My page - topic 1, topic 2, topic 3

நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.

ந்தியாவில் 563 மாவட்டங்களில் நெல் பயிரிடப்பட்டுகிறது. இதை, விதைப்பு முதல் அறுவடை வரை, பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குவதால், 25-30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டுப் புழுவில் 11 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில், இந்தியாவில் 7 இனங்கள் நெற்பயிரைத் தாக்கிச் சேதம் செய்கின்றன. இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து இங்கே காணலாம்.

முட்டை

பெண் அந்துப் பூச்சிகள் வெள்ளை நிறத்தில், தட்டை வடிவில், அளவில் சிறிய 10-12 முட்டைகளை, தனித்தனியாக இளம் இலைகளின் நடுநரம்புக்கு அருகில் வரிசையாக இடும். ஒரு பெண் அந்துப்பூச்சி 300 முட்டைகள் வரை இடும்.

இளம் புழுக்கள்

முட்டையிலிருந்து 4 முதல் 7 நாட்களில் வெளிரிய மஞ்சள் கலந்த பச்சை நிற இளம் புழுக்கள் வெளிவரும். புழுப்பருவம் 15-27 நாட்களாகும். கூட்டுப்புழு: கூட்டுப்புழு, சுருட்டப்பட்ட இலைகளில் காணப்படும். கூட்டுப் புழுவிலிருந்து 6-8 நாட்களில் அந்துப் பூச்சி வெளிவரும்.

அந்துப்பூச்சி

தாய் அந்துப்பூச்சி பழுப்புக் கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன் முன், பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்தில் அலையலையாய்க் கோடுகள் காணப்படும். இறக்கைகளின் கீழ்ப்பகுதி ஓரங்களில் அடர் கரும்பழுப்புப் பட்டைக் காணப்படும். இதன் வாழ்க்கைக் காலம் 26-42 நாட்களாகும்.

தாக்குதலுக்கு ஏற்ற சூழ்நிலை

அதிகளவில் தழைச்சத்தை இடுதல். மர நிழலில் இருக்கும் பயிர்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும். மிதமான வெப்பம் நிலவும் அக்டோபர்- ஜனவரி வரை தாக்குதல் மிக அதிகமாக இருக்கும்.

சேத அறிகுறிகள்

விரியாத இலையின் அடிப்பகுதியைப் புழுக்கள் உண்ணும். பின்பு, இந்த இலை நீளவாக்கில் மடக்கப்பட்டு ஆங்காங்கே பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப் பட்டிருக்கும். சுருட்டப்பட்ட இலைக்குள் இருந்து கொண்டு, இலைகளின் பச்சையத்தைப் புழுக்கள் சுரண்டித் தின்பதால், இலைகளின் பல இடங்களில் வெள்ளைச் சருகைப் போலக் காணப்படும். மடக்கப்பட்ட இலைக்குள் புழுக்களின் கழிவுகளும் காணப்படும்.

ஒரு புழு, 3-4 இலைகளைத் தாக்கும். நிழலிலும், வரப்பு ஓரங்களிலும் தொடங்கும் தாக்குதல், பின்பு வயலின் உட்பகுதியில் வேகமாகப் பரவும். பொருளாதாரச் சேதநிலை: பயிர்களின் ஆரம்ப வளர்ச்சிப் பருவத்தில் 10 சத இலைகளில் சேதம். பூக்கும் பருவத்தில் 5 சதவீத இலைகள் பாதிக்கப்படுதல்.

கட்டுப்படுத்தும் முறைகள்

வயல்களில் நிழல் இருக்கக் கூடாது. வயல், வரப்புகளில் களை இருக்கக் கூடாது. இரவில் 5 ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம், வயலிலிருந்து 20 அடி தள்ளி வைத்து, வளர்ந்த அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை, ஏக்கருக்கு 2 சிசி (40,000 முட்டைகள்) வீதம், மூன்று முறை, அதாவது, நடவு நட்ட 37, 44, 51 நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.

தழைச்சத்தைப் பிரித்தும், யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கைக் கலந்தும் இட வேண்டும். வயலில் காணப்படும் தரை வண்டுகள், ஒட்டுண்ணிக் குளவிகள், நீள்கொம்பு வெட்டுக் கிளிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்பான், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள், சிலந்திகள் போன்றவற்றைப் பாதுகாத்துப் பெருக்க வேண்டும்.

வேப்பெண்ணைய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சத மருந்தை, ஏக்கருக்கு 400 மில்லி அல்லது 5 சத வேப்பங்கொட்டைக் கரைசலில் ஒட்டும் திரவத்தைச் சேர்த்து, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இங்கே கூறப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை, ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து, காலை அல்லது மாலையில் தெளிக்கலாம்.

ஃப்ளுபென்டியாமைட் 39.35 S.C 20 மில்லி,
ஃப்ளுபென்டியாமைட் 20 W.G 50 கிராம்,
புரபினோபாஸ் 50 E.C 400 மில்லி,
கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 S.P 400 கிராம்,
குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 S.C 60 மில்லி,
குளோரன்ட்ரான்லிபுரோல் 4 G 4 கிலோ,
டிரையசோபாஸ் 40 E.C 400 மில்லி,
குளோர்பைரிபாஸ் 20 E.C 500 மில்லி,
டைகுளோர்வாஸ் 76 W.S.C 250 மில்லி,
பாஸ்போமிடான் 40 S.L 240 மில்லி.


முனைவர் இராஜா.ரமேஷ், உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks