தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடை தோழமைப் பயிர்கள்

செய்தி வெளியான இதழ்: 2017 மே.

தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத் தடைக்காப்பு என்பது, வெளிநாடுகளில் இருந்து பரவும் நோய்கள் மற்றும் பூச்சிகள் நம் நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதும், அவை மற்ற நாடுகளுக்குப் பரவும் முன் அழிப்பதுமாகும்.

விவசாயத் தேவைக்காக மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மூலம், அதிகளவில் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம், தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளே ஆகும்.

தொற்றுத் தடைக்காப்புச் சட்டம் 2003 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயப் பொருள்களை எளிதாக இறக்குமதி செய்ய, கூடுதல் அறிவிப்புகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்குதல், ஆய்வுக்கூடச் சோதனைகளுக்குப் பிறகே தாவர விதைகள் மற்றும் தாவரங்கள் சார்ந்த பொருள்களின் இறக்குமதியை அனுமதித்தல், தொற்றுக் கட்டுப்பாட்டுப் பொருள்களைப் பயன்படுத்தித் தொற்றைக் கட்டுப்படுத்தல் போன்ற விதிமுறைகள் இத்திட்டத்தில் செயல்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 31 தாவரத் தொற்றுத் தடைக்காப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னையில் இரண்டு, தூத்துக்குடியில் ஒன்று, திருச்சி விமான நிலையத்தில் ஒன்று என, நான்கு நிலையங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இவற்றில் மூன்று நிலையங்கள் தாவரத் தொற்றுநோய்த் தடுப்புக்காகவும், ஒரு நிலையம் மண்டலத் தாவரத் தொற்றுநோய்த் தடுப்புக்காகவும் செயல்படுகின்றன. இதன் தலைமையகம் அரியானாவில் உள்ள பரிதாபாத்தில் செயல்படுகிறது.

பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டில் தொற்றுத்தடைக் காப்பின் முக்கியத்துவம்

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்குத் தாவரங்கள் மற்றும் தாவரம் சார்ந்த பொருள்கள் மூலம் வரும் தொற்றுகளே அதிகத் தீமைகளை விளைவிக்கின்றன. எனவே, இவற்றைத் தொற்றுத் தடைக்காப்பு மூலமே தடுக்க முடியும். பூச்சி, நோய், களைகளைக் கட்டுப்படுத்துவதில், முன்னெச்சரிக்கையாக, அவை பரவாமல் தடுப்பதே சிறந்த முறையாகும். ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பரவாமல் தடுப்பதில் தடைக்காப்பு முக்கியப் பங்காற்றுகிறது.

எடுத்துக்காட்டாக, உருளைக் கிழங்கின் அந்துப் பூச்சியானது இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு விதைக் கிழங்குகள் மூலம் பரவியது. அதைப்போல, கோதுமையின் பூஞ்சைக்கொல்லி, ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்குள் பரவியது. 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தாவரத் தொற்றுத் தடுப்பு மையம், முன்கூறிய நோய்களால் பாதிக்கப்பட்ட தாவர விதைகள் மற்றும் தாவரப் பகுதிகளை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது. மேலும், தொற்றுத் தடைக்காப்பு உலகளவில் தாவர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நோய்த்தாக்கம் குறைகிறது.

பூச்சி மற்றும் நோய்களால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றித் தம்மிடம் தெரிவிக்குமாறு, உலகிலுள்ள அனைத்து நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை மையம் வலியுறுத்தி உள்ளது. இதன் மூலம் நோய்த்தாக்கம், அதன் வீரியம், அதனால் ஏற்படும் இழப்புகளைக் கண்டுபிடித்து, உலக நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவுறுத்துவதால், பூச்சிகள், நோய்கள், களைப்பரவல் ஆகியவற்றைத் தடுக்க இயலும்.

மேலும், இறக்குமதி செய்யும் போது தாவரக் கன்றுகள், தாவர மொட்டுகள் போன்ற விவசாயப் பொருள்களுக்கான நுழைவு ஆய்வுகள், மாநில விவசாயப் பல்கலைக் கழகங்கள் அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிறுவனங்களில் உள்ள பூச்சி, நோயியல் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இது, நோய்த்தொற்றைத் தடுக்க உதவியாக உள்ளது.

தொற்றுத் தடைக்காப்புத் தூய்மைச் சான்றிதழ் தேவைப்படாத விளைபொருள்கள்: பதப்படுத்தப்பட்ட தேனீர், பதப்படுத்தப்பட்ட ஓட்ஸ், பெருங்காயம், காகிதப் பைகள், காப்சூல் வடிவிலுள்ள சத்துப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட சணல் பொருள்கள், இயற்கை முறையில் மெழுகேற்றப்பட்ட தென்னைநார், தனிச் சோயாப் புரதங்கள், மரங்களில் இருந்து பெறப்படும் பிசின் வகைகள்.

இந்தத் தகவல்கள் மூலம், ஏற்றுமதி இறக்குமதியில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய குறிப்புகளை அறியலாம். மேலும், பூச்சி, நோய்த்தடுப்பு மேலாண்மையில் தொற்றுத் தடைக்காப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.


முனைவர் மு.சுகந்தி, முனைவர் சுரேஷ் சுப்பிரமணியன், முனைவர் ஹ.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading