கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு, மழைநீர்ச் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாமை, 10.05.2024 வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி வட்டாரம் வடக்குப்பட்டி கிராமத்தில் சிறப்பாக நடத்தியது.
இம்முகாம், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மழைநீர்ச் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது.
இம்முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய தானம் அறக்கட்டளையின் தூத்துக்குடி மண்டல ஒருங்கிணைப்பாளர் சாரள் நவ்ரோஜி, நீர்வழிப் பாதையின் அவசியம் மற்றும் பராமரிப்பு, பண்ணைக்குட்டை அமைக்கும் முறைகள் மற்றும் குளத்து வண்டல் மண்ணை விளை நிலங்களில் இடுவதன் அவசியத்தை, முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
முகாமில், மழைநீர்ச் சேகரிப்பைப் பற்றிய தொழில் நுட்பக் கையேட்டை வெளியிட்டு, தலைமையுரை ஆற்றிய, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாக்கியாத்துசாலிகா, மானாவாரி விவசாயத்தில் ஒழுங்கற்ற மழைப் பொழிவின் தாக்கம், மழைநீர்ச் சேகரிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்ததுடன், முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
பிச்சைத்தலைவன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மைதிலி, ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர்ச் சேகரிப்புத் தொட்டியை அமைப்பதன் அவசியத்தைத் தெளிவாக விளக்கிக் கூறினார். இணைப் பேராசிரியர் சுப்புலட்சுமி, வேளாண் வானிலை மற்றும் மழை முன்னறிவிப்பைப் பற்றி விளக்கினார்.
இணைப் பேராசிரியர் குரு, மழைநீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் உழவியல் தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துரைத்தார். உதவிப் பேராசிரியர் மனோகரன், விளை நிலங்களில் மழைநீர்ச் சேகரிப்பு முறைகள் பற்றி விளக்கிக் கூறினார்.
உதவிப் பேராசிரியர் மணிகண்டன், மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் குறித்து விளக்கினார். உதவிப் பேராசிரியர் ஆர்த்திராணி, வானிலை முன்னறிவிப்புக்கான கைப்பேசிச் செயலிகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, மழைநீர்ச் சேகரிப்புக் குறித்த கண்காட்சியை அனைவரும் பார்வையிட்டனர். மேலும், மழைநீர்ச் சேமிப்பின் அவசியத்தை விளக்கும் விதமாக, விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் பேராசிரியர் சோலைமலை வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ப.ஆர்த்திராணி நன்றி கூறினார்.
முனைவர் ப.ஆர்த்திராணி, உதவிப் பேராசிரியர், வேளாண் வானிலைத் துறை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.
சந்தேகமா? கேளுங்கள்!