கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018
தமிழ்நாட்டில் சுமார் 4500 எக்டரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த வெற்றிலை உற்பத்தியில் 46.5% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. கூடுதல் வேலை வாய்ப்பும், மிகுந்த வருமானமும் தரக்கூடிய பணப்பயிரான வெற்றிலையைச் சாகுபடி செய்வதற்குக் கவனமும், தொழில் திறமையும் வேண்டும். வளமான, வடிகால் வசதியுள்ள நிலமும், பற்றாக்குறை இல்லாத நீரும், கொடி வளர்வதற்கான உயிர்க்காலும் வெற்றிலை சாகுபடிக்குத் தேவை. இப்படித் திட்ட வட்டமான தேவைகளைக் கொண்ட கொடிக்கால் சாகுபடியைப் பரம்பரைத் தொழிலாகப் பலர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெற்றிலையில், யூஜினால் எனப்படும் எண்ணெய்ச் சத்து, அமினோ அமிலங்கள், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீஷியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் ஏ, பி, சி ஆகிய சத்துகள் உள்ளன. வெற்றிலையின் மருத்துவக் குணங்களுக்கு இந்த இரசாயனப் பொருள்களே காரணமாக அமைகின்றன.
வெற்றிலை இரகங்கள்
தமிழ்நாட்டில் வெள்ளைக்கொடி, பச்சைக்கொடி, கற்பூரக்கொடி, எஸ்.ஜி.எம்.1, எஸ்.ஜி.எம்.2 ஆகிய இரகங்கள் பெருமளவில் சாகுபடியில் உள்ளன. எஸ்.ஜி.எம்.1, எஸ்.ஜி.எம்.2 இரகங்கள், சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்டது.
எஸ்.ஜி.எம்.1: இது ஓர் உயர் விளைச்சல் இரகமாகும். இந்த இரகம் குத்துச்செடியைப் போலக் காணப்படும். வளர்ச்சிக் குறைவாக உள்ளதால் அடிக்கடி கட்ட வேண்டியது இல்லை. ஆகவே, உற்பத்திச் செலவும் குறைகிறது. வாடல் நோய்க்கு எதிர்ப்புச் சக்தி கொண்ட இரகம்.
எஸ்.ஜி.எம்.2: ஒரு கொடியில் 17-20 கிளைகள் கிளைக்கும். நீளமான காம்புகளையுடைய கரும்பச்சை இலைகளை விடும். இலைகள் மிதமான காரத்துடன் சுவைமிக்கதாக இருக்கும். அதிக மகசூலைத் தரும். வாடல் நோய், இலைப்புள்ளி நோய், நூற்புழுத் தாக்குதல் ஆகியவற்றைத் தாங்கி வளரும்.
நடவுப் பருவம்
வெற்றிலைச் சாகுபடிக்குக் காற்றில் மிகுந்த ஈரப்பதம், நல்ல நீர்வளம், நிழலுடன் கூடிய வெப்பப் பகுதி தேவை. வெப்பம் மிகுந்த காற்று, கடுங்குளிர் ஆகியன, கொடி வளர்ச்சிக்கு ஏற்றவையல்ல. ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் வெற்றிலைச் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை.
அகத்தி விதைப்பு
காற்று மற்றும் சூரிய வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், வெற்றிலைக் கொடிகள் உயிருள்ள மரங்களின் மீது படர விடப்படும். இதற்கு, வேகமாக வளரக்கூடிய அகத்தி மட்டுமே உகந்ததாக உள்ளது. இவ்வகையில், ஏக்கருக்கு 10 கிலோ அகத்தி விதை தேவைப்படுகிறது. கிடங்கு முறை சாகுபடிக்கு, 40-45 செ.மீ. அகலம், 90-120 செ.மீ ஆழமுள்ள கிடங்குகளை 2 மீட்டர் இடைவெளியில், அதாவது, ஏக்கருக்கு 70-75 கிடங்குகளை வெட்ட வேண்டும். பாத்தி முறை சாகுபடிக்கு, 60-70 செ.மீ. அகலம், 15 செ.மீ. ஆழமுள்ள மேட்டுப் பாத்திகளை 2 மீட்டர் இடைவெளியில் வெட்ட வேண்டும். அகத்தி விதைகளைப் பட்டத்திற்கு இருபுறமும் 45 செ.மீ இடைவெளியில், குழிக்கு 4 விதைகளை ஊன்ற வேண்டும்.
விதைக்கொடித் தேர்வும் நடவும்
அகத்தி விதைகளை ஊன்றி 60 நாட்கள் கழித்து வெற்றிலைக்கொடி நடவு செய்யப்படுகிறது. ஓராண்டு வயதுள்ள தாய்க்கொடியிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு கணுக்களைக் கொண்ட கொடிகள் அல்லது 45-60 நாட்கள் வயதுள்ள நாற்றங்கால் கொடிகள் நடவுக்குப் பயன்படுகின்றன. வாடல் நோயிலிருந்து கொடிகளைக் காப்பாற்ற, விதைக்கொடிகளை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, அரை சத போர்டோ கலவை + ஸ்ரெப்டோசைக்ளின் (0.5 கிராம்/லிட்டர்) கரைசலில் ஐந்து நிமிடம் நன்கு நனைத்து எடுத்து, அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி நட வேண்டும்.
கிடங்கு முறையில் இரண்டு விதைக்கொடிகளை ஒன்றாகச் சேர்த்துப் படுக்கையாக நட வேண்டும். புதைவாயில் சேற்றை வைத்து மூடியபின், நான்காவது கணுவின் மேல் ஒரு கைப்பிடிச் சேற்றை வைக்க வேண்டும். பாத்தி முறையில் நேராக இருக்கும் வகையில் குழிக்கு ஒரு கொடி வீதம் இரண்டு கணுக்கள் மண்ணுக்குள் இருக்குமாறு நட வேண்டும். இப்படிச் செய்தால் நட்ட 20 நாட்களில் வேர் பிடிக்கும்.
கொடிகளைக் கட்டுதல்
நட்ட 45-60 நாட்களில் வெற்றிலைக் கொடிகளைத் தூக்கிக் கட்ட வேண்டும். அகத்திக் கால்கள் 6 அடிக்கு மேல் வளர்ந்த பிறகு விட்டம் கட்ட வேண்டும். அவ்வப்போது தழைகளைக் கழித்து, பட்டங்களில் மிதமான சூரிய வெளிச்சம் படும்படி செய்ய வேண்டும். கிடங்குப் பயிரில் நடவு செய்த 9 மாதங்களில் முதல் முறையும், அடுத்து 6 மாதங்கள் கழித்து இரண்டாவது முறையும் கொடிகளை இறக்கி வளையம் போல் மடித்து அகத்திக் கால்களின் அடிப்பாகத்தில் கட்ட வேண்டும். வளையத்தின் கீழ்ப்பகுதியைச் சேற்றால் மூடிவிட வேண்டும். பாத்திப்பயிரில் நடவு செய்த 9 மாதங்களில் முதல் முறையும், அடுத்து ஆண்டுக்கு இரு முறையும் கொடிகளை இறக்கிக் கட்ட வேண்டும்.
பாசனம்
மண்ணின் ஈரத்தன்மை, மழை ஆகியவற்றைப் பொறுத்து குளிர் காலத்தில் 4-5 நாட்களுக்கு ஒரு முறையும், வெய்யில் காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளும் நீர் இறைக்க வேண்டும்.
பயிர் ஊக்கிகள்
டிரையாகாண்டனால் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மில்லி வீதம் கலந்து தெளித்தால், வெற்றிலையின் அளவு பெரிதாகும். சிங்சல்பேட்டை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளித்தால், இலைகள் பளபளப்பாக இருக்கும்.
அறுவடை
கொடிகளை நட்ட 140-160 நாட்களில் முதல் அறுவடை தொடங்கும். பின்னர் 20 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். முதலாண்டில், எஸ்.ஜி.எம். இரகக் கொடியொன்றில் 140 இலைகளும், மற்ற இரகங்களில் ஒரு கொடியில் 60-70 இலைகளும் கிடைக்கும். கிடங்கு முறையில் நட்டிருந்தால் 2.5 ஆண்டுகளும், பாத்தி முறையில் நட்டிருந்தால் 40-50 வருடங்கள் வரையிலும் பராமரிக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் வெற்றிலையில் வாடல் நோய், கருந்தாள், ஈரப்புள்ளி, தீச்சல், சாம்பல்நோய், மை விழுதல் போன்றவை முக்கியமான நோய்களாகும்.
தீய்ச்சல் நோய் அறிகுறி
பூச்சிகளில் செதில் பூச்சி ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலும், சிவப்பு சிலந்திப் பூச்சி பிப்ரவரி முதல் ஜுலை வரையிலும் அதிகளவில் தென்படும். நூற்புழு சில சமயங்களில் இங்கும் அங்குமாகச் சில மாவட்டங்களில் சிறியளவில் தென்படுகிறது.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு
பூச்சி, நோயைத் தாங்கக்கூடிய சிறுகமணி 1, 2 இரகங்களைத் தேர்வு செய்தல். போர்டோ கலவை மற்றும் ஸ்ரெப்டோசைக்கிளின் மருந்துக் கலவையில் விதைக் கொடிகளை 5 நிமிடம் ஊற வைத்தல். கொடிக்கால் சுகாதாரம் பேணுதல். செப்டம்பர் முதல் ஜனவரி வரை மாதம் ஒருமுறை 0.25 சத போர்டோ கலவையை வேர்ப் பகுதியில் ஊற்றுதல். வேரழுகல் நோயைத் தடுக்க, ஒரு கிலோ டிரைக்கோடெர்மா, 100 கிலோ தொழுவுரம், 10 கிலோ வேப்பம் புண்ணாக்கைக் கலந்து ஆண்டுக்கு நான்கு முறை கொடியைச் சுற்றி மண்ணில் இடுதல்.
இரண்டு மீட்டர் வெற்றிலைக் கொடியில் 5 செதில் பூச்சிகளுக்குக் கீழும், 3 சிவப்புச் சிலந்திப் பூச்சிகளுக்குக் கீழும் இருந்தால் பொருளாதாரச் சேத அளவாகும். செதில் பூச்சியைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 2 சதம், பூண்டுச்சாறு 2 சதம் கலந்து தெளித்தல். முருங்கையை ஆங்காங்கே பயிரிட்டு செவ்வட்டையைக் கண்காணித்தல். நனையும் கந்தகத்தை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளித்துச் செவ்வட்டையைக் கட்டுப்படுத்துதல். மறு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்தல்.
அகத்தியைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, மாதம் ஒருமுறை 5 சத வேப்பங் கொட்டைச் சாற்றை இலை வழியாகவும், மண் வழியாகவும் ஒட்டும் திரவத்துடன் கொடுக்கலாம். அல்லது எதிர்ப்பூச்சிப் பூசணமான பிவேரியா பேசியானாவை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.
முனைவர் இரா.சித்ரா,
முனைவர் த.ஜானகி, முனைவர் மொ.பா.கவிதா,
தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!