My page - topic 1, topic 2, topic 3

முருங்கை சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

மிழ்நாட்டில் காலங்காலமாகச் சாகுபடியில் இருக்கும் செடிவகைக் காய்கறித் தாவரம் முருங்கை. இது வறட்சியைத் தாங்கி வளரும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம்  ஒடிஸா போன்ற மாநிலங்களில் மிகுதியாக உள்ளது. ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் யாழ்ப்பாண முருங்கை இயற்கையாகவே விளைகிறது. தமிழ்நாட்டில் பி.கே.எம் 1 முருங்கை சுமார் 5,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பல்லாண்டு முருங்கையும் ஓராண்டுச் செடி முருங்கையும் சாகுபடியில் உள்ளன.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பல்லாண்டு முருங்கை இருக்கும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கூடுதல் பரப்பில் பயிராகிறது.

இரகங்கள்

குடுமியான் மலை 1: இந்த இரகம் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையிலுள்ள அண்ணா பண்ணையில் உருவாக்கப்பட்டது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும் ஓர் உள்ளூர் இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது. இந்த மரங்கள் குட்டையாக இருக்கும். காய் 20-25 செ.மீ. நீளமிருக்கும். ஒரு செடி 200-225 காய்களைக் காய்க்கும். நடவு செய்த ஆறு மாதத்தில் காய்க்கத் தொடங்கி விடும். மறுதாம்புப் பயிருக்கும் ஏற்றது.

பெரியகுளம் 1: இது நெல்லை மாவட்டம் எப்போதும் வென்றான் என்னும் ஊரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. ஓராண்டில் செடிகள் நான்கு மீட்டர் உயரம் வளரும். இது, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டியம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சாகுபடியில் உள்ளது. நடவு செய்த 90ஆம் நாளில் பூக்கத் தொடங்கி, 150-160 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். காய் 60-70 செ.மீ. நீளம், உருண்டை வடிவம், பச்சை நிறம், கூர்மையான நுனி மற்றும் சதைப்பற்றுடன் இருக்கும். ஒரு மரம் சராசரியாக 200-250 காய்களைக் காய்க்கும். இவ்வகையில் ஒரு எக்டரில் 50-55 டன் மகசூல் எடுக்கலாம். மேலும், இரண்டு முறை மறுதாம்பு விடலாம்.

பெரியகுளம் 2: இந்த முருங்கை விரைவாக வளரும். நடவு செய்த 100-110 நாட்களில் பூக்கத் தொடங்கும். 170-180 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். காய் சராசரியாக 125.2 செ.மீ. நீளம் 8.3 செ.மீ. சுற்றளவு, 280 கிராம் எடையில் இருக்கும். விதைகள் குறைவாக இருக்கும். ஓராண்டில் மரத்திற்கு 220 காய்கள் காய்த்து எக்டருக்கு 98 டன் மகசூலைக் கொடுக்கும்.

பாக்யா: இது கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்பட்டது. இதன் இலைகள் மற்றும் காய்களில் இரும்பும் வைட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. இந்த முருங்கை நடவு செய்த 130-140 நாட்களில் பூக்கத் தொடங்கும். செடிகள் 2.5-3.0 மீட்டர் உயரம் வளரும். காய் 65-70 செ.மீ. நீளம், 154 கிராம் எடையில் இருக்கும். ஓராண்டில் மரத்துக்கு 300-350 காய்களைக் காய்த்து, எக்டருக்கு 42-50 டன் மகசூலைக் கொடுக்கும்.

பல்லாண்டு முருங்கை இரகங்கள்

யாழ்ப்பாண முருங்கை: இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிகுதியாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இரகம் ஆண்டு முழுவதும் காய்க்கும். காய்கள் 60-75 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 600 காய்கள் வரை காய்க்கும். காயின் எடை 75-80 கிராம் இருக்கும்.

செம்முருங்கை: காய்கள் சிவப்பாக இருக்கும். ஆண்டு முழுவதும் காய்க்கும். ஒரு மரம் ஆண்டுக்குச் சுமார் 240 காய்களைக் காய்க்கும். ஒரு காயின் எடை 120 கிராம், நீளம் 60-70 செ.மீ. இருக்கும்.

வலையப்பட்டி முருங்கை: ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி தேனிப் பகுதிகளில் கூடுதல் பரப்பில் சாகுபடியில் உள்ளது. மலையடிவாரத்தில் நன்றாக வளரும். ஆண்டு முழுவதும் காய்க்கும். ஒரு மரம் ஆண்டுக்குச் சுமார் 1,200 காய்களைக் கொடுக்கும். ஒரு காயின் எடை 120 கிராம் வரையும், நீளம் 65 செ.மீ. வரையும் இருக்கும்.

பால் முருங்கை: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காய்கள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்றது. ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 350-450 காய்கள் வரையில் கிடைக்கும்.

