My page - topic 1, topic 2, topic 3

அமுக்கராவின் மருத்துவப் பயன்கள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை

முக்கரா, மலைப்பகுதிகளில் புதர்ச் செடியாக வளருகிறது. மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகளையும் சிறிய கிளைகளையும் கொண்ட செடி. இது, ஆறடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் பச்சையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கும். தண்டும் கிளைகளும் மெல்லிய உரோமத்தால் மூடப்பட்டுச் சாம்பல் நிறமாகக் காணப்படும். பூ சிறியதாகவும், வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். முதிர்ந்த கனிகள், சிவப்பாக, உருண்டையாக, வழவழப்பாக இருக்கும். பழுப்பு நிறத் தோலால் மூடப்பட்டிருக்கும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் அமுக்கரா இயற்கையாக வளருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வணிக அடிப்படையில் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமுக்கிரி, அசுவகந்தா, அசுவகந்தி ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. இதன் இலை, விதை, வேர்க்கிழங்கு ஆகியன மருத்துவத்தில் பயன்படுகின்றன. அமுக்கரா வேர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அசுவகந்தா என்னும் பெயர், அமுக்கராவின் வேர்களைக் குறிப்பதற்காக, இந்திய மொழிகள் அனைத்திலும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

அமுக்கரா வெப்பத் தன்மையும் காரச் சுவையும் கொண்டது. இது சிறுநீரைப் பெருக்கும். உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும். வீக்கத்தைக் குறைக்கும். வாதநோயைக் கட்டுப்படுத்தும். உடலைத் தேற்றும். ஆண்மையைக் கூட்டும். அமுக்கரா வேரின் நோயெதிர்ப்புத் திறன் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தும்.

நரம்புத் தளர்ச்சிக் கட்டுப்பட

அமுக்கரா கிழங்கு 1 பங்கு, கற்கண்டு 3 பங்கு எடுத்து, நன்கு தூளாக்கிச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைக் காலை மற்றும் மாலையில், ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து, ஒரு டம்ளர் பசும்பாலில் குடித்து வர வேண்டும்.

உடல் அசதி, மூட்டுவலி தீர

நன்றாகக் காய்ந்த கிழங்கைத் தூளாக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் சம அளவு சர்க்கரையைச் சேர்த்து, காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் காலை, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் எடுத்து, காய்ச்சிய 200 மில்லி பாலில் கலந்து நான்கு வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வீக்கம் குறைய

காய்ந்த கிழங்கைச் சம அளவு சுக்குடன் சேர்த்து, வெந்நீர் விட்டு அரைத்து மேல் பூச்சாகப் பூச வேண்டும்.

உடல் பலம் அதிகரிக்க

பச்சைக் கிழங்கிலிருந்து இரசம் தயாரிக்க வேண்டும். இத்துடன் பனங்கற்கண்டு, தேன் மற்றும் திப்பிலியைச் சேர்க்க வேண்டும். இந்த இரசத்தைக் காலை, மாலையில் அரை டம்ளர் அளவில் 21 நாட்களுக்குப் பருக வேண்டும்.

பிரசவக்கால அசதி நீங்க

இரண்டு தேக்கரண்டி கிழங்குத் தூளை இளஞ்சூடான பாலில் கலந்து தினமும் இருவேளை பனங்கற்கண்டைச் சேர்த்துப் பருக வேண்டும். அமுக்கரா செடியை நாமே வளர்க்கலாம். ஓராண்டுக்குப் பிறகு நன்கு வளர்ந்து பூத்துக் காய்ந்த பிறகு, செடியைப் பிடுங்கிக் கிழங்குகளைப் பச்சையாகவோ காய வைத்தோ பயன்படுத்தலாம்.

பச்சைக் கிழங்கிலிருந்து இரசம் தயாரிக்கலாம். இலைகளில் இருந்து, மணித்தக்காளி இலைக்குழம்பு தயாரிப்பதைப் போல, காரக்குழம்பு செய்து சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் அமுக்கரா லேகியம், அசுவகந்தி லேகியம் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தி, உடல் பலம், அழகு மற்றும் நீண்ட ஆயுளைப் பெறலாம்.


– இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலிலிருந்து.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks