பொதுவாகக் கரும்பு நடவு, 3-4 அடி இடைவெளியில் பார்களை அமைத்துச் செய்யப்படுகிறது. அப்படி இல்லாமல், சில சமயம், இடத்துக்கு ஏற்ப, சிறப்பு நடவு முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள்.
நடவு முறைகள்
பார்களில் நடுதல். சமப் பாத்திகளில் நடுதல். பார்த்தா அல்லது சாய்வு முறையில் நடுதல். ஆழ்க்கிடங்கு முறையில் நடுதல். குழி முறையில் நடுதல். நாற்றுகளை நடுதல். இணை வரிசையில் நடுதல். இயந்திரம் மூலம் நடுதல்.
பார்களில் நடுதல்
செம்மண், வண்டல் மண் மற்றும் லேசான களிப்பு மண் உள்ள பகுதிகளில் பார் நடவு முறை அதிகமாக உள்ளது. டிராக்டர் அல்லது கலப்பை மூலம் நிலத்தை நன்கு உழுத பிறகு, 3 அல்லது 4 அல்லது 5 அடி இடைவெளியில் பார்களை அமைத்து, அவற்றின் பக்கவாட்டில் அல்லது அடியில், 5 செ.மீ. ஆழத்தில் இருபருக் கருணைகளை வரிசையாக நட வேண்டும்.
பார்களின் நீளம், வசதிக்கு ஏற்ப, 5 முதல் 15 மீட்டர் நீளம் வரை இருக்கலாம். இம்முறையில் பாசனம் செய்வது எளிதாக இருக்கும். மேலும், மண்ணுக்கு உள்ளும், பயிர்களுக்கு இடையிலும், நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், இம்முறையே பெரும்பாலான கரும்பு விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது.
சமப்பாத்தி நடவு முறை
இம்முறை, அதிகக் களிப்பு மண் உள்ள பகுதியில் நடைமுறையில் உள்ளது. நெல் அறுவடை முடிந்ததும், ஈரமாக உள்ள நெல் வயலில், கயிறு பிடித்து, வரிசையாக, மூன்றடி இடைவெளியில் கரும்பு நடப்படுகிறது. கரணைகள் முளைத்து, பயிர் வளர்ந்ததும் உரம் வைக்கப்படுகிறது.
பயிர்கள் சாயாமல் இருக்க, மண் அணைத்து விடப்படுகிறது. நடவு செய்ததில் இருந்து 3-4 மாதம் கடந்த பிறகு, இந்த நடவு முறை, பார்களை அமைத்துக் கரும்பு நடவு செய்வதைப் போலவே இருக்கும்.
பார்த்தா அல்லது சாய்வு நடவு முறை
இம்முறையில், இருபருக் கரணைகள், சாய்வாக, அதாவது, கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் நடவைப் போல, பார்களின் பக்கவாட்டில் அல்லது பள்ளத்தில் நடப்படும். இம்முறையில் மண்ணுக்குள் ஒரு பருவும், மண்ணுக்கு வெளியே ஒரு பருவும் இருக்கும். அதிக ஈரத்தால் மண்ணுக்கு உள்ளே உள்ள பரு அழுகிப் போனாலும், மண்ணுக்கு வெளியே உள்ள பரு முளைத்துப் பயிராகும்.
நிலத்தில் நீர் வடிந்து மண் காயத் தொடங்கியதும், மண்ணில் பதியுமாறு கரணையை அமுக்கிவிட வேண்டும். இம்முறை, காயாத மண்ணுள்ள ஆற்றுப் பாசனப்பகுதி, வாய்க்கால், ஏரிக்கு அருகிலுள்ள பகுதி, ஆற்றின் கழிமுகப் பகுதி மற்றும் மழைக் காலத்தில் நடுவதற்கு ஏற்ற முறை.
ஆழ்க்கிடங்கு நடவு முறை
வாய்க்கால் பாசனம் உள்ள திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுப் பயிராக, நெல்லுக்குப் பிறகு கரும்பு பயிரிடப்படும். களிமண் அதிகமுள்ள இந்த மண்ணில், நெல் சாகுபடியால் மண் இறுக்கமாகி, போதிய வடிகால் வசதி இல்லாமல் இருக்கும்.
எனவே, நெல் அறுவடைக்குப் பிறகு, நிலத்தை உழுது பண்படுத்த முடியாததால், மண்வெட்டி மூலம் மேடான சால்களை அமைத்து, கரும்பு நடப்படும். பாசன வாய்க்காலை மூடியதும் கரும்பில் வறட்சி நிலவும். பிறகு, மழைக் காலத்தில் மழைநீரும், வாய்க்கால் நீரும் சேர்ந்து, கரும்பு வயல்களில் தேங்கும் நிலை ஏற்படும். இதையே, முன்பட்ட வறட்சி மற்றும் பின்பட்ட நீர்த்தேக்க நிலை என்கிறோம். இத்தகைய சூழ்நிலைக்கு, ஆழ்க்கிடங்கு நடவு முறையே சிறந்தது.
இந்த முறையில், 30 செ.மீ. ஆழம், 60 செ.மீ. அகலமுள்ள ஆழக் கிடங்குகளை, மூன்றடி இடைவெளியில் தோண்டி, கிடங்கின் இரு ஓரமும் இரு வரிசையில் கரணைகளை நடவு செய்ய வேண்டும். கிடங்கில் தோண்டி, பார் மீது போடப்பட்ட மண் மென்மையாக இருக்கும்.
பயிர் வளர வளர, பார்கள் மீது கிடக்கும் மண்ணை எடுத்து, கிடங்கை மூடிக்கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், ஆறு மாதங்களில் கிடங்குகள் உயரமான பார்களாகி விடும். ஏற்கெனவே இந்தப் பார்கள், ஆழம் குறைவான சால்களாக, கரும்பின் இரு புறமும் இருப்பதால், சிறந்த வடிகால்களாக அமையும். ஒவ்வொரு பாரிலும் இரண்டு வரிசையில் கரும்பு இருக்கும்.
எனவே, இம்முறையில் பயிரிடப்படும் கரும்பு, முன் பருவத்தில் கிடங்கில் இருந்து வறட்சியைத் தாங்கும். பின் பருவத்தில் பார்களில் இருப்பதால், மழைக் காலத்தில் தேங்கும் நீரால், பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
குழி நடவு முறை
உழவு முடிந்ததும், நடவு வயலில் பார்களை அமைத்து, விதைக் கரணைகளை நடவு செய்வதற்குப் பதில், குழிகளை அமைத்து அதற்குள் விதைக் கரணைகளை நடவு செய்யும் முறையே, குழி நடவு முறை. இம்முறையில், 5×5 அடி இடைவெளியில், மூன்றடி விட்டத்தில், ஒன்றே கால் அடி ஆழத்தில், குழிகளை எடுக்க வேண்டும். இப்படி, எக்டருக்கு 4,444 குழிகளை எடுக்கலாம்.
நடவு செய்வதற்கு முன், சொட்டுநீர்ப் பாசனம் மூலம், குழிகளை நன்கு நனைக்க வேண்டும். இதனால், கரணைகளின் முளைப்புத் திறன் கூடும். பிறகு, இந்தக் குழிகளில் அரையடி ஆழத்துக்கு, மணல், செம்மண் மற்றும் மட்கிய சாண எருவை நிரப்ப வேண்டும். நடுவதற்கு, 32 ஒரு பருக்கரணை, 16 இருபருக் கரணை வீதம் எடுத்து, குழியின் வெளிப்புறம் இருந்து, நான்கு அங்குலம் உள்ளடக்கி, ஒரே சீராக, சைக்கிள் சக்கரக் கம்பிகளைப் போல நடவு செய்ய வேண்டும்.
நட்டதில் இருந்து 55 நாட்களில், சுற்றியுள்ள மண்ணைச் சிறிதளவு தள்ளி விட்டு, குழியை 5 செ.மீ. அளவில் மூட வேண்டும். பிறகு, 90-120 நாளில், தரையில் இருந்து 1-2 அங்குலம் பள்ளம் விட்டு, குழிகளை மண்ணால் நிரப்ப வேண்டும்.
குழி நடவின் அனுகூலங்கள்
சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மிகவும் உகந்தது. அதிகளவில் பாசனநீரைச் சேமிக்கலாம். உரம் மற்றும் நீர் வீணாதல் முற்றிலும் தவிர்க்கப்படும். களைக் கட்டுப்பாடு எளிதாக இருக்கும். நடவு மற்றும் மறுதாம்புப் பயிரில், அதிக மகசூல் கிடைக்கும். களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற முறை.
நாற்று நடவு முறை
நாற்று நடவு முறையை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை முறையே, நெகிழிப்பை நாற்று நடவு, ஒரு பருக்கரணை நேரடி நடவு, ஒரு பருக்கரணை நாற்று நடவு, பருச்சீவல் நாற்று நடவு.
நெகிழிப்பை நாற்று நடவு: ஒரு பருக் கரணைகளை, சிறிய நெகிழிப் பைகளில், பரு, மேல் நோக்கி இருக்குமாறு படுக்கை வசமாக அழுத்தி வைத்து, பரு சற்று மறையும் வகையில் லேசாக மண்ணால் மூடி, நிழல் பகுதியில் அல்லது நிழல்வலைக் கூடத்தில் வைத்து, பூவாளியால் தினமும் நீரை ஊற்றி வர வேண்டும். ஒரு மாதம் வளர்ந்த நாற்றுகளை, மூன்றடி அல்லது நான்கடி இடைவெளிப் பார்களில், நெகிழிப் பையின் அடியிலும், பக்கவாட்டிலும் கிழித்து, நாற்றை மட்டும் எடுத்து நட வேண்டும்.
ஒரு பருக்கரணை நேரடி நடவு: ஒரு பருக் கரணைகளை எடுத்து விதை நேர்த்தி செய்து, சால்களில், பருவுக்குப் பரு 30 செ.மீ. இடைவெளி இருக்கும் வகையில், மூன்றடி அல்லது நான்கடிப் பார்களில் நட வேண்டும். பரு, மேல் நோக்கி இருக்கும் வகையில், மண்ணில் அழுத்தி நடவு செய்ய வேண்டும்.
ஒரு பருக்கரணை நாற்று விட்டு நடுதல்: ஒரு மீட்டர் நீள, அகலமுள்ள மேட்டுப் பாத்திகளில், ஒருபருக் கரணைகளை, செங்குத்தாக அல்லது படுக்கை வசத்தில் நெருக்கி நட வேண்டும். கரணைகள் முளைத்த பிறகு, மூன்றடிப் பார்களில், ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். இந்த முறையில், 70-75 சதவீதக் கரணைகளைச் சேமிக்கலாம். இம்முறையில், நேரம் மற்றும் விதைக்கரணைச் சேமிப்பு மிக முக்கிய அம்சமாகும்.
பருச்சீவல் நாற்று நடவு: ஒரு பருக் கரணைகளுக்குப் பதில், முளைக்கும் பருக்களை, தாய்த் திசுவோடு சேர்த்து, இயந்திரத்தின் உதவியுடன் பெயர்த்து எடுக்க வேண்டும். பிறகு, மட்கிய தென்னை நார்க்கழிவும், மண்புழு உரமும் சமமாக நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில், பருக்கள் மேல் நோக்கி இருக்குமாறு சாய்வாக நட்டு, நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.
இம்முறையில், 3-5 நாட்களில் பருக்கள் முளைக்கத் தொடங்கி, 25 நாட்களில் நடவுக்குத் தயாராகி விடும். இந்த நாற்றுகளை, ஐந்தடிப் பார்களில், இரண்டடி இடைவெளியில் நட வேண்டும். இப்படி, பருச்சீவல் நாற்றுகளை நடவு செய்வது, செம்மைக் கரும்பு சாகுபடியில் முக்கிய அங்கமாகும். இம்முறையில், விதைக் கரணையின் தேவை, மிக மிகக் குறைவாகும். பருக்கள் எடுக்கப்பட்ட கரும்பை ஆலைக்கு அனுப்பி விடலாம்.
