My page - topic 1, topic 2, topic 3

புயலில் பாதித்த நெற்பயிரைக் காக்கும் முறைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர்.

காவிரிப் பாசனப் பகுதியில் பள்ளக்கால் நிலங்களில் சாகுபடி செய்துள்ள, சம்பா, தாளடிப் பருவ நெற்பயிர்கள், கஜா புயல் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் இப்பயிர்கள், சத்துப் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதகளால் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க, சில முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நீரில் நெற்பயிர்கள் மூழ்குவதால் ஏற்படும் பாதிப்புகள்

நீர்த் தேங்கி இருப்பதால் பிராண வாயு கிடைக்காமல், வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும். பயிருக்குச் சுவாசக் காற்று முழுமையாகக் கிடைக்காமல் போவதால், பயிரைச் சார்ந்துள்ள நுண்ணுயிரிகளின் செயல் குறைந்து விடும் அல்லது நின்று விடும்.

மண் அதிகமாகக் குளிர்ந்து விடுவதால், மண்ணின் இயல்பான வெப்பம் குறைந்து விடும். இந்த வெப்பத்தை மண் மீண்டும் அடைய அதிகக் காலமாகும். இந்தக் குளிரில், மணிச்சத்து, சாம்பல் சத்து, துத்தநாகம் மற்றும் தாமிரச்சத்தை, பயிர்கள் குறைவாக எடுத்துக் கொள்வதால், சத்துப் பற்றாக்குறை உண்டாகும். இதனால், பயிர்களின் வளர்ச்சித் தடைபடும்.

மழைநீர் வடியும் போது, மண்ணில் உள்ள, தழை, மணி, சாம்பல், போரான், சுண்ணாம்பு, மாங்கனீசு ஆகிய சத்துகள் கரைந்து, அந்த நீருடன் வெளியேறி விடும். குளிர் வெப்பநிலையில் அங்ககப் பொருள்கள் பதன மாற்றமாகிச் சத்துகளாக மாற்றமாவது பாதிக்கப்படுவதால், பயிர்களுக்குக் கந்தகச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும்.

இதனால், இலைகள் மஞ்சளாக மாறும். மண்ணில் இரும்புச்சத்து மிகுந்தும், மாங்கனீசு குறைந்தும் போவதாலும், இலைகள் மஞ்சளாக மாறும். மாங்கனீசு குறைவதால் இலைப்புள்ளி நோய் உண்டாகும்.

தீர்வு: பயிர்கள் மூழ்காத வகையில், தேங்கியுள்ள நீரை வெளியேற்ற வேண்டும். இதனால், வேருக்குக் காற்றோட்டம் கிடைக்கும். வெள்ளநீர் வடிந்ததும் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இட வேண்டும். இதற்கு, யூரியாவைப் பயன்படுத்த வேண்டும்.

இளம் பயிர்களுக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கைக் கலந்து, ஒருநாள் இரவு வைத்திருந்து, மறுநாள் இத்துடன் 17 கிலோ பொட்டாசைச் சேர்த்து வயலில் சீராக இட வேண்டும். இது ஒரு ஏக்கருக்கான அளவாகும். நுண்ணுரக் கலவையையும் மேலுரமாக இட வேண்டும்.

நீர் வடிய வாய்ப்பின்றிப் பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் பயிர்கள், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாறும். இதை மாற்ற, 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ துத்தநாக சல்பேட்டை, 200 லிட்டர் நீரில் கலந்து, காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

சூல் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிருக்கு 4 கிலோ டி.ஏ.பி.யை, 10 லிட்டர் நீரில் கலந்து, இரவு முழுதும் வைத்திருந்து, மறுநாள் காலையில் வடித்து, அந்த நீருடன் 2 கிலோ பொட்டாசைச் சேர்த்து, 190 லிட்டர் நீரில் கலந்து, காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

பூச்சி மேலாண்மை

விட்டுவிட்டுப் பெய்யும் தூறல், குறைந்த வெப்பம், காற்றின் ஈரப்பதம் மிகுதல் போன்ற சூழலில், குருத்துப்பூச்சி, இலைச் சுருட்டுப் புழு, குருத்து ஈ, புகையான், ஆனைக் கொம்பன் ஈ ஆகியன நெற்பயிரைத் தாக்கும். மேலும், பயிர்கள் அடர்ந்து வளர்ந்துள்ள பகுதிகளில், எலிகளால் பாதிப்பு ஏற்படும். எனவே, இவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குருத்துப்பூச்சி, இலைச்சுருட்டுப் புழு

குருத்துப் பூச்சி, இளம் பயிர்கள் தூர்க்கட்டும் வரை, தண்டுகளில் நுழைந்து, வளரும் தண்டை உண்பதால், நடுக்குருத்துக் காய்ந்து விடும். அல்லது இறந்த குருத்துகள் உண்டாகும்.

இலைச்சுருட்டுப் புழுக்கள் தாக்கிய பயிரின் இலைகள், நீளவாக்கில் சுருண்டு, பட்டைப் போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டு இருக்கும். புழுக்கள் இதற்குள் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டித் தின்னும். இதனால், பச்சையம் சுரண்டப்பட்ட இடங்களில், நீளவாக்கில் வெள்ளைப் பட்டைகள் காணப்படும்.

தீர்வு: ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, குருத்துப் பூச்சியின் ஆண் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 25 பறவைத் தாங்கிகளை வைத்தால், அவற்றில் அமரும் பறவைகள், புழு, பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.

ஏக்கருக்கு 2சி.சி., அதாவது 40,000 முட்டைகள் அடங்கிய டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் முட்டை ஒட்டுண்ணியை, நடவு முடிந்து 30, 37 ஆகிய நாட்களில் வெளியிட்டு, குருத்துப் பூச்சியின் முட்டைக் குவியல்களை அழிக்கலாம்.

ஏக்கருக்கு 2சி.சி., அதாவது, 40,000 முட்டைகள் அடங்கிய டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணியை, நடவு முடிந்து 37, 44, 51 ஆகிய நாட்களில் வெளியிட்டு, இலை மடக்குப் புழுவின் முட்டைகளை அழிக்கலாம்.

இவற்றின் தாக்குதல் உள்ள இடங்களில், ஏக்கருக்கு 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சத வேப்பங் கொட்டைக் கரைசலில், ஒரு லிட்டர் நீருக்கு 30 மில்லி வீதம் ஒட்டும் திரவத்தைச் சேர்த்துத் தெளிக்கலாம்.

தாக்குதல் அதிகமானால், ஏக்கருக்கு, புரபினோபாஸ் 50 EC 400 மில்லி, புளுபென்டியாமைத் 39.35 SC 20 மில்லி, குளோரன்ட் ரான்லிபுரோல் 18.5 SC 60 மில்லி, கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 SP 400 கிராம் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை, 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

குருத்து ஈ, புகையான், ஆனைக்கொம்பன் ஈ

குருத்து ஈக்கள் தாக்கிய இளம் இலைகளில் மெல்லிய துளைகள் இருக்கும். முதிர்ந்த இலைகள் முறிந்து காணப்படும். புகையானின் இளம் குஞ்சுகள், வளர்ந்த பூச்சிகள், கூட்டங் கூட்டமாகத் தூர்கள் மற்றும் குத்துகளின் அடியில் இருக்கும். ஆனைக் கொம்பன் ஈக்கள் தாக்கிய இலைகள் விரியாமல், வெங்காய இலையைப் போலச் சுருண்டும் நீண்டும் இருக்கும்.

தீர்வு: இவற்றைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு அசாடிராக்டின் 500 மில்லி, தயாமீத்தாக்சாம் 25 WG 40 கிராம், குளோர் பைரிபாஸ் 20 EC 500 மில்லி, கார்போ சல்பான் 25 EC 400 மில்லி, பிப்ரோனில் 5 SC 400 கிராம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.

எலிக் கட்டுப்பாடு

எலிகள் தாக்கும் இடங்களில், ஏக்கருக்கு 25-30 தஞ்சாவூர் எலிக் கிட்டிகளை வைத்துப் பிடித்து அழிக்கலாம். ஆந்தைகள் அமர்ந்து எலிகளைப் பிடிக்க ஏதுவாக, ஏக்கருக்கு 25 பறவைத் தாங்கிகளை வைக்கலாம். மேலும், புரோமோ டையலோன் கட்டிகளை, மூன்று மீட்டருக்கு ஒன்று வீதம், வரப்பில் வைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய் மேலாண்மை

மழையுடன் மப்பும் மந்தாரமும் உள்ள சூழலில் நட்டுள்ள, சம்பா, தாளடிப் பயிரில், குலைநோய், பாக்டீரியா இலைக்கருகல், இலைக்கீறல் நோய்களின் தாக்குதல் வர வாய்ப்புள்ளது.

குலைநோய்

இலையில் நீளப்புள்ளிகள் உருவாகி, இரண்டு பக்க நுனிகளும் விரிந்து, நடுப்பகுதி அகலமாக, முனைகள் கூராக, நீண்ட கண் வடிவில் இருக்கும். இந்தப் புள்ளிகளின் ஓரங்கள் கரும் பழுப்பாக, உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும்.

தீர்வு: குலை நோயைக் கட்டுப்படுத்த, முன் எச்சரிக்கைச் செயலாக, நடவு வயலில் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரோசன்சை, 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து இட வேண்டும். அல்லது சூடோமோனாஸ் பாக்டீரியாவை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் எடுத்து, ஒரு லிட்டர் புளித்த தயிரில் கலந்து தெளிக்கலாம்.

நோய் தீவிரமாக இருந்தால், ஏக்கருக்கு, கார்பன்டசிம் 50 WP 200 கிராம் அல்லது டிரை சைக்ளோசோல் 75 WP 200 கிராம் அல்லது அசாக்சிஸ் டோர்பின் 25 SC 200 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பாக்டீரியா இலைக்கருகல், இலைக்கீறல் நோய்கள்

பாக்டீரியா இலைக் கருகலால் தாக்குண்ட இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி, பக்கவாட்டில் மஞ்சளாகி, பிறகு கருகி விடும். வைக்கோல் நிறத்தில் காய்ந்த பகுதி, நுனியிலிருந்து கீழ்நோக்கியும், ஓரத்திலிருந்து நடுநரம்பை நோக்கியும் நெளிந்து, அலையைப் போன்ற கோடுகளுடன் காணப்படும்.

தீர்வு: இந்த அறிகுறிகள் தெரிந்ததும் 20 சத பசுஞ்சாணக் கரைசல், அதாவது, 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் கரைத்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, கரைத்து விட்டு, தெளிந்த நீரை வடித்து, மேலும் 100 லிட்டர் நீரில் கலந்து 200 லிட்டராக்கி, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

தாக்குதல் கூடுதலாக இருந்தால், ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோ மைசின் சல்பேட்டுடன் டெட்ரா சைக்கிளின் கலந்த மருந்துக் கலவை 120 கிராம், காப்பர் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 500 கிராம் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். குறிப்பாக, மருந்தைத் தெளித்து 3-4 மணி நேரத்துக்கு மழை இருக்கக் கூடாது.


முனைவர் இராஜா.ரமேஷ், முனைவர் ஆ.பாஸ்கரன், வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர் – 614 404.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks