தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை சாலையில் அமைந்துள்ள காவேரி மஹாலில், ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில், விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில், பச்சை பூமி சார்பில் விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. இது, பச்சை பூமி நடத்திய பன்னிரண்டாம் கண்காட்சியாகும்.
இதில், விதவிதமான ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. வீடுகளில் வளர்க்கத் தேவையான பூச்செடிகள், மரக்கன்றுகள் முதல், நிலங்களில் வளர்த்து வருவாயை ஈட்டும் வகையிலான, பழமரக் கன்றுகள், மரப்பொருள்களைத் தயாரிக்க உதவும் பலவகைக் கன்றுகள், டிராக்டர்கள், கதிரடிக்கும் இயந்திரங்கள், ரொட்டோவேட்டர்கள், வைக்கோலைக் கட்டுகளாகக் கட்டித் தரும் இயந்திரங்கள், மருந்து தெளிப்பான்கள், உயரத்தில் உள்ள காய்களை, பழங்களை எளிதாகப் பறிக்க உதவும் தொரட்டிகள்,
மண்வெட்டிகள், களைக் கொத்துகள், அரிவாள்கள், கடப்பாரைகள், தேங்காய் உரிப்பான்கள், இயற்கை உரங்கள், வேலிக்கம்பிகள், வீட்டில் மிக எளிமையாக கோழிகள், முயல்கள், ஜப்பான் காடைகள் போன்றவற்றை வளர்க்கத் தேவையான கூண்டுகள், வீட்டுத் தோட்டம் அமைக்கத் தேவைப்படும் விதைகள் நிறைந்த ஸ்டால்கள் என, விதவிதமான ஸ்டால்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பிடித்து இருந்தன.
மேலும், 27 ஆம் தேதி, தேனீ வளர்ப்புப் பயிற்சியும், 28 ஆம் தேதி, வாழைநாரில் மதிப்புமிகு பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியும் நடத்தப்பட்டன. இந்த இரண்டு பயிற்சிகளிலும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேலும், தென்னையில் வளர்க்க ஏற்ற சிறந்த ஊடுபயிர் பாக்கு மரம் என்பது குறித்த ஆலோசனை நிகழ்வும், இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. மூன்று நாட்களும் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
பச்சை பூமி
சந்தேகமா? கேளுங்கள்!