வெளுத்து மஞ்சளாகக் காணப்படும், நாளடைவில் இலைகளில் ஆங்காங்கே இளமஞ்சள் வளையம் தோன்றித் தேமல் வடிவில் இருக்கும்.

இலைகளில் அடர் பச்சை, வெளிர் பச்சை மற்றும் இளமஞ்சள் நிறம் மாறிமாறிக் காணப்படும். இலைகள் கடினமாக இருக்கும். இலைகள் சுருங்குதல், இலைப்பரப்புக் குறைதல் மற்றும் கிளைக் கணுக்கள் குறைந்து விடுவதால் செடியானது குட்டையாக இருக்கும்.

மேலும் இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டால் வளர்ச்சிக் குன்றிக் குட்டையாக இருக்கும். இலைகள் அடர்ந்து அருகருகே இருப்பதால் செடியின் தலைப்பகுதி புதரைப் போலத் தெரியும்.

வளர்ந்த செடிகள் பாதிக்கப் பட்டால் தேமல் அறிகுறிகள் மட்டும் இருக்கும். இதனால், முற்றிலும் அல்லது பாதியளவில் பூப்பிடித்தல் பாதிக்கப்பட்டு, செடிகள் மலடாக இருக்கும்.

நோய்க்காரணி பரவும் விதம்: இந்த நச்சுயிரி, அசரியா கஜானி என்னும் எரியோபிட் சிலந்தி மூலம் பரவும். மேலும், நோயுற்ற நிலையில் உள்ள துவரை மற்றும் களைச் செடிகளில் தங்கியிருந்து பரவும்.

மேலாண்மை: பயிரின் தொடக்க நிலையில் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழிக்க வேண்டும். நோய் அறிகுறிகள் தெரிந்தால், ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. பெனாசாகுயின் 10 சதம் ஈ.சி. வீதம் எடுத்துத் தெளித்தால், எரியோபிட் சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நோய்ப் பரவலைத் தடுக்கலாம்.

பயிர்க்குட்டை நோய்

பயிர்க்குட்டை நோய் நச்சுயிரி. இதனால் பாதிக்கப்படுவது கொண்டக்கடலை.

அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட பயிர்கள் வளர்ச்சிக் குன்றி, கணு இடைவெளி குறைந்து, புதரைப் போலத் தெரியும். இலைகள் சிறுத்து, மஞ்சள், ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பயிர்கள் முதிர்வதற்கு முன்பே வாடி இறந்து விடும். சாற்றுக் குழாய்த் தொகுப்பிலுள்ள ப்ளோயம் செல்கள் பழுப்பு நிறத்தில் மாறியிருக்கும்.

நோய் பரவும் விதம்: ஏபிஸ் கிரேக்கிவோரா என்னும் அசுவினிப் பூச்சிகள் மூலம் இந்நோய் பரவும்.

மேலாண்மை: தரமான விதைகளை விதைக்க வேண்டும். நிலத்தில் களைகள் இருக்கக் கூடாது. நோயுற்ற செடிகளை, விதைத்த முப்பது நாட்கள் வரை பிடுங்கி அகற்ற வேண்டும்.

ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் வீதம் விதைத்து, பயிர்களின் எண்ணிக்கையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். கோடையில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், ரபி பருவத்தில் பயிரிடலாம்.

ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து, நன்கு மட்கிய நூறு கிலோ தொழுவுரத்தில் கலந்து வயலில் இட வேண்டும்.

நோயைப் பரப்பும் அசுவினியைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 70 கிராம் தயாமீதாக்சம் 25 சதம் டபிள்யு.சி. அல்லது 100 மி.லி. இமிடா குளோபிரிட் 17.8 சதம் எஸ்.எல்.

அல்லது 100 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 ஈ.சி. அல்லது 100 மி.லி. டைமீத்தோயேட் 25 சதம் ஈ.சி. அல்லது 400 மி.லி. மோனோ குரோட்டாபாஸ் 25 சதம் எஸ்.எல். வீதம் எடுத்து, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.


பயறுவகைப் பயிர் RAM JEGATHEESH 2 e1709466921740

முனைவர் இரா.இராம்ஜெகதீஷ், முனைவர் ஆ.யுவராஜா, தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading