My page - topic 1, topic 2, topic 3

செண்டுமல்லி சாகுபடி முறைகள்!

செண்டுமல்லி

செய்தி வெளியான இதழ்: 2017 நவம்பர்.

விவசாயிகளுக்கு அன்றாடம் மற்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் என, வருமானத்தைத் தருவது மலர் சாகுபடி. மல்லிகை, ரோஜா, சம்பங்கி என, சாகுபடி செய்யப்படும் மலர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றை, நுட்பமறிந்து சாகுபடி செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அவ்வகையில் இங்கே, செண்டுமல்லி சாகுபடியைப் பற்றிப் பார்க்கலாம்.

இரகங்கள்

மதுரை 1, பூசா நரங்கி, கெய்ன்டா, பூசா பசந்தி. வீரிய ஒட்டு இரகங்கள்: மேக்ஸிமா எல்லோ (எஃப்1 குட்டை இரகம்), ஆரோ கோல்டு (எஃப்1 குட்டை இரகம்), ஆரோ ஆரஞ்சு (எஃப்1 நெட்டை இரகம்), கோல்டு காய்ன் எல்லோ (எஃப்1 குட்டை இரகம்).

சாகுபடி நிலம்

நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா வகை மண்ணிலும் பயிரிடலாம். கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

தட்ப வெப்பநிலை மற்றும் பருவம்

செண்டுமல்லிக்குச் சீரான மித வெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பகுதிகளில் ஆண்டு முழுவதும், அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். ஆனாலும், அக்டோபர்- ஜனவரி, பிப்ரவரி- மே ஆகிய பருவங்கள் மிகவும் ஏற்றவை. சாதாரண வகைகள் எனில், எக்டருக்கு 1.5 கிலோ விதையும், வீரிய ஒட்டு வகைகள் எனில், எக்டருக்கு 200 கிராம் விதையும் தேவை.

நாற்றங்கால் பராமரிப்பு

நிலத்தை 2-3 முறை நன்கு உழுது, கடைசி உழவுக்கு முன், மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்த பிறகு, 15 செ.மீ. இடைவெளியில் வரிசையாகப் பாத்திகளில் விதைத்து, மண்ணால் மூடி, நீரைப் பாய்ச்ச வேண்டும். ஏழு நாட்களில் விதைகள் முளைத்து விடும். முப்பது நாட்கள் ஆனதும் நாற்றுகளைப் பிடுங்கி நடவு செய்ய வேண்டும்.

குழித்தட்டு நாற்றங்கால்

பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை நெகிழித் தட்டுகளில் நிரப்பி, குழிக்கு ஒரு விதையை இட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, நெகிழித் தாளால் மூடி, மூன்று நாட்களுக்கு 50 சதவீத நிழல் வலையின் கீழ் வைத்தால், முளைப்புத் திறன் அதிகரிக்கும். தினமும் இருமுறை பூவாளி மூலம் நீரைத் தெளிக்க வேண்டும். நாற்றங்காலில் 15 ஆம் நாளில், 19:19:19 உரத்தை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

நடவு முறை

25 நாள் நாற்றுகளை எடுத்து நடலாம். சாதாரண வகை நாற்றுகள் எனில், வரிசைக்கு வரிசை 60×45 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். வீரிய வகை நாற்றுகள் எனில், வரிசைக்கு வரிசை 90×25 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒருமுறையும், மூன்றாம் நாள் உயிர் நீரும் கொடுக்க வேண்டும். பிறகு, வாரம் ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நீர்த் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சத்து மேலாண்மை

எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்தைக் கொடுக்கும், இராசயன உரங்களை அடியுரமாக இட வேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து, எக்டருக்கு 45 கிலோ தழைச் சத்துள்ள இராசயன உரத்தையிட்டு மண்ணை அணைத்து விட வேண்டும்.

நீர்வழி உரமிடல்

ஒரு எக்டரில் வளரும் வீரிய ஒட்டுச் சாமந்திக்கு, 90:90:75 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை, பயிர்க்காலம் முழுவதும் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். அந்த வகையில், நடவு முதல் வேர்ப்பிடித்தல் வரையான 15 நாட்களில், 19:19:19 உரம் 11.8 கிலோ, 13:0:45 உரம் 11.7 கிலோ, யூரியா 11.6 கிலோ ஆகியவற்றைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும்.

செடி வளர்ச்சிப் பருவமான 45 நாட்களில், 12:61:0 உரம் 47.3 கிலோ, 13:0:45 உரம் 46.6 கிலோ, யூரியா 46 கிலோ ஆகியவற்றைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும். அடுத்து, பூப்பூக்கும் காலம் முதல் அறுவடைக் காலம் வரையிலான நாட்களில், 19:19:19 உரம் 59.2 கிலோ, 13:0:45 உரம் 58.3 கிலோ, யூரியா 26.3 கிலோ ஆகியவற்றைப் பாசனநீரில் கலந்துவிட வேண்டும்.

பின்செய் நேர்த்தி

நுனிக் கிள்ளுதல்: நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுகளைக் கிள்ளிவிட வேண்டும். இப்படிச் செய்தால் கிளைகள் அதிகமாகி நிறையப் பூ மொக்குகள் உண்டாகும். நடவு செய்த 30, 60 ஆகிய நாட்களில் களையெடுக்க வேண்டும். களையெடுக்கும் போது மண்ணை அணைத்தல் அவசியம். இது, செடிகள் நன்கு வேர்ப் பிடிக்கவும், அவற்றின் தாங்கு திறன் அதிகரிக்கவும் உதவும்.

பயிர்ப் பாதுகாப்பு

சிவப்புச் சிலந்திப்பேன் தாக்கினால், இலைகளில் மஞ்சள் புள்ளிகள் காணப்படும். இலைகள் வெளிரி இருக்கும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி டைகோ்பால் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.25 மில்லி அபமெக்டின் வீதம் கலந்து தெளிக்கலாம். இலைப்பேன் தாக்கினால் இலைகள் வெளிரி விடும். இதைக் கட்டுப்படுத்த, 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி மீத்தைல் டெமட்டான் வீதம் கலந்து தெளிக்கலாம்.

வேரழுகல்: இது, நாற்றுகளையும் வளர்ந்த செடிகளையும் தாக்கும். இதனால் வேர்கள் அழுகி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் பெவிஸ்டின் வீதம் கலந்த கலவையைச் செடிகளைச் சுற்றி ஊற்றிவிட வேண்டும்.

நாற்றழுகல்: இதைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் கேப்டான் அல்லது ஒரு மில்லி பெனோமில் அல்லது ஒரு கிராம் பெவிஸ்டின் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்: இதனால், முதலில் இலைகளில் வட்டமாக, சிவப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு, புள்ளிகள் பெருகி இலைகள் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் தயோபினேட் அல்லது 0.75 கிராம் பெனோமில் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

சாம்பல் நோய்: இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம், அல்லது ஒரு மில்லி பென்கொனாசொல், அல்லது ஒரு மில்லி புரோபகொனாசொல் வீதம் கலந்து தெளிக்கலாம்.

அறுவடை

நடவு செய்த 60 நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களைக் கொய்து கூடைகளிலும், கோணிப் பைகளிலும் அடைத்துச் சந்தைக்கு அனுப்ப வேண்டும்.


முனைவர் அ.இரமேஷ்குமார், முனைவர் த.சரவணன், முனைவர் சு.கண்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம், விருத்தாசலம், கடலூர் – 606 001.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks