செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2017.
பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் அதிகமாக உள்ளது. அதனால், இவை ஏழைகளின் மாமிசம் என்று அழைக்கப்படுகின்றன. பயறு வகைகளை நமக்கு உணவாக அளிக்கும் பயிர்கள், சிறந்த கால்நடைத் தீவனமாக, மண்வளத்தை மேம்படுத்தும் ஊட்டமாக, மண்ணரிப்பைத் தடுக்கும் போர்வையாக விளங்குகின்றன. இந்தப் பயிர்களைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இங்கே, உளுந்து, பச்சைப் பயற்றம் பயிர்களைத் தாக்கும் நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம்.
தமிழகத்தில் பயறுவகைப் பயிர்கள் 8.8 இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 7.6 இலட்சம் டன் பயறு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சராசரியாக ஒரு எக்டருக்கு 867 கிலோ விளைச்சல் கிடைத்தாலும், இது, உலக உற்பத்தித் திறனைவிட குறைவே. உலக உற்பத்தித் திறன் எக்டருக்கு 903 கிலோவாக உள்ளது. பயறுவகைப் பயிர்களை, வேரழுகல் நோய், சாம்பல் நோய், மஞ்சள் தேமல் நோய் போன்றவை அதிகளவில் தாக்கி உற்பத்தியைக் குறைக்கின்றன.
வேரழுகல் நோய்-மாக்ரோபோமினா பேஸியோலினா
இந்த நோய், திட்டுத் திட்டாக அல்லது ஒரு பகுதியிலுள்ள பயிர்களை முழுமையாகத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கும். நோயுற்ற செடிகள் 7 முதல் 10 நாட்களில் இறந்து விடும். நோயுற்ற செடியைப் பிடுங்கிப் பார்த்தால் வேர்கள் அழுகியிருக்கும். வேர்களின் பட்டை உரிந்து நார் நாராகக் கிழிந்திருக்கும். தோலுரிந்த பட்டைகளின் மேல் மிகச் சிறிய கறுப்புப் புள்ளிகள் பதிந்திருக்கும். மேலும், செடியின் தண்டுப் பகுதியில் வெள்ளியைப் பூசியதைப் போன்ற பூசணம் வளர்ந்திருக்கும். பூக்கும் பருவத்தில் இந்த நோய் தாக்கினால், காய்கள் முற்றாமல் சுருங்கி விடும். இதனால், எடையும் புரதமும் குறைந்து விடும். இந்த நோயானது மண், விதை, காற்று, நீர் மூலம் பரவுகிறது.
மேலாண்மை: ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் அல்லது 2 கிராம் கார்பென்டாசிம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2.5 கிலோ சூடோமோனாஸ் புளுரோசன்சை, 50 கிலோ மட்கிய தொழுவுரத்தில் கலந்து, விதைக்கும் போதும், அடுத்து 30 நாட்களுக்குப் பின்பும் மண்ணில் இட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலந்து ஊற்ற வேண்டும்.
சாம்பல் நோய்- எரிசிபி பாலிகோனி
சாம்பல் நோய்ப் பூசணமானது இலை, இலைக்காம்பு, தண்டு, பூங்கொத்து, பிஞ்சு, காய் முதலிய அனைத்தையும் தாக்கும். நோயுற்ற பயிர்களின் இலைகளின் மேலும், சில நேரத்தில் இலைகளின் கீழும் வெண்மையாகக் காணப்படும். நாளடைவில் இவை ஒன்றாக இணைந்து, பழுப்பாகவும் கறுப்பாகவும் மாறும். இதனால், இலைப்பரப்பு முழுவதும் வாடிவிடும். பாதிக்கப்பட்ட செடிகள், வளர்ச்சிக் குன்றி வாடி வதங்கி விடும். இறுதியில், இலைகளும் காய்களும் கறுப்பாக மாறிக் காய்ந்து உதிர்ந்து விடும். இந்நோய் ஒரு பருவத்திலிருந்து மற்றொரு பருவத்துக்கு, நோயுற்ற இலைகள் மூலம் பரவும். பொதுவாக, நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு, காற்றின் மூலம் பரவும்.
மேலாண்மை: நோயைக் கண்டதும், 5 சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்ப எண்ணெய்க் கரைசலை, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு தடவை தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு, 250 கிராம் கார்பென்டாசிம் அல்லது 250 கிராம் நனையும் கந்தகம் அல்லது 250 மி.லி. பிரபிகோனசோல் வீதம் தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய் – செர்கோஸ்போரா கனசென்ஸ்
இலைகளில் சிறிய வட்டப் புள்ளிகள் தோன்றும். புள்ளிகளின் நடுவில் சாம்பலாகவும், அதனைச் சுற்றிப் பழுப்பு வளையமும் காணப்படும். இப்புள்ளிகள் நாளடைவில் இணைந்து இலை முழுவதும் பரவியதும் இலை காய்ந்து விடும். இப்படி, இலைகள் அனைத்தும் கருகிக் கீழே விழுந்து விடும். இந்த நோயானது, பாதிக்கப்பட்ட செடியிலிருந்து மற்ற செடிகளுக்குக் காற்று மூலம் பரவும்.
மேலாண்மை: ஏக்கருக்கு, 500 கிராம் மேன்கோசெப் அல்லது 250 கிராம் குளோரோதலோனில் அல்லது 200 மி.லி. பிரபிகோனசோல் வீதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
ஆந்தரக்னோஸ் – கொலிட்டிரோடிரைக்கம் லின்டிமுத்தியானம்
இதன் தாக்குதலுக்கு உள்ளாகும் செடிகளின் இலைகளில், இலைப்புள்ளி நோயால் ஏற்படும் புள்ளிகளை விட, சற்றுப் பெரியளவில் புள்ளிகள் காணப்படும். புள்ளியின் நடுப்பகுதி சாம்பலாகவும், அதனைச் சுற்றிப் பழுப்பு வளையமும் காணப்படும். இந்நோய் பயிரின் வேரைத் தவிர்த்து எல்லாப் பாகங்களையும் தாக்கும். இளஞ்செடி விதையிலைகளில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றி நாளடைவில் காய்ந்து விடும். இலைகளில் செவ்வகமாகப் பழுப்புப் புள்ளிகள் தோன்றிப் படர்ந்து இலைக் காம்புகளையும் தாக்கும். நோய் அதிகமானால் காய்களில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றும். விதைகள் நிறமாறிக் காணப்படும். நோயுற்ற பாகங்களில் பூசண வித்துகள் காணப்படும். நோயானது, நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்குக் காற்றின் மூலம் பரவுகிறது.
துருநோய் – யூரோமைசிஸ் பேசியோலி
இளம் பயிரில் துருநோய் தோன்றினால் அதிகளவில் இழப்பு ஏற்படும். நோய் தொற்றிய 8-10 நாட்களில் இலைகளின் அடியிலும், மேலேயும் ஆரஞ்சு கலந்த துருப்புள்ளிகளைக் காணலாம். துருநோய் தோன்றிய 48 மணி நேரத்தில் செம்பழுப்பு வித்துகளை உண்டாக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டு விடும். நோயுற்ற இலைகள் காய்ந்து உதிர்ந்து விடுவதால் காய்ப்பு மிகவும் குறைந்து விடும்.
மேலாண்மை: நோயுற்ற பகுதிகளை அகற்றி அழிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்ததும், ஏக்கருக்கு, 500 கிராம் மேன்கோசெப் அல்லது 250 மி.லி. பிரபிகோனசோல் வீதம் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் தேமல் நோய்
நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளில் ஆங்காங்கே மஞ்சள் புள்ளிகள் காணப்படும். பிறகு, இலை முழுவதும் திட்டுத்திட்டாக, ஒழுங்கற்ற மஞ்சளும் பச்சையும் கலந்த பகுதியும் தோன்றும். சில சமயம் நோயுற்ற இலைகள் சிறுத்தும் சுருங்கியும் காணப்படும். நாளடைவில் மஞ்சள் நிறப்பகுதி அதிகமாகிக் கொண்டே வர, சில துளிர் இலைகள் முழுவதும் மஞ்சளாகி விடும். நோயுற்ற செடிகள் தாமதமாகக் காய்ப்புக்கு வருவதுடன், குறைந்த காய்களே காய்க்கும். சில சமயம், காய்களும் மணிகளும் மஞ்சளாகி விடும். இதனால், விளைச்சல் முழுமையாகப் பாதிக்கும். நோயானது வெள்ளை ஈக்கள் மூலம் பரவுகிறது.
மேலாண்மை: நோயெதிர்ப்பு வகைகளான வம்பன் 6, 7, 8 உளுந்து வகைகளை, பாசிப்பயறில் கோ-8, பீஷீஎஸ்-9 வகைகளைப் பயிரிடுதல். நோயுற்ற செடிகளை அகற்றி அழித்தல். ஏக்கருக்கு 5 மஞ்சள் ஒட்டுப்பொறிகளை வைத்தல். ஒரு கிலோ விதைக்கு 5 மி.லி. இமிடாகுளோப்பிரிட் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்தல் மற்றும் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் இதே மருந்தை ஏக்கருக்கு 80 மி.லி. வீதம் தெளித்தல்.
ஒரே பூசணக் கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் பரிந்துரை செய்துள்ள பூசணக் கொல்லிகளை மாற்றி மாற்றித் தெளித்து, நோய்க் காரணிகளைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.
ப.நாராயணன், பயிர்ப் பாதுகாப்புத் தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் மையம், கீழ்நெல்லி, திருவண்ணாமலை – 604 410.