செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி.
இயற்கை வேளாண்மையில் தோழமைப் பயிர்களின் பங்கு பெரும்பயன் மிக்கதாகும். அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற தோழமைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம், முக்கியப் பயிர்களைப் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல்களில் இருந்து காத்து, தரமான விளைச்சலைப் பெற முடியும். மேலும், சில தோழமைப் பயிர்களால் கூடுதல் வருவாயையும் ஈட்ட முடியும்.
வாசனைத் திரவியப் பயிர்களான புதினா, பார்ஸி, மார்ஜோரம், ஒரிகானம், கேமோமைல், சேஜ், தைம், ரோஸ்மேரி போன்றவை, நீலகிரித் தட்பவெப்ப நிலையில் வளரும் முக்கியப் பயிர்களாகும். இவற்றைப் பயிரிட்டால், அப்பயிர்களில் இருந்து வெளிவரும் நறுமணம், பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இதனால், பூச்சிகள் இப்பயிர்களை அடைய, முக்கியப் பயிர்கள் காக்கப்படும்.
மேலும், இந்தப் பயிர்களில் உள்ள நறுமண எண்ணெய் வகைகள், பூசணத் தடுப்பான்களாகச் செயல்பட்டு முக்கியப் பயிர்களைப் பூசண நோய்களில் இருந்து காக்கும். காலண்டுலா மற்றும் செண்டுமல்லிப் பூக்கள், இந்த வகையில் மிகவும் உதவியாக இருக்கும். இந்தச் செடிகள் எளிதாக வளர்வதுடன், பூச்சிக் கட்டுப்பாட்டிலும் முக்கியப் பங்கை வகிக்கும்.
தோழமைப் பயிர்களின் நன்மைகள்
ஆஞ்சலிக்கா: இந்த வாசனைப் பயிரில் உள்ள நறுமணம், பெருமளவில் வண்டுகளைக் கவர்வதால், முக்கியப் பயிர்களில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
ஒரிகானம்: பெரும்பாலான பயிர்களுக்குத் தோழமைப் பயிராக ஒரிகானம் உள்ளது. குறிப்பாக, தக்காளி, மிளகு போன்றவற்றில் தோழமைப் பயிராகப் பயிரிட்டால், பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
டில்: லெட்டூஸ் மற்றும் பூசணிக் குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களில் இதைப் பயிரிட்டால், கண்ணாடி இறக்கைப் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து மகசூல் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஃபீவர் ஃபியூ: இந்தச் செடியைக் காரட் சாகுபடியில் தோழமைப் பயிராக வளர்ப்பதன் மூலம், காரட்டைத் தாக்கும் வேர்ப் புழுக்களைக் கவர்ந்து சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஹைசோப்: இந்தப் பயிரை முட்டைக்கோசில் தோழமைப் பயிராக வளர்த்தால், முட்டைக்கோசைத் தாக்கும் பூச்சிகளால் உண்டாகும் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம்.
எலுமிச்சைப் புல்: பெரும்பாலான காய்கறிப் பயிர்களில் இது தோழமைப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் நறுமணம் வண்டுகளைக் கவர்ந்திழுக்கும் தன்மை மிக்கது.
செண்டுமல்லி: தக்காளி, பேசில், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய் மற்றும் இதர காய்கறிப் பயிர்களின் தோழமைப் பயிராகச் செண்டுமல்லி விளங்குகிறது. இந்தச் செடிகளில் இருந்து வெளிவரும் நறுமணம், ஈக்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை மிக்கது.
நாஸ்ட்ரூடியம்: முள்ளங்கி, முட்டைக்கோசு மற்றும் பழமர நிலங்களில் இது தோழமைப் பயிராக சாகுபடி செய்தால், அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுத்து, முக்கியப் பயிர்களில் சேதத்தைக் கட்டுப்படுத்தும்.
