My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

அகத்திக் கீரை சாகுபடி!

அகத்திக் கீரை

கத்தி என்னும் சிறுமரம் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்தது. இது ஒளி விரும்பி மரமாகும். கெட்டித்தன்மை இல்லாதது. சுமார் 25 அடி உயரம் வரை நேராக வளரக் கூடியது. இதன் இலைகள் 15-30 செ.மீ. நீளத்தில் இருக்கும். இந்த இலைகள் கூட்டிலைகள் வகையில் அடங்கும். ஒவ்வொரு இணுக்கிலும் 40-60 இலைகள் இருக்கும்.

பொதுவாக அகத்தி, வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இடங்களில் வளரும். வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும். இம்மரம் மறுதாம்பு மூலம் தழைத்து வளரும். இதற்குக் கிளைகள் கிடையாது. குறுகிய காலம் மட்டுமே வாழக்கூடிய அகத்தி, வேகமாக வளரக்கூடிய மரமாகும்.

அகத்திக் கீரையின் பயன்கள்

அகத்திக் கீரை உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் வல்லமை மிக்கது. இரும்புச்சத்து நிறைந்த இக்கீரையைச் சமைத்து உண்டால், வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குப்புண், தொண்டைப்புண் ஆகியன குணமாகும். உதடு வெடிப்புக்கும் நிவாரணம் கிடைக்கும். உடல் வெப்பம் குறையும். இளநரையைத் தடுக்கும்.

வரப்புப் பயிராக அகத்தியைப் பயிரிட்டால், அடுத்த வயலிலுள்ள பூச்சிகள் மற்றும் நோய்கள் பரவாமல் தடுக்கலாம். பயிர்களுக்குத் தழைச்சத்து மற்றும் இரும்புச் சத்தாகப் பயன்படும். அகத்திக் கீரையை வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். மாடு, கோழி, முயல், வாத்து, பன்றி ஆகிய, பண்ணை விலங்குகளுக்கும் உணவாகத் தரலாம்.

இந்தக் கீரையில் 25 சதம் புரதம் உள்ளது. அகத்தியில், வெள்ளைப்பூ அகத்தி, சிவப்புப்பூ அகத்தி என இருவகை உண்டு. சிவப்புப் பூக்களைப் பூக்கும் அகத்தியைச் செவ்வகத்தி என்பார்கள்.

மண்

அகத்தி, பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும். வளமான, ஈரமான மண்ணில் நன்கு வளரும். இதை, மாடித்தோட்டத் தொட்டியிலும் வளர்க்கலாம்.

நிலம் தயாரித்தல்

அகத்திக் கீரை சாகுபடி நிலத்தைப் புழுதியாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஏக்கருக்கு ஐந்து டன் தொழுவுரம் வீதம் இட வேண்டும். பிறகு, பாசனம் செய்ய ஏற்ற வகையில், பாத்திகளை அமைக்க வேண்டும்.

பருவமும் விதைப்பும்

அகத்திக்கீரை சாகுபடிக்கு, ஜூன் – ஆகஸ்ட் காலம் ஏற்றது. எக்டருக்கு 7.5 கிலோ விதைகள் தேவைப்படும். இந்த விதைகளை 100×100 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். நேரடியாக, குழிக்கு ஒரு விதை வீதம் விதைகளை நடவு செய்யலாம். அல்லது நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளை வளர்த்தும் நடவு செய்யலாம். விதைகள், 3-5 நாட்களில் முளைக்கத் தொடங்கும். விதைகள் முளைத்த பிறகு, ஒருநாள் விட்டு ஒருநாள், நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

அகத்தியை, 1-2 அடி இடைவெளியில், வரிசையாக விதைத்தும் வளர்க்கலாம். ஆனால், இம்முறையில் அகத்தியின் உயரம் 3-4 அடி தான் இருக்க வேண்டும். சிறிய புதரைப் போல வளர்க்க வேண்டும். இதன் மூலம், அறுவடையும் பராமரிப்பும் எளிதாக இருக்கும்.

உரங்கள்

அகத்திக்கு, மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். கீரை அதிகமாகக் கிடைக்க, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம்.

பாசனம்

நடவு நீரைத் தொடர்ந்து, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். பாசன வசதியுள்ள இடங்களில், ஆண்டு முழுவதும் அகத்தி வளரும். வடிகால் வசதியுள்ள பகுதிகளில் நன்கு வளரும்.

பயிர்ப் பாதுகாப்பு

கீரைகளில் பூச்சித் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். அதாவது, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும். இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

மகசூல்

விதைத்து 5-6 மாதங்களில் முதல் அறுவடையைத் தொடங்கலாம். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 9-10 கிலோ கீரை கிடைக்கும். இடத்தைப் பொறுத்து, மகசூலில் மாற்றம் இருக்கும். ஓராண்டில் எக்டருக்கு 100 டன் கீரை கிடைக்கும்.

 


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!