இணை வரிசை நடவு முறை
இம்முறை, சொட்டுநீர்ப் பாசனத்தை மிகச் சிறப்பாக, குறைந்த செலவில் அமைப்பதற்கு என, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உருவாக்கிய தொழில் நுட்பமாகும். பொதுவாக, மூன்றடிப் பாரில் தான் கரும்பு பயிரிடப்படுகிறது. இதனால், சொட்டுநீர்ப் பாசனத்தை அமைக்க, நிறையச் சொட்டுவான்கள், பக்கக் குழாய்கள் தேவைப்படுவதால் செலவு அதிகமாகிறது.
எனவே, இணை வரிசை நடவு முறையில், 120 செ.மீ இடைவெளியில், 25 செ.மீ. அளவுள்ள இரு பார்கள் இணையாக எடுக்கப்படும். இந்தப் பார்களின் நடுவில், சொட்டுநீர்ப் பாசனக் குழாயை அமைத்து, அதற்கு இருபுறமும் கரும்பு நடவு செய்யப்படும். இம்முறையில், பாசனநீர், இரு கரும்பு வரிசைகளுக்கு இடையில் மட்டும் விடப்படுவதால், கரும்பில் களைகள் வளர்வது வெகுவாகக் குறையும்.
இணை வரிசைகளுக்கு இடையில், 120 செ.மீ. இடைவெளி இருப்பதால், இயந்திரக் கலப்பையால் இடையுழவு செய்யலாம். மேலும், கரும்பு அறுவடையை இயந்திரம் மூலம் செய்ய முடியும்.
இயந்திர நடவு முறை
கரும்பு சாகுபடி, அதிகளவில் வேலையாட்கள் தேவைப்படும் விவசாயம் ஆகும். இதில், கரணை தயாரித்தல், நிலம் தயாரித்தல் மற்றும் அடியுரம் இட்டுக் கரணைகளை மூடும் வரை, ஏக்கருக்கு 50-80 ஆட்கள் தேவைப்படும். எனவே, ஆள் பற்றாக்குறை உள்ள இந்தக் காலக் கட்டத்தில், கரும்பு சாகுபடி இயந்திர மயமாகி வருகிறது. இம்முறையில், ஏக்கருக்குப் பத்து ஆட்களை வைத்து நடவு செய்ய முடியும். இயந்திர நடவு முறையை இரு வகையாகப் பிரிக்கலாம்.
இயந்திர முறையில் கரணை நடவு: முதலில் நிலத்தை இயந்திரக் கலப்பை மூலம், புழுதியாக உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, 55 எச்.பி. டிராக்டரில் நடவுக் கருவியைப் பொருத்த வேண்டும். பிறகு, அதில் இரண்டு ஆட்கள் அமர்ந்து கொண்டு, முழுக் கரும்புகளை எடுத்துக் கருவியில் கொடுக்க வேண்டும். அப்போது அந்த நடவுக் கருவி, நான்கடி அல்லது ஐந்தடி அளவில் பார்களை எடுத்து, முழுக் கரும்புகளை இருபருக் கரணைகளாக வெட்டி, வரிசையாக நடுவதுடன், உரமிடும் வேலையையும் செய்து முடிக்கும். ஐந்து ஆட்கள் இருந்தால், இந்தக் கருவி மூலம், ஒருநாளில், மூன்று ஏக்கர் வரை நடவு செய்யலாம்.
இயந்திர முறையில் பருச்சீவல் நாற்று நடவு: முதலில் நிலத்தை இயந்திரக் கலப்பை மூலம், புழுதியாக உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, 55 எச்.பி. டிராக்டரில் நடவுக் கருவியைப் பொருத்த வேண்டும். பிறகு, அதில் இரண்டு ஆட்கள் அமர்ந்து கொண்டு, பருச்சீவல் நாற்றுகள் உள்ள குழித் தட்டுகளை நடவுக் கருவியில் வைத்து இயக்கினால், அது ஐந்தடி இடைவெளியில் பார்களை அமைத்து, இரண்டடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து கொடுத்து விடும். ஐந்து ஆட்கள் இருந்தால், இந்தக் கருவி மூலம், ஒருநாளில், மூன்று ஏக்கர் வரை நடவு செய்யலாம்.
முனைவர் மு.சண்முகநாதன், இணைப் பேராசிரியர், பயிர் இனப்பெருக்கத் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம்.