துவரையின் தாயகம் இந்தியாவாகும். இங்கே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு. 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் இதை 23.63 மில்லியன் எக்டர் பரப்பில் சாகுபடி செய்வதன் மூலம் 14.76 மில்லியன் டன் துவரை உற்பத்தி செய்யப்படுகிறது.
மராட்டிய மாநிலம் 33.49 சத அளவில் துவரையை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் துவரை உற்பத்தி செய்யப்படுகிறது.
துவரையில் பி.பி.2, பி3, பி5, பி6, பி9 ஆகிய வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம், மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. துவரையைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்தழுத்தம் சீராகும். அனீமியா கட்டுப்படும். நோயெதிர்ப்பு சக்தி கூடும். இதய நலம் மேம்படும்.
துவரையை ஆடிப் பட்டத்தில் பயிரிடலாம். வேலூர், திருவாண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் துவரை பயிரிடப்படுகிறது.
நிலத் தயாரிப்பு
துவரை, அனைத்து மண் வகைகளிலும் வளரும். மணல் கலந்த களி மண்ணில் நன்றாக வளரும். கார அமிலத் தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். நிலத்தை 2-3 முறை இரும்புக் கலப்பையால் உழ வேண்டும். நிலம் பொலபொலப்பாக இருக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன், தொழுவுரம் மற்றும் உயிர் உரத்தையும் இட வேண்டும்.
விதையளவு
ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் திரம் வீதம் எடுத்து விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது பூசணக்கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூமோமோனாஸ் 10 கிராம் வீதம் எடுத்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
உர நிர்வாகம்
துவரைக்கு, ஏக்கருக்கு 25:50:25 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்து ஆகியன தேவைப்படும். இத்துடன் 2 கிலோ கந்தகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நுண்ணுரக் கலவை 5 கிலோ ஆகியவற்றை, ஊட்டமேற்றிய தொழுவுரமாக இட வேண்டும். வறட்சியைத் தாங்குவதற்கு, 2 சத பொட்டாசியம் குளோரைடு கரைசலை, விதைத்த 45 நாள் கழித்து நுண் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்ததும் நீரைப் பாய்ச்ச வேண்டும். அடுத்து, மூன்றாம் நாள் உயிர் நீர் விட வேண்டும். அதன் பிறகு, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அல்லது மொட்டுப் பருவத்தில், பூக்கும் பருவத்தில், காய்கள் பிடிக்கும் பருவத்தில் கட்டாயம் நீரைப் பாய்ச்ச வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த மூன்றாம் நாள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்தலின் வீதம் தெளிக்க வேண்டும். களைக்கொல்லியைத் தெளிக்காத நிலையில், 20, 30 ஆகிய நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். களைகள் அதிகமாக இருந்தால், விதைத்து 20 நாளில் ஏக்கருக்கு 50 கிராம் குயினால்பாஸ் வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
அறுவடை
துவரைக் காய்கள் 80 சதம் முதிர்ந்ததும் செடிகளை அறுவடை செய்ய வேண்டும். அதை மூன்று நாட்கள் குவியலாக வைத்து எடுத்து உலர்த்தி, துவரையைப் பிரித்தெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 1,200-1,300 கிலோ துவரை மகசூலாகக் கிடைக்கும். இந்தத் துவரை விதைகளை 7-8 சத ஈரப்பதம் இருக்கும்படி உலர்த்திச் சேமிக்க வேண்டும்.
முனைவர் வி.அரவிந்த்,
வேளாண்மை அறிவியல் நிலையம், காரைக்கால்.
க.திவ்யா, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.
முனைவர் சு.திருமேனிநாதன், வேளாண்மை அறிவியல் நிலையம், மாதூர், ஐதராபாத்.
முனைவர் நா.சா.சுடர்மணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை.
சந்தேகமா? கேளுங்கள்!