செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர்.
இயற்கை வேளாண்மை என்பது, வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்ப்பதாகும். மக்கள் இப்போது இயற்கை வேளாண்மையைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். இதனால் கிடைக்கும் விளைபொருள்களில் வேதிப்பொருள்களின் எச்சம் இருப்பதில்லை. எனவே, உடலுக்குத் தீமை செய்யாத உணவுப் பொருள்கள் நுகர்வோருக்குக் கிடைக்க, இயற்கை வேளாண்மை துணையாக உள்ளது.
மேலும், இயற்கை வேளாண்மை சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மண்ணிலுள்ள நுண்கிருமிகளைப் பாதுகாப்பதால், மண்வளம் காக்கப்படுகிறது. எனினும், விவசாயிகள் வேதிப் பொருள்களைப் பயன்படுத்தப் பழகி விட்டதால், இயற்கை வேளாண்மையைப் பின்பற்ற முடிவதில்லை. மேலும், வேதிப் பொருள்களுக்குச் சரியான மாற்று பற்றிய விழிப்புணர்வும் குறைவாகவே உள்ளது.
களைகளை, பூச்சிகளை, நோய்களைக் கட்டுப்படுத்த, வேதிப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆனாலும், பூச்சிக் கட்டுப்பாட்டில் தான் இவற்றின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. எனவே, இயற்கை வேளாண்மைப் பரப்பைக் கூட்ட வேண்டுமெனில், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வேதிப் பொருள்களுக்குப் பதிலாக, சரியான இயற்கை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு
பொதுவாக, இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் பொருள்களே பயன்படுகின்றன. மேலும், பொறிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேப்ப மரத்திலிருந்து எடுக்கப்படும் வேதிப் பொருள்கள் மற்றும் அவற்றால் கட்டுப்படும் பூச்சிகளைப் பற்றி இங்கே காணலாம்.
ஆர்.டி.9 ரிப்பெல்லின்: புகையான், மிளகாய்ப் புழுக்கள், தத்துப்பூச்சி, நிலக்கடலை அசுவினி, இலைத் துளைப்பான்.
நிம்போசெல்: இலந்தைப்பழ ஈக்கள்.
ராக்ஷேக்: பருத்திக்காய்ப் புழுக்கள்.
ZA 199: பருத்தியைத் தாக்கும் பூச்சிகள், பருத்திக்காய்ப் புழுக்கள், கத்தரித் தண்டுப் புழுக்கள்.
நிம்பிசிடின்: நெற்பயிர்ப் பூச்சிகள், சோளம், பருத்தி, கடலை, கத்தரி, வெண்டைப் பூச்சிகள்.
நீம் மார்க்: வெண்டையைத் தாக்கும் பூச்சிகள்.
நீம் அசோல் எப்1, 2: வெட்டுப் புழுக்கள்.
நிம்மிட்டர்: வெண்டை, கத்தரிக்காய்ப்புழு, தண்டுப்புழு.
நீம் கோல்டு: மாவில் நுனித் துளைப்பான்.
நீம்மிக்ஸ்: மிளகு, எலுமிச்சை, பேரி, கீரைப்பூச்சிகள்.
மல்டி நீம்: முந்திரியைத் தாக்கும் பூச்சிகள்.
நிம்பிசிடின்: ஆமணக்குக் கம்பளிப் புழுக்கள்.
0.03% அசாடிராக்டின், ஆக்ஸிமெட்ரின்- 1.2%இசி: வைர முதுகுப் பூச்சி.
ஆச்சூக்: முட்டைக்கோசைத் தாக்கும் பூச்சிகள்.
நீம் அசால்: சேமிப்புக் கிடங்குப் பூச்சிகள்.
வேப்ப மரத்திலிருந்து பெறப்படும் வடிசாறுகள் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தினால், இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சலைப் பெற முடியும்.
முனைவர் மு.சுகந்தி, முனைவர் பா.சுரேஷ் சுப்பிரமணியன், முனைவர் எச்.கோபி, கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.
சந்தேகமா? கேளுங்கள்!