பார்ஸி: தக்காளி, அஸ்பராகஸ், மக்காச்சோளம் மற்றும் பிற பயிர்களில் பார்ஸியைத் தோழமைப் பயிராக வளர்க்கலாம். இதன் மூலம் பூச்சிகளின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.
சேஜ்: இது, காரட், பட்டாணி, பீன்ஸ், முட்டைக்கோசு மற்றும் ரோஸ்மேரிக்கு ஏற்ற தோழமைப் பயிராகும். இதிலுள்ள நறுமணம், வண்டுகளைக் கவர்வதுடன், வைரமுதுகு அந்துப் பூச்சிகளை விரட்டும் தன்மை மிக்கது.
தைம்: இதை, முட்டைக்கோசு, பூக்கோசு, கிளைக்கோசு சாகுபடியில் வளர்ப்பதன் மூலம், வேர் ஈக்கள், முட்டைக்கோசு வைரமுதுகு அந்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
ஆர்டிமீசியா: இது, காரட் பயிருக்கு முக்கியமான தோழமைப் பயிராக விளங்கி, காரட்டைத் தாக்கும் வேர்ப் புழுக்களைக் கவர்ந்து சேதத்தைக் கட்டுப்படுத்தும்.
அஸ்பராகஸ்: இது, தக்காளி, பேசில் மற்றும் பார்ஸியின் தோழமைப் பயிராக விளங்குகிறது.
டான்சி: திராட்சை, ரோஜா சாகுபடியில் இதைப் பயிரிடுவதன் மூலம், பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
சைவ்ஸ்: இது, காரட் பயிருக்கு ஏற்ற முக்கியத் தோழமைப் பயிராகும். இச்செடிகள், வண்டுகளையும் ஈக்களையும் கவர்ந்து, இவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.
காட்மிண்ட்: இது, பூக்கோசு மற்றும் கிளைக்கோசு சாகுபடியில் தோழமைப் பயிராக விளங்குகிறது. இந்த நறுமணப் பயிரின் மணம், நறுமணப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளான, அசுவினி, வண்டுகள், எறும்புகள், கூன்வண்டுகள் போன்றவற்றை விரட்டும் தன்மையைப் பெற்றுள்ளது.
போரேஜ்: ஸ்ட்ராபெரி சாகுபடியில், இது முக்கியத் தோழமைப் பயிராக விளங்குகிறது. இது, வண்டுகளை, குளவிகளை ஈர்க்கும் தன்மை மிக்கது. செடிகள் பூச்சிகளை எதிர்க்கும் திறன் மிக்கவை.
பூண்டு: ஆப்பிள், ரோஜா மற்றும் பீச் மரங்கள் வளர்ப்பில் தோழமைப் பயிராகப் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
கேமோமில்: முட்டைக்கோசு மற்றும் புதினா சாகுபடிக்கு ஏற்ற முக்கியத் தோழமைப் பயிராக கேமோமில் விளங்குகிறது.
குதிரை முள்ளங்கி: இது, கோதுமை சாகுபடிக்கு ஏற்ற தோழமைப் பயிராகும்.
லீக்: இது, காரட், செலரி ஆகிய பயிர்களில் தோழமைப் பயிராக வளர்க்கப்படுகிறது.
லெட்டுஸ்: இது, காரட், வெங்காயம், ஸ்ட்ராபெரி, பீட்ரூட் ஆகிய பயிர்களின் முக்கியத் தோழமைப் பயிராகும்.
பீன்ஸ்: இது, காரட், முட்டைக்கோசு, லெட்டுஸ், பட்டாணி, பார்ஸ்ஸி, பூக்கோசு ஆகிய பயிர்களின் தோழமைப் பயிராக விளங்குகிறது.
