My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

முடக்கத்தான் கீரை சாகுபடி!

முடக்கத்தான் கீரை

மக்கு உணவாகப் பயன்படும் பல்வேறு கீரை வகைகளில் ஒன்று முடக்கத்தான் கீரை. இது, நமது உடல் நலத்தில் முக்கியப் பங்களிக்கிறது. முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடற்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) என, பல பெயர்களைக் கொண்ட முடக்கத்தான் கீரை, மருத்துவ மூலிகைக் கொடியாகும்.

உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு + அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது, வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அதிகளவில் காணப்படும் உயரப் படரும் ஏறு கொடியாகும்.

இதன் பிளவுபட்ட இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் சிறு இதழ்களுடன் இருக்கும். இதன் காய்கள் பலூனைப் போன்ற அமைப்பில் இருக்கும். அவற்றை, கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டினால், பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஓசை ஏற்படும்.

இதன் காரணமாக, சிறுவர்கள் இதன் காய்களை, பட்டாசுக்காய் என்றும், பலூன் காய் என்றும் அழைப்பதுண்டு. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன, மருத்துவப் பயன்பாடு உடையவை. இது, பெரும்பாலும் சாலையோரம், ஆற்றோரம் பரவலாக வளர்ந்து இருப்பதைக் காணலாம்.

பயன்கள்

+ இந்தக் கீரை, கை கால் முடக்குவாதத்தைப் போக்கக் கூடியது. இரண்டு எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வுப் பகுதியை வளர வைக்கும் தன்மை மிக்கது.

+ சிலருக்கு 40 வயதுக்கு மேல், இடுப்பு, பாதம், கை கால் மூட்டுகளில் அதிக வலி இருக்கும். இது, ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிசின் தொடக்கமாகவும் இருக்கலாம். இந்தியாவில் 65 சதவிகித மக்களுக்கு இந்த மூட்டுவலிப் பாதிப்பு உள்ளது. இதற்கெல்லாம் சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும்.

+ மூட்டுவலி இருந்தால், தொடக்கம் முதலே இந்தக் கீரையை எடுத்துக் கொண்டால் முழு நலம் பெறலாம்.

+ முடக்கத்தான் கீரையை வைத்து, முடக்கத்தான் தோசை, முடக்கத்தான் சட்னி, முடக்கத்தான் துவையல் என, வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் மூட்டுவலி குறையக்கூடும்.

+ இந்தக் கீரையைக் கொதிக்க வைத்துச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், கொதிக்க வைத்தால், அதிலுள்ள மருத்துவச் சத்துகள் அழிந்து விடும்.

குறிப்பு: முடக்கத்தான் கீரை, சீரகம் மற்றும் மிளகாய் வற்றலை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து, தோசை மாவில் கலந்தால், முடக்கத்தான் தோசை மாவு தயாராகி விடும். இதை அரைமணி நேரம் வைத்திருந்து எடுத்துத் தோசையாகச் சுடலாம்.

சாகுபடி

பருவம்: இதை, ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். முடக்கத்தான் கீரையை வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். முடக்கத்தான் கீரை, கொடி வகையைச் சார்ந்த கீரையாகும். இதன் விதைகள் மிகச் சிறியதாக இருக்கும். ஒரு காயில் சுமார் மூன்று விதைகள் இருக்கும்.

மண்: நல்ல மண்ணும் மணலும் கலந்த, அமிலத்தன்மை மிக்க இருமண் நிலம் மற்றும் செம்மண் நிலத்தில் நன்கு வளரும். களித்தன்மை மிகுந்த நிலத்தைத் தவிர்க்க வேண்டும்.

நிலம் தயாரித்தல்: தேர்வு செய்த நிலத்தில் தொழுவுரத்தைப் பரவலாகக் கொட்டி உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். வீடுகளில் தொட்டிகளில் முடக்கத்தான் கீரையை வளர்க்கலாம். தொட்டியில் வளர்க்கும் போது, மட்கிய எரு, செம்மண், மணல் கலந்த கலவையில் தொட்டிக்கு 2-3 விதைகளை விதைத்து நீர் விட வேண்டும். முடக்கத்தான் கீரையை வரப்பு ஓரங்களில் நட்டால், உயிர்வேலியாக இருந்து, பூச்சித் தாக்குதல்களைக் குறைக்கும்.

நீர் நிர்வாகம்: விதைகளை விதைத்ததும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். வாய்க்கால் பாசனமாக இருந்தால், கவனமாகப் பாசனம் செய்ய வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். இக்கீரைக்கு நீர் அதிகமாகத் தேவைப்படாது. ஆனால், நிலத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். நிழல் பகுதியாக இருக்கக் கூடாது. அதிக வெளிச்சம் தேவைப்படும்.

களை நிர்வாகம்: ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். எனவே, 10-15 நாட்கள் கழித்து, களையெடுக்க வேண்டும். களைகள் அதிகம் வளராத வகையில், களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். முதல் களையெடுக்கும் போது, பயிர் எண்ணிக்கையைப் பொறுத்துப் பயிர்களைக் களைதல் வேண்டும்.

உரமிடுதல்: மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு: புதினாவைப் பெரும்பாலும் பூச்சியோ நோயோ தாக்குவதில்லை. அப்படியும் ஏதேனும் பூச்சித் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சம அளவில் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தைக் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

அறுவடை: முப்பது நாட்களில் கீரையை அறுவடை செய்யலாம். ஆறு மாதங்கள் வரை கீரை கிடைக்கும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!