My page - topic 1, topic 2, topic 3

கோ.57 என்னும் கருப்புக் கவுனியின் சிறப்புகள்!

ருப்புக்கவுனி நெல், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் விளையும் பிரபலமான நெல்லாகும். சமீபத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.57 என்னும் புதிய கவுனி நெல் இரகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய இரகம், பிரபலமான மற்ற கவுனி இரகங்களை விட இரு மடங்கு மகசூல், அதாவது, எக்டருக்குச் சுமார் 4,600 கிலோ மகசூலைத் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கோ.57-இன் குறிப்பிடத்தக்க சிறப்புகளில் ஒன்று, அதன் ஒளிச்சேர்க்கைத் தன்மையாகும். இதை அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம். குறிப்பிட்ட சில பருவங்களில் மட்டுமே விளையும் கவுனி நெல்லில் இருந்து இது வேறுபட்டது. இதன் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் அதிக மகசூலைப் பெறலாம்.

கோ.57 நெல்லை 130-135 நாட்களில் விளைந்து விடும். இது, மற்ற கவுனி நெல் வகைகளை விட மிகக் குறைவு. கோ.57-இல், நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது, மூளை சிறப்பாக இயங்க உதவும். சர்க்கரை நோயைப் போக்கும் விதத்தில், கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையைச் சரி செய்யும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்.

அதிகளவு நார்ச்சத்து

ஒவ்வொரு அரை கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது, மற்ற அரிசி வகைகளை விட நலந்தருவதாக உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் சத்துப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.

அதிக வருமானம்

அதிக மகசூல் மற்றும் குறைந்த முதிர்வுக்காலம் கொண்ட கோ.57 இரக நெல் மூலம், நெல் விவசாயத்தில் அதிக வருமானத்தை விவசாயிகள்  எதிர்பார்க்கலாம். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

கோ.57-இன் குறுகிய முதிர்வுக்காலம், ஒளிச்சேர்க்கைத் தன்மை ஆகியன, பயிர்ச்சேதம் அல்லது பூச்சிகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதால், இது, நெல் சாகுபடியில் விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க உதவும்.

மேம்பட்ட சத்துகள் உள்ளடக்கம்

கோ.57-இன் அதிக நார்ச்சத்து, புரத உள்ளடக்கம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியன, தமிழக மக்களின் சத்துப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை நோய்களைத் தடுக்கவும் உதவும். கோ.57-இல் அதிக மகசூல் கிடைப்பதால், கவுனி அரிசியின் விலை குறையும் வாய்ப்புள்ளது.

கருப்புக்கவுனி அரிசியை வேக வைக்கும் முறை

கருப்புக்கவுனி அரிசி, மற்ற அரிசியைப் போல் விரைவாக வேகாது. சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். கவுனி அரிசியை 2-3 முறை அலசி, 1-1.5 மணி நேரம் நீரில் ஊற வைத்து எடுத்து வேக வைத்தால், நன்றாக வெந்து விடும். இல்லையெனில், இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் எடுத்து வேக வைப்பது மிக எளிதாக இருக்கும்.

கருப்புக்கவுனி அரிசி உணவுகள்

கருப்புக்கவுனி அரிசியைச் சோறாக வேக வைத்து உண்ணலாம். கஞ்சியாகக் காய்ச்சிச் சாப்பிடலாம். அரிசியை மாவாக அரைத்து, இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். இந்த அரிசியில் கேசரி செய்யலாம். இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். இனிப்புப் பலகாரங்களும் செய்யலாம்.

பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இந்தக் கருப்புக்கவுனி நெல் நன்கு வளர்வதற்கான உத்திகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்த நிலையத்தில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதற்குக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், விவசாயிகள், பண்ணை மகளிர், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.


சின்னுசாமி பிரபாகரன், உதவிப் பேராசிரியர்,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614404.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks