கரூர் மாவட்டம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக் குறித்த பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி தொழில் முனைவோர் மையம், குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் அமைந்துள்ள, உணவுப் பதப்படுத்தப்படும் மையங்களுக்குக் கண்டுணர் பயணமாகப் பண்ணை மகளிர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில், கரூர் மாவட்டம், தோகைமலை வட்டம், வடசேரி கிராமத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவும் ஒருவர். இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் எதுவும் இல்லை. தனது இரண்டு பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏதாவது சுய தொழில் செய்து வறுமையைப் போக்க வேண்டும் என எண்ணிக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது, புழுதேரி வேளாண்மை அறிவியல் மையத்தின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்ட அவர், வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைக் கற்றுக்கொள்ள, எங்கள் வேளாண்மை அறிவியல் மையத்தை அணுகினார். இதையொட்டி, இவருக்கு வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வதற்கான ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும், வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் நடைபெற்ற முதல் நிலை செயல் விளக்கத் திடல், வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டுதல் என்னும் தலைப்பில், வாரம் ஒருநாள் என, எட்டு வாரங்கள் நடைபெற்ற உழவர் வயல்வெளிப் பள்ளி, கண்டுணர் பயணம், விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார்.
இதன் பயனாக, சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டதால், இன்று தொழில் முனைவோராக உருவாகி உள்ளார். இவருக்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம், ஆதி திராவிடர் நலத்திட்டத்தின் கீழ், இரண்டு மாவு அரைக்கும் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், சிறு தானியங்களில் இருந்து பல்வேறு உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், உணவுத் தரக்கட்டுப்பாடு சான்றிதழ், பாக்கெட், எடை போடும் கருவி, பாக்கெட்டுகளை சீல் செய்யும் இயந்திரம் ஆகியன இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன.
வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் வழங்கப்பட்ட மாவு அரைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, சத்துமாவு, பலதானிய லட்டு, கம்பு லட்டு, கேழ்வரகு லட்டு, தினை லட்டு, பாசிப்பயறு லட்டு, நிலக்கடலை லட்டு, எள் லட்டு, கலவை சாதப்பொடி, வாழைக்காய் மாவு, புட்டு மாவு, சாம்பார் பொடி, மிளகாய்ப் பொடி, கொத்தமல்லிப் பொடி போன்ற, மசாலாப் பொடிகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
எந்த விதமான இரசாயனங்கள், செயற்கை நிறமூட்டிகள் மற்றும் பதப்படுத்தும் பொருள்களைச் சேர்க்காமல், தரமான முறையில், சுத்தமாக, சுவையாக, உணவுப் பொருள்களைத் தயாரித்து, நல்லமுது என்னும் பெயரில், மக்களிடம் விற்பனை செய்து வருகிறார். ஒண்டிவீரன் கோயில் என்னும் பெயரில் சுய உதவிக் குழுவையும் நடத்தி வருகிறார்.
இவரது வெற்றியைப் பார்த்து, பிற குழு உறுப்பினர்களும் இவருடன் சேர்ந்து, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற்ற அறிவியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், அன்னை தெரசாவுக்கு, சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டு உள்ளது. மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை மூலம், மாதம் 36,500 ரூபாய் வரை வருமானம் பெறுகிறார். மேலும், மூன்று சுய உதவிக்குழு மகளிர்க்கு வேலை வாய்ப்பையும் அளித்து வருகிறார்.
முனைவர் பெ.தமிழ்ச்செல்வி, வேளாண்மை விரிவாக்கத் தொழில் நுட்ப வல்லுநர், முனைவர் ஜெ.திரவியம், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், புழுதேரி, கரூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!