செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.
இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களில் மிகவும் முக்கியமானது தென்னை மரம். இதன் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. எனவே, பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருட்சம் எனப்படுகிறது.
2012-13 ஆண்டின் புள்ளி விவரப்படி, உலகின் 122 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி உள்ளது. இந்தியாவில் 21.36 இலட்சம் எக்டர் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன. இது, உலகளவில் மூன்றாவது இடமாகும். உலகளவில் நடக்கும் தேங்காய் உற்பத்தியில், 22,631 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்தும், உற்பத்தித் திறனில் எக்டருக்கு 10,615 காய்களை உற்பத்தி செய்தும் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
தமிழகத்தில் சுமார் 4.65 இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி நடக்கிறது. எக்டருக்கு 14,872 காய்கள் கிடைக்கின்றன. 6,917 மில்லியன் தேங்காய்கள் மொத்த உற்பத்தியாக உள்ளன.
செம்பான் சிலந்தி
தென்னையைத் தாக்கும் ஆசரியா கெர்ரரோனிஸ் என்னும் ஈரியோபைட் சிலந்தியின் தாக்குதல், முதன் முதலில் 1960-இல், மெக்சிகோவில் காணப்பட்டது. பிறகு, இலங்கையில் 1997 ஆம் ஆண்டிலும், இந்தியாவில் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டிலும் காணப்பட்டது. இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது.
செம்பான் சிலந்தியின் வரலாறு
இந்தச் சிலந்தி, மிகச்சிறிய மற்றும் வெளிரிய புழுவைப் போல இருக்கும். வளர்ந்த சிலந்தி 200 முதல் 250 மைக்ரான் வரை நீளமும், 36 முதல் 50 மைக்ரான் வரை அகலமும் உடையது. இதன் வாழ்க்கைப் பருவமானது, முட்டை, இரண்டு புழுப் பருவங்கள், வளர்ந்த சிலந்தி ஆகியவற்றைக் கொண்டது.
இதற்கு நான்கு கால்கள் இருக்கும். வாய், ஊசியைப் போலக் கூர்மையாக இருக்கும். பெண் சிலந்தி 50 முதல் 200 முட்டைகள் வரை இடும். இந்த முட்டை வெள்ளை மற்றும் உருண்டையாக இருக்கும். தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து, முட்டையில் இருந்து வளர்ந்த சிலந்தியாக மாறுவதற்கு, 7-9 நாட்களாகும்.
வாழ்க்கைக் காலம்
முட்டையில் இருந்து 3 நாட்கள் கழித்து முதல்நிலைப் புழு வெளிவரும். இது, 2 நாட்களும், பிறகு இரண்டாம் நிலைப் புழுவாகி 2 நாட்களும் என, இதன் மொத்த வாழ்க்கைக் காலம் 7-9 நாட்களாகும்.
பரவும் தன்மை
இந்தச் சிலந்தி பெரும்பாலும் காற்றின் மூலம் பரவினாலும், தேனீக்கள் மற்றும் மகரந்தத்தை உண்ண வரும் பூச்சிகள் மூலமும் பரவும்.
சேதம்
இந்தச் சிலந்தி, தென்னையின் பெண் பூக்கள் பருவமடையும் நாளில், புல்லி வட்டத்துக்குள் சென்று கருப்பையின் மேல்பகுதியை ஒட்டி வாழும். கருப்பையின் மேல் தோலில் இருக்கும் மெரிஸ்டம் திசுவில் உள்ள சாற்றை உறிஞ்சி வளரும். ஒன்று முதல் மூன்று மாத இளம் குரும்பைகளில் இந்தச் சிலந்திகள் அதிகமாக இருக்கும்.
இளம் குரும்பைக் காம்பின் தோலுக்கு அடியிலிருந்து கொண்டு, குரும்பையின் மெல்லிய திசுக்களில் சாற்றை உறிஞ்சுவதால், தொட்டுக்குக் கீழே, முக்கோண வடிவில் வெளிர் மஞ்சள் அல்லது பழுப்புத் திட்டுகள் உண்டாகும்.
பாதிக்கப்பட்ட குரும்பைகள் வளர்ந்து இளம் காய்களாக மாறும் போது, பழுப்பானது மேலும் அதிகமாகி, நீளவாக்கில் சிறு வெடிப்புகள் தோன்றும். முற்றிய காய்களில், இந்தப் பழுப்புத் திட்டுகள் கடினமாவதால், நீளவாக்கில் பெரிய வெடிப்புகள் உண்டாகும். மேலும், அதிகமாகப் பாதிக்கப்பட்ட காய்களின் அளவு சிறுத்தும், பருப்பின் அளவு குறைந்தும் விடும். அதிகமாகப் பாதிக்கப்பட்ட தேங்காய்களில் 10-30 சதம் வரை, பருப்பின் அளவு குறைந்து விடும்.
