நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரங்களுடன், தனது செல்பேசி எண்ணில் புகார் தரலாம் என்று, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 2,600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. தினமும், 12,800 விவசாயிகளிடம் இருந்து, 60,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. சில நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலுக்கு இலஞ்சம் வாங்குவதாகப் புகார்கள் வருகின்றன.
இவற்றைத் தடுக்க, சென்னையில் உள்ள, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உழவர் உதவி மையம் துவக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை, 18005993540 என்னும் கட்டணமில்லாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவசாயிகள் புகார் அளிக்கலாம்.
அத்துடன், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள, மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோரின் மொபைல் போன் எண்களைத் தொடர்பு கொண்டும், விவசாயிகள் புகார்களைத் தெரிவிக்கலாம். தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், கூடுதல் பதிவாளர் நிலையில், தனிக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டின் கீழ், எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். புகார்கள் அடிப்படையில், இக்குழுக்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்குச் சென்று, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
புதுக்கோட்டை கரம்பக்குடி, விலாப்படி, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, இலுப்பை விடுதி ஆகிய இடங்களில், பணியாளர்கள் இலஞ்சம் பெறுவதாகப் புகார்கள் வந்தன. அவற்றைப் பற்றிக் குழு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்காலிகப் பணியாளர்கள் மீது புகார்கள் எழுந்து, உண்மை கண்டறியப்பட்டால், உடனுக்குடன் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவர். நிரந்தரப் பணியாளர்களைப் பொறுத்தவரை, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, மேல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.
எனவே, யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. புகார் இருந்தால், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் 94452 57000 என்னும் செல்பேசி எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வழியாக மட்டும் புகார்களை அளிக்கலாம். புகார்களுக்கு ஆதாரமாக ஆவணங்கள் அல்லது வீடியோ இருந்தால் அவற்றையும் பதிவிடலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.