My page - topic 1, topic 2, topic 3

Advertisement:

வல்லாரைக் கீரை சாகுபடி!

வல்லாரைக் கீரை

ல்லாரை மருத்துவப் பயனுள்ள கீரை வகைத் தாவரமாகும். இது, நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும். இதன் இலைப்பகுதி உணவாகப் பயன்படுவதால், இத்தாவரம், கீரையினங்களில் அடங்கும். மருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் மூலிகையாக, சட்னி, ஊறுகாய் மற்றும் புத்துணர்வு பானம் தயாரிக்கப் பயன்படுகிறது.

வல்லமையை உருவாக்கும் சக்தியுள்ள கீரை என்பதை, அடையாளப்படுத்தவே நம் முன்னோர்கள் வல்லாரைக்கீரை என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இது, நினைவாற்றலை அதிகப்படுத்தி மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. அதனால், கல்வி ஞானம் பெருகும், அவர்கள் நாவில் சரஸ்வதி குடியிருப்பாள் என்பதால், இதை, சரஸ்வதிக்கீரை என்றும் கூறி வைத்தார்கள்.

வல்லாரைக் கீரையானது, மனித மூளை நன்கு செயல்படத் தேவையான சத்துகளைக் கொண்டுள்ளது. இதனாலேயே வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே என்னும் பழமொழி ஏற்பட்டது. வல்லாரை உண்டோர் வல்லமை மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதை உறுதி செய்கிறது இந்தப் பழமொழி.

வல்லாரைக் கீரை, நீர்நிலைப் பகுதிகளான, குளம், குட்டை, ஏரி, ஆறு, கால்வாய்ப் பகுதிகளில் வளரக்கூடியது. பூண்டுவகைத் தாவரமான இதன் இலைகள், அரை வட்டமாக, நீண்ட காம்பு மற்றும் வெட்டுப் பற்களுடன், இதய வடிவில் இருக்கும். இந்தக் கீரையில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாதுப்புகள் அதிகமாக உள்ளன. இரத்தத்துக்குத் தேவையான சத்துகள், சரியான அளவில் வல்லாரையில் உள்ளன.

வல்லாரை சாகுபடி முறை

இரகங்கள்: சமவெளி வல்லாரை, வெளிர்ப்பச்சை இலைகளுடன் இருக்கும். மலைப்பகுதி வல்லாரை, கரும்பச்சை இலைகளுடன் இருக்கும்.

பருவம்: அக்டோபர் மாதம் சாகுபடி செய்யச் சிறந்தது. வல்லாரை, மிதமான காலநிலை மற்றும் நிழலான பகுதிகளில் நன்கு வளரும். ஐம்பது சதவீத நிழலுள்ள பகுதியில் நன்கு வளர்ந்து, அதிக மகசூலைக் கொடுக்கும்.

மண்: ஈரமான சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலைகளைச் சுற்றி நன்கு வளரும். அமில மண் மற்றும் உவர் மண்ணில் வளரும். ஈரத்தன்மை, அங்ககத் தன்மையுள்ள களிமண்ணில் நன்கு வளரும்.

நிலம் தயாரித்தல்: சாகுபடி நிலத்தில் கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 5 டன் தொழுவுரம் வீதம் எடுத்து அடியுரமாக இட்டு, நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும்.

விதையளவு: வல்லாரைக்கீரை, கணுக்களைக் கொண்ட தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இவ்வகையில், எக்டருக்கு ஒரு இலட்சம் தண்டுத் துண்டுகள் தேவைப்படும். இவற்றை நிலத்தில் 30×30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்: நடவு செய்ததும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அடுத்து, பயிர்கள் நன்கு வளரும் வரை, நான்கு அல்லது ஆறு நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்ச வேண்டும். பிறகு, பயிரின் தேவைக்கு ஏற்ப, பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள்: எக்டருக்கு, 100 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து ஆகியன தேவைப்படும். இவற்றை இரண்டாகப் பிரித்து, இருமுறை கொடுக்கலாம்.

களை நிர்வாகம்: செடிகளின் வளர்ச்சிக்கு, களைகள் இடையூறாக இருப்பதால், களை நீக்கம் அவசியம். எனவே, நடவு செய்த 15-20 நாட்களில் களையெடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு: இதற்கு, இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி இருப்பதால், எந்த நோயும் தாக்குவதில்லை. பாசனத்தின் போது, அமிர்தக் கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து விட்டால், கீரையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அறுவடை: 15 நாட்கள் இடைவெளியில், வளரும் கிளைகளில் உள்ள வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும். மறுபடியும் தழைக்கும் அளவில் செடிகளை நிலத்தில் விட்டு விட்டு அறுவடை செய்ய வேண்டும். அப்போது தான் மீண்டும் துளிர்த்து வளரும்.

மகசூல்: எக்டருக்கு 5,500 கிலோ கீரை கிடைக்கும். இதைக் காய வைத்தால் 2,000 கிலோ உலர் கீரை கிடைக்கும்.


C.RAJA BABU e1738060655504

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

Share:

Advertisement:

  சந்தேகமா? கேளுங்கள்!  

Advertisement:

இன்னும் படியுங்கள்!