My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

வெந்தயக் கீரை சாகுபடி!

வெந்தயக் கீரை

மேத்தி என்றும் அழைக்கப்படும் வெந்தயம், பருப்புவகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தத் தாவரத்தின் விதைகள் மற்றும் இலைகள், உணவில் சேர்க்கக் கூடியவை. விதைகள், மசாலாப் பொருளாகவும், உலர்ந்த இலைகள் மூலிகையாகவும், பச்சை இலைகள் கீரையாகவும் பயன்படுகின்றன.

வெந்தயக்கீரை, சமையல், மசாலாப் பொருள்கள், அழகுப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது. வெந்தய விதைகளில், மூட்டுவலியை நீக்குதல், இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் அதிக முடி வளர்ச்சிக்கான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன.

வெந்தயக்கீரை, வெந்தய விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெந்தயக்கீரை மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலனைத் தரக்கூடியது. வெந்தயக்கீரை சாகுபடியைப் பொறுத்தவரை, பூக்கள் பூக்கும் முன்பே செடிகளை அறுவடை செய்ய வேண்டும். சிறு இலைகளாகவும், சிறு துண்டுகளாகவும் இருக்கும் இந்தக் கீரை. சிறிது கசப்புச் சுவையுள்ளது என்றாலும், இதில் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.

வெந்தயக் கீரை சாகுபடி முறை

பருவம்: வெந்தய சாகுபடிக்கு, சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் ஏற்றவை. கோ.1, கிசார்சோனாலி, ஆர்.எம்.டி 1, கோ.2 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.

விதையளவு: எக்டருக்கு 12 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும். இந்த விதைகளை 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியில் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச் சத்து மிகுந்த மணற்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்ப நிலை, வெந்தயக் கீரை சாகுபடிக்கு ஏற்றது.

நிலம் தயாரித்தல்: வெந்தயக் கீரை சாகுபடிக்கு, நிலத்தை நன்கு உழுது, எக்டருக்கு 20-25 டன் தொழுவுரம் வீதம் எடுத்து, கடைசி உழவுக்கு முன் அடியுரமாக இட்டு, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, தேவையான அளவில் பாத்திகளை அமைத்து, கீரை விதைகளை மணலில் கலந்து சீராகத் தூவி, கையால் கிளறிப் பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடுதல்: எக்டருக்கு 20-25 டன் தொழுவுரத்தைக் கடைசி உழவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும். மேலும், 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்தைக் கொடுக்கும் உரங்களையும் இட வேண்டும். விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக, எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கும் இரசாயன உரத்தை இட வேண்டும்.

மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

நீர் நிர்வாகம்: விதைகளை விதைத்ததும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் கவனமாகப் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். அதைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீரைப் பாய்ச்ச வேண்டும்

களை நிர்வாகம்: விதைத்த ஆறு நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். பத்து நாட்கள் கழித்து, களைகளை நீக்க வேண்டும். விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு, பயிர்களைக் களைதல் வேண்டும். களைந்த பயிர்களைப் பசுங்கீரையாக உணவில் சேர்க்கலாம். தேவையான போது களையெடுத்தல் வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பூச்சித் தாக்குதல்: கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும். இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

வேரழுகல்: நோய் தோன்றும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். எக்டருக்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.
சாம்பல் நோய்: நோய் தோன்றும் போது, எக்டருக்கு 25 கிலோ சல்பர் வீதம் எடுத்துத் தூவ வேண்டும் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் வீதம் கலந்து, இலைகளில் தெளிக்க வேண்டும்.

அறுவடை

விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து, பசுங்கீரையாகப் பயன்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகி விடும். எக்டருக்கு 4,000 – 5,000 கிலோ பசுங்கீரை, 500-700 கிலோ விதைகள் கிடைக்கும்.

வீட்டில் வெந்தயக்கீரை வளர்ப்பு

+ வெந்தயக் கீரையை வளர்க்க, தினமும் 4-5 மணி நேரம் வெய்யில் படும் இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

+ நடவு முதல் அறுவடைக் காலம் வரை, ஒரே இடத்தில் இருப்பது நல்லது. அதனால், வெந்தயச் செடிகளைத் தட்டுகளில் நடவு செய்யலாம்.

+ வெந்தயக்கீரை வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. வீட்டிலேயே ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம்.

+ வெந்தய விதைகளை, அறை வெப்ப நிலையில் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து எடுத்து, மறுநாள் காலையில் விதைத்து, மேலாக மண்ணைத் தூவி விதைகளை மூடிவிட்டுப் பூவாளி மூலம், பரவலாக நீரைத் தெளிக்கலாம்.

+ மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால், நீரை அதிகமாக விடக்கூடாது. நீர்த் தேங்கினால் செடிகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.

+ இப்படிப் பராமரித்தால், நடவு செய்த 3-4 வாரங்களில் கீரை அறுவடைக்குத் தயாராகி விடும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!