புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவியர், கிராமப்புற அனுபவப் பயிற்சிக்காக, குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில், இரண்டு மாதங்கள் தங்கி உள்ளனர்.
இவ்வகையில், இந்த மாணவியர் இயற்கை வேளாண்மையைப் பற்றிய செயல்முறை கல்வியறிவுக்காக, நிஷா இயற்கை விவசாயப் பண்ணைக்குச் சென்று பார்வையிட்டனர். இங்கே, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பைப் பற்றித் தெரிந்து கொண்டனர்.
பண்ணை உரிமையாளர் நிஷா அவர்கள், பண்ணையச் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும், விளை பொருள்கள் விற்பனை குறித்த மாணவியரின் வினாவுக்குத் தெளிவாகப் பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால், உணவுச் சங்கிலியில் நஞ்சு கலந்து விட்டது. இதனால், பலவகைப் புற்று நோய்கள், காலநிலை மாறுபாடு, மண்வளம் குன்றுதல், சில உயிரினங்கள் முற்றிலுமாக அழிதல்,
இரசாயனப் பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மை, சிறுபான்மைப் பூச்சிகள் பெரும்பான்மைப் பூச்சிகளாக மாறுதல், சாகுபடிச் செலவுகள் அதிகரித்தல், விவசாயிகளின் தற்கொலை போன்ற பாதகங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, அனைவரும் இயற்கையோடு ஒன்றிய விஞ்ஞான உத்திகளைக் கொண்டு தரமான, அதிகப்படியான மகசூலை எடுக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். உயிர் உரங்கள், பசுந்தாள் உரம், பசுந்தழை உரம், மட்கிய இயற்கை உரம், பஞ்சகவ்யம், மீன் அமிலம், மண்புழு உரம் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்.
மேலும், கற்றாழை ஜெல், கறிவேப்பிலை பொடி, புளிச்சக்கீரைப் பொடி, பருப்புப்பொடி தேங்காய் எண்ணெய், செம்பருத்தித் தேயிலை தூள் போன்றவற்றை, இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
இந்த இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்வையிட்டதன் மூலம், மாணவியர் அங்கக வேளாண்மையைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டனர்.
தரணி முருகேஷ்
சந்தேகமா? கேளுங்கள்!