இலைவழி நுண்ணுரத்தின் அவசியம்!

டல் நலம் காப்பதில் காய்கறிகள் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அதனால், காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாகி வருகிறது. எனவே, காய்கறிகளின் தேவையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது.

மேலும், மற்ற பயிர்களைக் காட்டிலும் காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம், குறைந்த காலத்தில் வருமானம், கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

எனவே, காய்கறிப் பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், உயர் மகசூலையும், தரமான காய்கறிகளையும் பெறுவதற்கான தொழில் நுட்பங்களில் ஒன்றான இலைவழி நுண்ணூட்டம் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சரியான அளவில், சரியான முறையில், சரியான நேரத்தில் அளிப்பது, உயர் மகசூல் மற்றும் நல்ல இலாபத்தைப் பெறுவதற்கு வழி வகுக்கும்.

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில், அந்தந்தப் பகுதிக்கேற்ப, மண்ணில் துத்தநாகம், போரான், இரும்பு போன்ற நுண் சத்துகளில் ஏதாவது ஒன்றின் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ஏறத்தாழ 50 சதத்துக்கும் மேலாக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

பெரும்பாலான விவசாயிகள் நுண் சத்துகளை இடுவதில்லை. தழை, மணி, சாம்பல் சத்துகளைத் தருகின்ற யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்றவற்றை மட்டுமே இடுகின்றனர். இதனால், சாகுபடிச் செலவு மிகுவதுடன் மகசூல் இழப்பும் உண்டாகிறது.

இந்த நிலையில் தான், சமச்சீர் உர மேலாண்மை, குறிப்பாக, இலைவழி நுண்ணூட்ட மேலாண்மை முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, துத்தநாகம், இரும்பு, தாமிரம், போரான், மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற நுண் சத்துகள் குறைந்தளவில் தேவைப் பட்டாலும், அவை, காய்கறிப் பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாகும்.

இந்த உரங்களைப் பயிர்களின் இலைகள் வழியாகக் கொடுக்க முடியும். இதைத் தான் இலைவழி நுண்ணூட்டம் தருதல் என்கிறோம். இப்படிக் கொடுப்பதால், 20-30% கூடுதல் மகசூல் மற்றும் தரமான காய்கறிகளைப் பெற முடியும்.

இந்தச் சத்துகள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை, மண்ணிலிருந்து சத்துகளை உறிஞ்சும் தன்மையைப் பயிர்களுக்குத் தருகின்றன. இதனால், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் குறைகிறது.

துத்தநாகம்

பயிர்களின் வளர்ச்சிக்குத் துத்தநாகம் மிகவும் முக்கியம். இது பற்றாக்குறை யானால், பயிர்களில் நல்ல வளர்ச்சி இருக்காது. இலை நரம்புகள் பச்சை நிறத்திலும், இலைப்பரப்பு வெளிரியும் இருக்கும். சரியான அளவில் துத்தநாகத்தை இலை வழியாகத் தெளித்தால் இக்குறைகளைப் போக்கலாம்.

சூப்பர் பாஸ்பேட், டிஏபி போன்ற உரங்களைத் தேவைக்கு அதிகமாக இட்டால், துத்தநாகப் பற்றாக்குறை உண்டாகும் வாய்ப்பு அதிகம். எனவே, மண்ணாய்வின் அடிப்படையில் பாஸ்பேட் உரங்களை இடுவது நல்லது.

இரும்பு

பயிர்களின் ஒளிச் சேர்க்கையில் இரும்புச் சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இது குறைந்தால், இளம் இலைகளும், முதிர்ந்த இலைகளும் மஞ்சளாக மாறி விடும். மகசூலில் கடும் பாதிப்பு ஏற்படும். இரும்புச் சத்தை இலைவழியாகத் தெளித்தால் இந்தக் குறைகள் நீங்கி மகசூல் கூடும்.

போரான்

பயிர்களின் மகரந்த உற்பத்தியில் போரானுக்கு முக்கியப் பங்கு உண்டு. மகரந்தக் குழலின் நீட்சியில் முக்கியப் பங்காற்றி, காய்கறிகள் உற்பத்திக்குத் துணை புரிகிறது.

போரான் பற்றாக்குறை ஏற்பட்டால், பூக்களும் காய்களும் உதிர்ந்து விடும். இதனால், மகசூல் இழப்பு உண்டாகும். போரானை இலை வழியாகத் தெளிப்பதன் மூலம், இந்தக் குறைகளைச் சரி செய்யலாம்.

காய்கறிச் சிறப்பு நுண்ணூட்டக் கலவை

காய்கறிப் பயிர்கள் சாகுபடியில், நுண் சத்துகளின் பற்றாக்குறையை ஒழித்து, விவசாயிகளின் பொருளாதார வசதியை உயர்த்தும் நோக்கில், பெங்களூரில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், காய்கறிச் சிறப்பு நுண்ணூட்டக் கலவையைத் தயாரித்து வெளியிட்டு உள்ளது. இது, இலைவழித் தெளிப்புக்கு மிகவும் உகந்தது.

இலைவழித் தெளிப்பின் பயன்கள்

நுண்ணுரங்களை இலை வழியாகத் தெளிப்பதால், சத்துகள் மண்ணில் தங்கி வீணாவது தவிர்க்கப்படும். நிலத்தில் இடும் உரங்கள் மண்ணரிப்பால் வீணாகலாம்.

ஆனால், இலைவழி உரத் தெளிப்பால் இந்த நிலையைத் தவிர்க்கலாம். உடனடியாகப் பயிர்களுக்குச் சத்துகள் கிடைக்கும். குறைந்த அளவே உரத்தேவை ஏற்படுவதால் செலவு குறையும். 20 முதல் 30% கூடுதல் மகசூல் கிடைக்கும். தரமான விளை பொருள்களும், அதிக விலையும் கிடைக்கும்.

பரிந்துரை அளவு

தக்காளி, மிளகாய், கத்தரி, முட்டைக்கோசு, பூக்கோசு, வெங்காயம்: 10 லிட்டர் நீருக்கு 50 கிராம் நுண்ணுரம் வீதம் கலக்க வேண்டும்.

பீன்ஸ், தட்டைப்பயறு, பட்டாணி, வெண்டை, கீரை வகைகள்: 10 லிட்டர் நீருக்கு 30 கிராம் நுண்ணுரம் வீதம் கலக்க வேண்டும்.

கொடிவகைக் காய்கறிகள்: 10 லிட்டர் நீருக்கு 10 கிராம் நுண்ணுரம் வீதம் கலக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பரிந்துரை செய்யப்பட்ட அளவு நுண்ணுரக் கலவையை 10 லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இந்தக் கலவையில் ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட வேண்டும்.

பிறகு, இத்துடன் ஒரு பொட்டல ஷாம்புவைக் கலந்து தெளிக்க வேண்டும்.

நடவு செய்து முப்பது நாளில் அல்லது 45 நாளில் முதல் தெளிப்பும், பிறகு, மாதம் ஒரு முறையும் தொடர்ந்து தெளிக்க வேண்டும். இலைகளின் அடிப்பாகம் நனையுமாறு தெளிப்பது நல்லது.


ந.இரமேஷ்ராஜா, தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், திருவண்ணாமலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!