தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் பெருகி உள்ளதால் விவசாயிகள் பெருநஷ்டம் அடைகின்றனர். காட்டுப் பன்றிகள், நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வாழை, கத்தரி, தென்னங் கன்று உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் நுழைந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அதனால், இவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பெரும்பாலும் முள்வேலி, மின்வேலி, வண்ணத் துணிகளை வயலைச் சுற்றிக் கட்டுதல், இரவில் ஒலிப் பெருக்கியை வைத்து ஒலி எழுப்புதல் மற்றும் பல்வேறு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தினாலும் முழுமையான பயனை அடைய முடியவில்லை.
எனவே, இந்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் இயங்கி வரும் வேளாண்ம ஆராய்ச்சி நிலையம், ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இயற்கைக் காட்டுப்பன்றி விரட்டியை உருவாக்கி உள்ளது.
முதற்கட்டச் சோதனையாக, நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, பப்பாளி, கரும்பு, வாழை மற்றும் நிலக்கடலை நிலங்களில் ஆய்வு மேற்கொண்டதில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் குறைந்துள்ளது. மேலும், இந்த விரட்டியின் செயல் திறன், 45 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை இருந்து, காட்டுப் பன்றிகள் விளைநிலத்தில் நுழைவதைத் தடுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே, காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர்ச் சேதத்தைக் குறைக்கும் பொருட்டு, இந்த இயற்கை காட்டுப்பன்றி விரட்டியைத் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
பயன்படுத்தும் முறைகள்
ஒரு ஏக்கருக்கு, இந்தக் காட்டுப்பன்றி விரட்டி 500 மில்லி லிட்டர் தேவைப்படுகிறது. பயிர் செய்திருக்கும் நிலத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் மூன்றடி உயரக் குச்சிகளை, பத்தடி இடைவெளியில் ஊன்றி, 1 முதல் 1.5 அடி உயரத்தில் கட்டுக் கம்பியால் இணைத்துக் கட்ட வேண்டும். குச்சிகளின் இருபுறமும் குறைந்தது இரண்டு அடிக்கு, களைச்செடிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 4 சென்டி மீட்டர் உயரம், 3.5 சென்டி மீட்டர் அகலத்தில் 100 சிறிய டப்பாகள் தேவை. ஒவ்வொரு டப்பாவிலும் மூடிக்குக் கீழே நான்கு துளைகளை இட வேண்டும். பிறகு, ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் ஐந்து மில்லி லிட்டர் அளவில் காட்டுப்பன்றி விரட்டி மருந்தை ஊற்றி மூட வேண்டும். பிறகு, நான்கு துளைகளில் எதிர்த் திசைகளில் உள்ள இரண்டு துளைகளை நூலால் இணைத்து, டப்பாவை மூடி முடிச்சுப் போட வேண்டும்.
மேலும், இந்த நூலால், வயலைச் சுற்றியுள்ள கம்பியில் கட்டி, டப்பாக்களை நேராகத் தொங்க விட வேண்டும். டப்பாக்களைச் சாய்வாகத் தொங்கவிடக் கூடாது.
இந்நிலையில், டப்பாக்களில் இருந்து மெதுவாக வெளியேறும் மருந்தின் வாசம், அதிகபட்சம் மூன்று மாதம் வரை, காட்டுப்பன்றிகள் அந்தப் பக்கம் வராமல் தடுக்கும்.
எனவே, இயற்கை காட்டுப்பன்றி விரட்டித் தேவைப்படும் விவசாயிகள், விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் அவர்களை, 0416-2900242 என்னும் தொலைபேசி மூலமோ அல்லது நேரிலோ அல்லது arsvrm@tnau.ac.in மின்னஞ்சல் மூலமோ அணுகி, வாங்கிப் பயன் பெறலாம்.
ஒரு லிட்டர் பன்றி விரட்டியின் விலை 590 ரூபாயாகும். நேரில் வர இயலாதவர்கள், 700 ரூபாயை இணைய வங்கி மூலம் செலுத்தி, தபால் மூலம் மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் காட்டுப்பன்றி விரட்டியை வாங்க விரும்பும் விவசாயிகள், பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
Name: Professor and Head, Agricultural Research Station, Virinjipuram.
Account Number: 11339961527.
Bank: State Bank of India, Poigai.
IFSC: SBIN0007126.
மருந்தைச் சரியாகப் பயன்படுத்தும் முறை
புட்டியின் அடியில் மருந்து கட்டியாகி இருக்க வாய்ப்பு இருப்பதால், மருந்து முழுவதும் நன்றாகக் கலப்பதற்கு, ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் மருந்துப் புட்டியைக் கத்தியால் சரி பாதியாக அறுத்து, அதிலுள்ள மருந்தை, சிறிய வாளியில் ஊற்றி, நீர் ஊற்றாமல் நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு, சிறிய டப்பாக்களில் ஐந்து மில்லி லிட்டர் வீதம் ஊற்றி மூடிவிட்டு நூலில் கட்ட வேண்டும். வயலைச் சுற்றிக் களைச்செடிகள் ஒரு அடிக்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
முனைவர் அ.கோபி கிருஷ்ணன், முனைவர் அ.திருமுருகன், முனைவர் பு.திலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!