My page - topic 1, topic 2, topic 3

இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில், இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பற்றிய பயிற்சி 16.07.2024 அன்று நடைபெற்றது.

இதில் தலைமை வகித்துப் பேசிய எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி, வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயிர்ப் பெருக்கத் திட்டம், பயிர்க் காப்பீடு மற்றும் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கிப் பேசினார்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் முனைவர் வாசு, தோட்டக்கலைத் துறையில் உள்ள மானியத் திட்டங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். மேனாள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மண்ணியல் துறை பேராசிரியர் முனைவர் அப்பாவு, இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் மண், நீர்ப் பரிசோதனையின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருள்கள் மூலம் மண்ணை மேம்படுத்தும் முறை, மண்ணுக்கும் நீருக்கும் ஏற்ற பயிர் சாகுபடி முறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆத்மா திட்டத்தின் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சி.தனலட்சுமி, இயற்கை விவசாயம், அதன் முக்கியத்துவம் மற்றும் உழவர் செயலியின் செயல்பாட்டை எடுத்துரைத்தார்.

எருமப்பட்டி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு, மானியத் திட்டங்கள், இடுபொருள்கள், நுண்ணுரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகத்தின் மூலம் வழங்கப்படும் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ஒட்டுண்ணிகள் குறித்து, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

துணை வேளாண்மை அலுவலர் அந்தோணிசாமி, நுண்ணீர்ப் பாசனம் மற்றும் இயற்கை இடுபொருள்களைப் பற்றி விவசாயிகளிடம் பேசினார். பயிர்க் காப்பீடு பற்றி, லோகேஷ், இரமேஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை இடுபொருள்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் கண்காட்சியைக் கண்டு பயன் பெற்றனர். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் செ.நந்தகுமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திரேகபிரியா, காவியா ஆகியோர் செய்திருந்தனர்.


செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks