My page - topic 1, topic 2, topic 3

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர்.

சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண் வகைகளிலும் வளரும். ஆனால், கேழ்வரகைத் தாக்கும் சில நோய்களால் உற்பத்தியிழப்பு ஏற்படுகிறது. அந்த நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்தும் விளக்குகிறது இந்தக் கட்டுரை.

குலைநோய்

மூன்று விதமான குலை நோய்கள் கேழ்வரகைத் தாக்குகின்றன. அவையாவன: இலைக் குலைநோய், கழுத்துக் குலைநோய், கதிர் குலைநோய்.

இலைக் குலைநோயின் அறிகுறிகள்: இது, இலைகளின் மேற்புறத்தில் கண்வடிவப் புள்ளிகளைத் தோற்றுவிக்கும். புள்ளிகளின் மையப்பகுதி, சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தையும், மஞ்சள் நிற ஓரத்தையும் கொண்டிருக்கும். நோய் தீவிரமானால், பயிர்கள் காய்ந்தது அல்லது எரிந்ததைப் போலத் தோன்றும்.

கழுத்துக் குலைநோயின் அறிகுறிகள்: இது, குலைநோயின் இரண்டாம் வகை. தொடக்கத்தில் சாம்பல் கலந்த நீண்ட முட்டை வடிவக் கரும் புள்ளிகள் தோன்றும். நோய் தீவிரமானால், பீட்டை பிடிக்கும் கழுத்துப் பகுதியில் பிளவு ஏற்படுவதால் பீட்டை ஒடிந்து விடும்.

கதிர் குலைநோயின் அறிகுறிகள்: இது, கதிர் மணிகளில் மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். கதிர் மணிகள் பாதிக்கப்படுவதால், விளைச்சலில் பேரிழப்பு ஏற்படும். இந்நோய் தாக்கினால், கதிர் மணிகள் சாம்பல் நிறத்தில் சுருங்கிக் காணப்படும். கதிர்கள் பூக்கும் முன் தாக்கினால் மணிகள் பதர்களாகி விடும்.

பரவும் தன்மை: இந்த நோய், விதை மற்றும் காற்றின் மூலம் பரவும். தமிழ்நாட்டில் ஐப்பசி முதல் மார்கழி வரையில் அதிகளவில் தாக்கும். வைகாசி முதல் ஆடி வரையில் சாதாரணமாக இருக்கும். இது, ஆவணியில் விதைக்கப்படும் பயிர்களில் மிகுதியாகக் காணப்படும். தை மாதத்துக்குப் பிறகு விதைக்கப்படும் பயிர்களில் குறைவாக இருக்கும்.

கட்டுப்படுத்துதல்: நோய் எதிர்ப்புத் திறனுள்ள இரகத்தைப் பயிரிடுவது நல்லது. முக்கியமாக ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் கொண்டும் விதை நேர்த்தி செய்யலாம்.

நடவுக்குப் பிறகு 30 நாட்கள் கழித்து 25 கிலோ தொழுவுரத்தில், ஒரு கிலோ சூடோமோனாசைக் கலந்து தூவ வேண்டும். இந்நோயின் அறிகுறி பயிர்களில் தெரிந்ததும், எக்டருக்கு 500 மில்லி எடிபென்பாஸ் அல்லது 250 கிராம் கார்பன்டசிம் அல்லது 500 மில்லி இப்ரோபென்பாசை, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோய்

அறிகுறிகள்: நாற்றையும் வளரும் பயிரையும் இந்நோய் தாக்கும். இது, இலைக்கருகலையும், இலையில் நீள்வட்ட வடிவத்தில் காய்ந்த புள்ளிகளையும் ஏற்படுத்தும். இளம் பயிரில் சிறிய முட்டை வடிவ இளம் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு, இவை அனைத்தும் இணைந்து கரும்பழுப்பு நிறமாக மாறிவிடும். நோயுற்ற இலைகள், முதிரும் முன்பே பழுத்து உதிர்ந்து விடும்.

பரவும் விதம்: இது, விதைகள் மூலம் பரவும். மாற்றுத் தாவரங்களில் இருந்து அல்லது செடிப்பகுதிகளில் இருந்து பூசண இழைகள் காற்றின் மூலம் பரவும்.

கட்டுப்படுத்துதல்: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவின் போது, 25 கிலோ தொழுவுரத்தில், ஒரு கிலோ சூடோமோனாசைக் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். நோய் தீவிரமானால், ஏக்கருக்கு புரோபிகோனசோல் 200 மில்லி அல்லது மாங்கோசெப் 500 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.

தூரழுகல் நோய்

அறிகுறிகள்: பயிரின் அடித்தண்டு மற்றும் இலையுறையைத் தாக்கிப் பழுப்பு நிறத்தில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். நோய் தீவிரமானால், தண்டுப்பகுதி அடர்பழுப்பு நிறமாக மாறி விடும். பயிர்கள் பச்சையத்தை இழந்து வளர்ச்சிக் குன்றி, இறுதியில் இறந்து விடும். நோய் தாக்கிய பயிரைப் பிடித்து இழுத்தால், எளிதாக கையோடு வந்து விடும்.

கட்டுப்படுத்துதல்: தரமான, நோயற்ற விதைகளை விதைக்க வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் கலவையை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதே கலவையை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் எடுத்து, 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

தேமல் நோய்

அறிகுறிகள்: இந்நோய் பயிரின் அனைத்துப் பருவங்களிலும் காணப்படும். நோய் அறிகுறி 4 முதல் 6 வாரங்களில் வெளிப்படும். இதனால் பாதிக்கப்பட்ட பயிரின் இலைகள் வெளிர் பச்சையாக மாறும். நோய் தீவிரமானால், பயிர் முழுவதும் வெளிர் பச்சையாக மாறி, வளர்ச்சிக் குன்றி மலட்டுத் தன்மையுடன் காணப்படும். இதைத் தொலைவிலிருந்தே அடையாளம் காணலாம்.

கட்டுப்படுத்துதல்: தாக்கப்பட்ட பயிரைப் பிடுங்கி அழிக்க வேண்டும். பயிர்ச் சுழற்சி முறையைக் கையாள வேண்டும். தேவையான சமயத்தில் மணிச்சத்தை இட்டும், இமிடாகுளோரிபிட் 17.8% எஸ்.எல். மருந்தை ஏக்கருக்கு 80 மில்லி வீதம் எடுத்துத் தெளித்தும், நோயின் தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.


ப.நாராயணன், பயிர்ப் பாதுகாப்புத் தொழில்நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks