My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

பிரண்டை சாகுபடி!

பிரண்டை

பிரண்டை, படரக்கூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவப் பயிராகும். வெப்பமான இடங்களில் வளரக்கூடியது. இப்பயிர், விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis). பிரண்டையின் தாயகம் இந்தியாவாகும். அதிகளவில் வறட்சியைத் தாங்கும் தாவரம். சாகுபடி முறைகளும் எளிமையானவை.

பல்வேறு வணிகப் பெயர்களில் விற்பனைக்கு வரும் இயற்கை மருத்துவத் தயாரிப்புகளில் பிரண்டை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் தயாரிப்புகளில் பிரண்டைத் தண்டையோ, இலையையோ, சாற்றையோ நேரடியாகச் சேர்க்க மாட்டார்கள். பிரண்டை உப்பு, பிரண்டைப் பஸ்பம் மட்டுமே சேர்க்கப்படும்.

பயன்கள்

பிரண்டையை எரிக்காமல் பஸ்மாக்கினால் பிரண்டை உப்புக் கிடைக்கும். இது, மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. இது, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

+ நூறு கிராம் பிரண்டைத் தண்டில், ஆக்சலேட் வடிவில் 267 மி.கி. கால்சியம் உள்ளது. கரோட்டீன், வைட்டமின் சி ஆகியன, அஸ்கார்பிக் ஆசிட் வடிவில் 398 மி.கி. உள்ளன. நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன.

+ பிரண்டை, ஆண்மைக் குறைவு, ஒழுங்கற்ற மாதவிடாய், சோம்பல், பசியின்மை, ருசியின்மை, எலும்பு முறிவு, வாய்ப்புண், வாய் நாற்றம், அல்சர், மூலம், பொலிவற்ற சருமம், ஆஸ்துமா, நீரிழிவு, பார்வைக் கோளாறு, கண் எரிச்சல், உடல் பருமன் போன்ற நோய்களுக்கு, நிவாரணம் தரும் அருமருந்தாக உள்ளது.

+ இதில், கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய மருந்தாகும். எலும்பு முறிவைச் சரியாக்க, பிரண்டை எண்ணெய்ப் பயன்படுகிறது.

+ பிரண்டை, உடலில் அதிகமாக உள்ள கொழுப்பு மற்றும் உடற் பருமனைக் குறைக்கப் பயன்படுகிறது. மேலும், இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

+ கீரையில் இருக்கும் வைட்டமின் சி, தோல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. பல்வேறு இயற்கை மருத்துவத் தயாரிப்புகளில் பிரண்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.

+ பிரண்டைத் தண்டு, வேர், இலை, பூ, காய் ஆகிய அனைத்தும், பல வகைகளில் பயன்படுகின்றன.

+ பிரண்டையை ஒருமுறை சாகுபடி செய்து விட்டால், காபி, தேயிலைப் பயிர்களைப் போல பல ஆண்டுகளுக்குப் பலன் தரும். இதை, ஆடு மாடுகள் உண்பதில்லை என்பதால், வேலி தேவையில்லை.

+ அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், மொட்டை மாடியில் தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். வாரக்கணக்கில் நீர் ஊற்றா விட்டாலும் சாகாது. நீர் ஊற்றியதும் அல்லது மழை பெய்ததும் மீண்டும் துளிர்க்கும்.

+ சிரஞ்சீவியாய் நின்று பலன் தரும் இதை, அன்றாட உணவில், துவையல், ஊறுகாய், தொக்கு மற்றும் குழம்பாகச் சமைத்து உண்ணலாம்.

பிரண்டை வகைகள்

பிரண்டை, கொடி வகையைச் சார்ந்தது. சதைப்பிடிப்பான நாற்கோணத் தண்டுகளை உடையது. பழம் சிவப்பு நிறத்தில் உருண்டையாக இருக்கும். தண்டு மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இதில், ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என இருவகை உண்டு. பெண் பிரண்டையின் கணு 1-1.5 அங்குலமும், ஆண் பிரண்டையின் கணு 2-3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும்.

பிரண்டையில், சாதாப் பிரண்டை, சிவப்புப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில், சாதாப் பிரண்டை என்னும் நான்கு பட்டைப் பிரண்டை தான் அதிகமாகக் காணப்படும். பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்னும் பெயரும் உண்டு. ஏனெனில், பிரண்டை, உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் ஆற்றல் மிக்கது.