செம்பான் சிலந்தியால் பாதிக்கப்பட்ட குரும்பையின் மேல்தோல் நீண்ட வெடிப்புகளுடன் காணப்படும். தாக்குதல் அதிகமானால், இளங்காய்கள் உதிர்ந்து விடும். காய்கள் வளர்ச்சியடையும் போது, அவற்றின் தோல்பகுதி முழுவதும் சொறியைப் போலக் காணப்படும். இது, வெளி நார் மட்டைகளில் வெடிப்பு மற்றும் கடினத் தன்மையை உண்டாக்கும். மகசூலும் தரமும் குறையும். 20-25 சதம் அளவுக்குக் கொப்பரை விளைச்சல் பாதிக்கும்.
கட்டுப்படுத்துதல்: உழவியல் முறைகள்
செம்பான் சிலந்திகளால் பாதிக்கப்பட்டு மரங்களில் இருந்து விழும் குரும்பைகளைச் சேகரித்து அழித்துவிட வேண்டும். தேவையான அளவில் பாசனம் செய்ய வேண்டும். சணப்பை ஊடுபயிராகவும், சவுக்கைத் தடுப்பு வரப்புப் பயிராகவும் வளர்ப்பதன் மூலம், இந்தச் சிலந்திகள் மேலும் பரவாமல் தடுக்கலாம்.
உரங்களை இடுதல்
ஒரு மரத்துக்கு ஓராண்டில் யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ இட வேண்டும். சாம்பல் சத்தை அதிகமாக இட்டால், சிலந்தித் தாக்குதலை எதிர்க்கும் தன்மை கிடைக்கும். வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, மட்கிய தொழுவுரம் 50 கிலோ, நுண் சத்துகளான போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் ஒரு கிலோ, மெக்னீசிய சல்பேட் 0.5 கிலோ இட வேண்டும்.
தாவரச் சிலந்திக் கொல்லிகள்: தாவரச் சிலந்திக் கொல்லிகளை, கைத்தெளிப்பான் அல்லது ராக்கர் மற்றும் கால்மிதித் தெளிப்பான் மூலம், 45 நாட்கள் இடைவெளியில், ஒன்று முதல் ஆறுமாதக் குரும்பைகளில் நன்கு படும்படி, குறைந்தது மூன்று தடவை தெளிக்க வேண்டும். முதலில், அசாடிரக்டின் ஒருசத மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. வீதமும், அடுத்து, வேப்ப எண்ணெய்யை, ஒட்டும் திரவத்தைச் சேர்த்து, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. வீதமும் கலந்து தெளிக்க வேண்டும்.
அடுத்து, டிரையசோபாஸ் 40 இ.சி. மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. அல்லது கார்போசல்பான் 25 இ.சி. மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. அல்லது அசாடிரக்டின் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி. வீதம் கலந்து, வேருக்கு அருகே மண்ணில் இட வேண்டும்.
வேப்பெண்ணெய் மற்றும் பூண்டுக் கரைசல் தெளிப்பு
இரண்டு சத வேப்பெண்ணெய், பூண்டு மற்றும் சோப்புக் கரைசல், செம்பான் சிலந்தியின் தாக்குதலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தும். ஒரு லிட்டர் நீருக்கு 20 மி.லி. வேப்பெண்ணெய், 20 கிராம் உரித்த பூண்டு மற்றும் 5 கிராம் சோப்பு வீதம் தயாரித்துத் தெளிக்க வேண்டும்.
குறிப்பு
தாவரச் சிலந்திக் கொல்லிகளைத் தெளிக்க முடியாத, உயரமான தென்னை மரங்களில், ஒரு சத அசாடிரக்டின் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்குப் பத்து மி.லி. வீதம் கலந்து, வேர் மூலம் 45 நாட்கள் இடைவெளியில், மூன்றுமுறை செலுத்தி, சிலந்தியின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
தெளிப்பு நேரம் மற்றும் அளவு
தாவரச் சிலந்திக் கொல்லிகளை ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் தெளிக்கலாம். மரம் ஒன்றுக்கு, ஒரு லிட்டர் தேவைப்படும்.
முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு
தொற்றுதலைத் தடுக்க, காற்றுக் காலத்தில் மருந்தடிப்பைத் தவிர்க்க வேண்டும். மருந்தைத் தெளிக்கும் போது, பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். மருந்தைத் தெளித்து முடித்ததும், கை, கால், முகம் ஆகியவற்றை சோப்பைக் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
உயிரியல் முறை
ஹிர்சூட்டல்லா தாம்சோனி மற்றும் வெர்டிசிலியம் லெகானி போன்ற எதிர்ப் பூசணங்கள், செம்பான் சிலந்திக் கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றைத் தெளித்தும் செம்பான் சிலந்திகளைக் கட்டுப்படுத்தலாம்.
முனைவர் இராஜா.ரமேஷ், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.
சந்தேகமா? கேளுங்கள்!