My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

தண்டுக்கீரை சாகுபடி!

amazing health benefits of red spinach 1 e1739852406748

கீரைகள் மிகவும் சத்தானவை. தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வகையில், மக்கள் விரும்பும் தண்டுக்கீரை சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தண்டுக்கீரை பயன்கள்

+ தண்டுக்கீரையைக் குழம்பு, கூட்டு எனச் சமைத்து உண்ணலாம்.

+ தண்டுக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், குடற்புண் ஆறும்.

+ இந்தக் கீரையில், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் பி, சி, நார்ச்சத்து ஆகியன உள்ளன.

+ குடற்புண், அல்சர் உள்ளவர்கள், இந்தக் கீரையை, லேசாக அல்லது மசிய வதக்கி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

+ பெண்களின் கருப்பைச் சிக்கலுக்கு, தண்டுக்கீரை நல்ல தீர்வைத் தரும்.

+ இது, குளிர்ச்சியைத் தரும் கீரை. எனவே, மூலநோய் உள்ளவர்கள் இதை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

தண்டுக்கீரை சாகுபடி

+ சித்திரை, ஆடி, மார்கழி, மாசியில், தண்டுக் கீரையைப் பயிர் செய்யலாம்.

+ இதற்கு, நல்ல மண்ணும் மணலும் கலந்த அமிலத் தன்மையுள்ள, இருமண் நிலம், செம்மண் நிலம் ஆகியன ஏற்றவை.

+ களிமண் நிலத்தில் இதைப் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

+ தண்டுக்கீரை சாகுபடி நிலத்தை, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரம் வீதம் இட்டுப் பரப்பி, சமப்படுத்த வேண்டும். மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம்.

+ அடுத்து, நீர் வசதிக்கு ஏற்ப, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும்.

+ பிறகு, ஏக்கருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் எடுத்து, மணலில் கலந்து பாத்திகளில் சீராகத் தூவி, விதைகளை மூடும் வகையில் மண்ணை லேசாகக் கிளறி விட்டு, உடனே பாசனம் செய்ய வேண்டும்.

+ நீரின் வேகத்தில் விதைகள் ஒரு பக்கமாகச் செல்லாமல் இருக்க, பூவாளியால் நீரைத் தெளிக்கலாம். அல்லது, விதைகளை அடித்துச் செல்லாத வகையில், கவனமாக நீரைப் பாய்ச்ச வேண்டும்.

+ விதைத்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.

+ கீரைச் செடிகள் களைகளால் பாதிக்கப்படாமல் இருக்க, விதைத்து 10-15 நாட்கள் கழித்து, களையெடுக்க வேண்டும்.

+ இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து காலை நேரத்தில் தெளிக்கலாம்.

+ ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

+ கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

+ இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும்.

+ இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

+ விதைத்து 35-40 நாட்களில் தண்டுக்கீரையை அறுவடை செய்யலாம். அவரவர் குடும்பத் தேவைக்கு ஏற்ப, வீட்டிலேயே தொட்டிகளில் கூடத் தண்டுக்கிரையை வளர்த்துப் பயன்படுத்தலாம்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!