சாகுபடி முறை

மண் வகை: பிரண்டை, வேகமாக வளரக்கூடிய தண்டுக்கொடி வகை மூலிகையாகும். இது, வடிகால் வசதியுள்ள மணல், பழுப்பு மற்றும் களிமண்ணில் நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை நடுநிலையாக இருப்பது நல்லது.

நடவுமுறை: பிரண்டை, தண்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு, இரண்டு கணுக்களுக்கு இடையே 30 செ.மீ. நீளத்தில் பிரண்டைத் தண்டை வெட்ட வேண்டும். வெட்டிய தண்டுகளை, மாட்டுச்சாணக் கரைசலில் நனைக்க வேண்டும். அடுத்து, இந்தத் தண்டுகளை, மண்புழு உரம், மாட்டுச்சாணம் மற்றும் மணலைச் சமமாகக் கலந்து இடப்பட்ட 15 செ.மீ. நீள, அகல, ஆழமுள்ள குழிகளில் நட்டுப் பாசனம் செய்ய வேண்டும். குழி இடைவெளி 1.50 மீட்டர் இருக்க வேண்டும்.

பாசனம்: நடவு செய்தது முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். தண்டு அழுகி விடாமல் இருக்க, நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சிறப்பு மேலாண்மை: தண்டுகள் படரவும், சாயாமல் இருக்கவும், குறுக்கே கயிற்றைக் கட்ட வேண்டும். தண்டின் 5-6 அடி உயர்த்துக்கு மேல், குறுக்கும் நெடுக்குமாகக் கட்ட வேண்டும்.

கவாத்து செய்தல்: தேவையற்ற மற்றும் பக்கவாட்டில் வளர்ந்த தண்டுகளைக் கிள்ளிவிட வேண்டும். காய்ந்த மற்றும் நோயுற்ற தண்டுகளை நீக்கிவிட வேண்டும்.

உர மேலாண்மை: பிரண்டை நன்கு வளர்வதற்குச் சத்துகள் அவசியம். எனவே, நடவு செய்த 30 நாட்கள் கழித்து, தழைச்சத்தை அதிகமாக அளித்தல், இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்குச் சிறந்தது.

அறுவடை

முதிர்ந்த தண்டை இரண்டு கணுக்களுக்கு இடையில் வெட்ட வேண்டும். காட்டுப் பகுதியில் தானாக வளர்ந்துள்ள பிரண்டை, முப்பது நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகிறது. இதை அழியாமல் காக்கும் வகையில், தண்டுகளின் மேல்பகுதியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும்.

வீட்டில் பிரண்டை வளர்ப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், மொட்டை மாடியில் தொட்டிகளில் பிரண்டையை வளர்க்கலாம். கடையிலிருந்து வாங்கி வரும் பிரண்டைத் தண்டை எடுத்து, சாதாரணமாக மண்ணில் ஊன்றி வைத்தால் வளர்ந்து விடும். பிரண்டையின் அடிப்பகுதியை மண்ணில் ஊன்ற வேண்டும். மேல் பகுதியை ஊன்றினால் துளிர்க்காது.

நிலத்து மண் அல்லது மரத்துக்குக் கீழிருக்கும் மண் இரண்டு பங்கு, மணல் ஒரு பங்கு, தேங்காய்நார்க் கழிவு ஒரு பங்கு, தொழுவுரம் அல்லது மண்புழு உரம் ஒரு பங்கு வீதம் எடுத்து, பிரண்டை வளர்ப்புக்கான மண் கலவையைத் தயாரிக்கலாம். மேலும், இக்கலவையில் கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பாஸ்போபாக்டீரியாவைக் கலந்து நடவு செய்யலாம்.

பிரண்டையைப் பச்சைப் புழுக்கள் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்ப எண்ணெய் வீதம் எடுத்து, ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம். மண் கலவையில் இருக்கும் சத்துகளே போதுமானவை. தனியாக வேறெந்த உரமும் இட வேண்டியது இல்லை.

வீட்டில் அரிசியைக் கழுவிய நீர், சாப்பாடு வடிக்கஞ்சி, காய்கறிகளைக் கழுவிய நீர், பருப்பைக் கழுவிய நீர் ஆகியவற்றை, நீருடன் கலந்து ஊற்றினால் போதும். ஒருமுறை பிரண்டையை வைத்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அறுவடை செய்யலாம். அறுக்க அறுக்கத் துளிர்த்துக் கொண்டே இருக்கும்.

இளம் பிரண்டையை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில், முற்றிய பிரண்டையில் நார் அதிகமாக இருக்கும். அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!