மூலனூர் முருங்கை: கரூர், திருப்பூர் மாவட்டங்களில், குறிப்பாக, தாராபுரம் பகுதியில் அதிகப் பரப்பில் சாகுபடியில் உள்ளது. ஒரு காய் 120 கிராம் எடையும், 45-55 செ.மீ. நீளமும் இருக்கும். ஒரு மரம் ஓராண்டில் 2,000 காய்கள் வரை காய்க்கும். இந்த மரத்தை நன்கு பராமரித்தால், 15-20 ஆண்டுகள் வரையில் காய்க்கும்.

காட்டு முருங்கை: மலைப்பகுதிகளில் நன்கு வளரும். தேனி மாவட்டத்தில் வருசநாடு, கடைமலைக்குண்டு பகுதிகளில் பெருமளவில் சாகுபடியில் உள்ளது.  காய்கள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும்.

கொடிக்கால் முருங்கை: திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறையப் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் காய்கள் குட்டையாக, 20-25 செ.மீ. நீளத்தில் இருக்கும். எடை 80 கிராம் வரை இருக்கும். ஒரு மரம் ஆண்டுக்கு 200-250 காய்கள் வரை காய்க்கும்.

பாலமேடு முருங்கை: மதுரை அதன் சுற்றுப் பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகமாகச் சாகுபடியில் உள்ளது. இதன் காய்கள் 60 செ.மீ. நீளத்தில் இருக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்குச் சுமார் 100 காய்கள் கிடைக்கும்.

கரும்பு முருங்கை: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இடையகோட்டைப் பகுதிகளில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. காயின் நீளம் 120 செ.மீ. வரை  இருக்கும். திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோட்டில் சுமார் 30 செ.மீ. நீளமுள்ள குட்டை முருங்கைக் காய்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை

முருங்கை பெரும்பாலும் அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும். நல்ல வளமான, வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் மிகவும் ஏற்றது. எனினும், வறட்சியைத் தாங்கி வளர்வதால் மணற்பாங்கான நிலத்திலும் தரிசு நிலத்திலும் பயிரிடலாம். நிலத்தில் நீர் தேங்கக் கூடாது. கார அமிலத் தன்மை 6.5 முதல் 8.0 வரை உள்ள மண், முருங்கை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

காற்றின் வெப்பநிலை 25-300 செல்சியஸ் இருந்தால் முருங்கை நன்கு செழித்து வளரும். வெப்பநிலை 400 செல்சியசுக்கு மேல் இருந்தால், பூக்கள் கொட்டி விடும். இதனால் மகசூல் சிறிது பாதிக்கும். அதைப்போல் மிகவும் குறைந்த வெப்பநிலை மற்றும் பனிப்பொழிவு உள்ள இடங்கள் சாகுபடிக்கு ஏற்றவையல்ல. செடி முருங்கையைப் பயிரிட ஜூன் ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மாதங்கள் ஏற்ற பருவமாகும்.

நிலத் தயாரிப்பு

நிலத்தை 3-4 முறை நன்கு உழுது சமப்படுத்தி, 2.5 மீ.க்கு 2.5 மீ. இடைவெளியில் 45 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து ஒரு வாரம் ஆறவிட வேண்டும். பிறகு குழி ஒன்றுக்கு நன்கு மட்கிய தொழுவுரம் 10-15 கிலோ மற்றும் மேல் மண்ணைச் சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். குழிகளைச் சுற்றிச் சுமார் 60 செ.மீ. அகலத்தில் பாசன வாய்க்காலை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் 500 கிராம் வேப்பம் புண்ணாக்கை இடவேண்டும்.

விதையளவும் விதைப்பும்

எக்டருக்கு 500 கிராம் விதைகள் தேவைப்படும். விதைகளை நேரடியாக குழிகளில் நடலாம். அல்லது நாற்றுகளாக வளர்த்தும் நடலாம். விதை நேர்த்தி செய்தால் செடிகள் செழிப்பாக வளரும். விதை நேர்த்திக்கு அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியாவைப் பயன்படுத்தலாம். முருங்கை, விதை மூலமும் தண்டுக் குச்சிகள் மூலமும் சாகுபடி செய்யப்படுகிறது. செடி முருங்கையை விதை மூலமும், பல்லாண்டு முருங்கையைக் குச்சிகள் மூலமும் சாகுபடி செய்யலாம்.

நாற்று உற்பத்தி

முருங்கை விதைகளை 15 செ.மீ. அகலம் 30 செ.மீ. உயரம் 200 கேஜ் தடிமனுள்ள பாலிதீன் பைகளில் முக்கால் பாகத்துக்குச் சத்துள்ள மண்ணை நிரப்பி விதைகளை நடலாம். சத்துள்ள மண்ணைத் தயாரிக்க, 1 பங்கு செம்மண், 1 பங்கு மணல் 1 பங்கு தொழுவுரம் ஆகியவற்றைக் கலக்க வேண்டும். விதைத்ததும் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 5-7 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். நாற்றுகள் அழுகாமல் இருக்க, பைடலான் மருந்தைத் தெளிக்கலாம். 25-30 நாள் நாற்றுகளை நடலாம்.