மற்ற தோழமைப் பயிர்கள்
முட்டைக்கோசு பயிரில் முள்ளங்கியைத் தோழமைப் பயிராக வளர்த்துக் குறுகிய காலத்தில் அறுவடை செய்து அதிக இலாபம் பெறலாம். 150 நாள் வயதுள்ள தக்காளியில், 75-90 செ.மீ. இடைவெளியில், முள்ளங்கி, லெட்டுஸ் ஆகியவற்றைத் தோழமைப் பயிர்களாக வளர்க்கலாம். இதன் மூலம் 50 நாளில் முள்ளங்கியையும், 80 நாளில் லெட்டுஸையும் அறுவடை செய்து அதிகமான இலாபத்தைப் பெறலாம்.
காரட் சாகுபடியில் பட்டாணியைத் தோழமைப் பயிராக வளர்க்கலாம். இதனால், 45 நாட்கள் வரை, காரட் தாமதமான வளர்ச்சியை அடைகிறது. இதில், பட்டாணி வகையான அர்கேலைப் பயிரிட்டால், 55-60 நாட்களில் பட்டாணியில் முதல் அறுவடையையும், 85 நாட்களில் முழு அறுவடையையும் முடிக்கலாம். மேலும், பட்டாணிச் செடிகளை அகற்றிக் கொத்தி விடுவதன் மூலம், காரட் பயிர் நன்கு வளர்ந்து 130-135 நாட்களில் நல்ல மகசூலைத் தரும்.
பாலக்கீரையைத் தக்காளியில் தோழமைப் பயிராக வளர்த்து, நல்ல மகசூலைப் பெறலாம். காரட் பயிருக்கு இடையில் சக்கரவர்த்திக் கீரையைப் பயிரிட்டு, 50 நாட்களில் அறுவடை செய்யலாம். இதனால், காரட் பயிரில் களைகள் வளர்வதைத் தடுத்துக் கூடுதல் மகசூலைப் பெறலாம்.
நாஸ்டெர்டியம் முக்கியத் தோழமைப் பயிராகும். இது, அசுவினி, கறுப்பு அசுவினி, வண்டுகள், வெள்ளை ஈக்கள் மற்றும் முட்டைக்கோசைத் தாக்கும் பூச்சிகளைக் கவர்ந்திழுத்துச் சேதத்தைக் குறைக்கும்.
தோழமை அல்லாத பயிர்கள்
இயற்கை வேளாண்மையில், தோழமைப் பயிர்களால் நன்மை ஏற்படுவதைப் போலவே, தோழமை அல்லாத பயிர்களை சாகுபடி செய்யும் போது, இரண்டு பயிர்களுக்கு இடையே சத்துகளைப் பகிர்வதில் கடும் போட்டி நிலவும். மேலும், இப்பயிர்களின் வேர் அமைப்பும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போவதில்லை.
எனவே, மகசூல் பாதிப்பு உண்டாகும். ஆகவே, பயிர் சாகுபடியை, தோழமையற்ற பயிர்களையும் கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும்.
ஆப்பிள்: உருளைக் கிழங்கு, புல்.
பீன்ஸ்: வெங்காயம், கோல் ராபி, கிளாடியோலை.
பீட்ரூட்: டால்பீன்ஸ்.
ப்ரக்கோலி: ஸ்ட்ராபெரி.
முட்டைக்கோசு: ஸ்ட்ராபெரி, தக்காளி, பூண்டு.
பூக்கோசு: ஸ்ட்ராபெரி.
பூண்டு: பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோசு, ஸ்ட்ராபெரி.
கிளாடியோலை: அனைத்துக் காய்கறிப் பயிர்கள்.
நூல்கோல்: தக்காளி, பீன்ஸ், சோம்பு, ஸ்ட்ராபெரி.
புதினா: பார்லி.
பேரிக்காய்: புல்.
பட்டாணி: வெங்காயம்.
உருளைக் கிழங்கு: ரோஸ்மேரி, ஆப்பிள், தக்காளி, சூரியகாந்தி.
முனைவர் வி.சு.சுகந்தி, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரி, கலவை, வேலூர் – 632 500.
சந்தேகமா? கேளுங்கள்!