விதைகளை நடுதல்

குழியின் நடுவில் சுமார் 3 செ.மீ. ஆழத்தில் ஒன்றிரண்டு விதைகளை நட வேண்டும். விதைத்த 5-7 நாட்களில் விதைகள் முளைக்கும். நன்கு வளரும் செடிகளை மட்டும் வளர்க்க வேண்டும்.

பாசனம்

விதைப்பதற்கு முன் குழிகளில் நீரைப் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் பாய்ச்ச வேண்டும். பின் தேவைக்கேற்ப 10-15 நாட்கள் இடைவெளியில் பாசனம் அவசியம்.

உர நிர்வாகம்

குழிக்கு 15 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது கம்போஸ்ட், 5 கிலோ மண்புழு உரம், மேல் மண் ஆகியவற்றைச் சேர்த்துக் குழியை நிரப்ப வேண்டும். விதைத்த மூன்றாம் மாதத்தில் ஒரு செடிக்கு, தழைச்சத்து 45 கிராம், மணிச்சத்து 15 கிராம், சாம்பல் சத்து 30 கிராம் வீதம் இடவேண்டும். பின்பு ஆறாம் மாதத்தில், அதாவது, பூக்கும்போது, தழைச்சத்து 45 கிராம் இட வேண்டும். உரத்தைச் செடிக்கு இரண்டு அடி தள்ளி 15 செ.மீ. ஆழத்தில் வட்டமாக இட்டு மண்ணால் மூடிப் பாசனம் செய்ய வேண்டும். மேலும், இத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு 5 கிலோ என்னுமளவில் இட்டால், முருங்கையின் வளர்ச்சியும் காய்களின் எண்ணிக்கையும் கூடும்.

இறவைக் காலத்தில் முருங்கையில் காய்களை உண்டாக்க, மே இரண்டாம் வாரத்தில் செடிகளை நட்டு, ஜூலையில் நுனியைக் கிள்ளிவிட வேண்டும். ஆகஸ்ட் செப்டம்பரில் 0.5 சத நைட்ரோபென்சின் மருந்தைத் தெளித்தால் பூக்கள் உண்டாகிக் காய்க்கும். இந்தக் காய்களை ஜனவரியில் அறுவடை செய்யலாம். பொதுவாகச் செடிகள் 75 செ.மீ. உயரம் வளர்ந்ததும் நுனியைக் கிள்ளிவிட வேண்டும்.  இதனால் பக்கக் கிளைகள் நிறைய உருவாகும்.

களையெடுத்தல்

விதைத்து இரண்டு மாதங்கள் வரை நிலத்தைக் களைகள் இன்றிப் பராமரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது தேவைப்படும் போது களைகளை அகற்ற  வேண்டும்.

ஊடுபயிர்

தனிப்பயிராக முருங்கையைப் பயிரிட்டால், ஊடுபயிராகத் தக்காளி, வெண்டை, தட்டைப்பயறு, வெள்ளரிக்காய் போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். தகுந்த இடைவெளி மற்றும் சூரிய ஒளியுள்ள பழத்தோட்டம், தென்னந் தோப்புகளில் முருங்கையை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

மறுதாம்புப் பயிர்

ஓராண்டுக் கழித்துக் காய்ப்பு முடிந்த பிறகு செடிகளைத் தரையிலிருந்து 3-4 அடி உயரத்தில் வெட்டிவிட வேண்டும். இதனால் புதிய குருத்துகள் தோன்றி மீண்டும் 4-5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். இதுபோல் ஒவ்வொரு காய்ப்புக்குப் பிறகும் செடிகளை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்புக்கு விடலாம். கவாத்து செய்ததும், பரிந்துரை செய்யப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல் சத்தைச் செடி ஒன்றுக்கு 45:15:30 கிராம் வீதம் எடுத்து, 10-15 கிலோ மட்கிய தொழு உரத்துடன் இட்டுப் பாசனம் செய்ய வேண்டும்.

மூடாக்குப் போடுதல்

செடிகளைச் சுற்றி மூடாக்குப் போடுவதால், நிலத்திலுள்ள நீர் ஆவியாகி வீணாவது தடுக்கப்படும். களைச் செடிகள் கட்டுப்படும். மட்கிய இலைகள், புல், தென்னை நார்க்கழிவு போன்றவற்றை மூடாக்காகப் போடலாம். பாலிதீன் திரையை மூடாக்காகப் போட்டால், மண்ணிலுள்ள தீமை பயக்கும் கிருமிகளும் அழியும்.

அறுவடையும் மகசூலும்

முருங்கை விதைத்த ஆறு மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து 2-3 மாதம் வரை காய்ப்பு இருக்கும். ஒரு மரத்திலிருந்து 250-400 காய்கள் வரை கிடைக்கும்.


முனைவர் சி.இராஜமாணிக்கம்,

வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் – 623 503,

முனைவர் வி.வாணி, தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம் – 625 604.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks