இயற்கையை நம்பி வாழ்பவர்கள் வேளாண் பெருங்குடி மக்கள். அது சாதகமாக அமைந்து விட்டால், விளைச்சலுக்கும் பஞ்சமிருக்காது; அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. அது வாய்ப்பாக அமையவில்லை எனில், அவர்கள் படும் இன்னலுக்கும் அளவிருக்காது.
அதிலும், பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட்டு, நல்ல மகசூலுக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் வேளையில், அந்தக் காத்திருப்புப் பொய்யானால் எப்படியிருக்கும்? இதை, பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப் போல, ஒரு விவசாயியின் வேதனையை இன்னொரு விவசாயியால் தான் உணர முடியும்.
அந்த வகையில், வேளாண் பெருங் குடும்பத்தில் பிறந்து, பொது வாழ்க்கையிலும் பெரும் பங்காற்றி வரும், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகளால், தென்னை சாகுபடி விவசாயிகள் அடைந்து வரும் இன்னலைக் கண்ணுற்றும் உணர்ந்தும் அறிந்ததன் மூலம், தென்னை சாகுபடியையும், தென்னை விவசாயிகளையும் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டார்.
அந்த வகையில், தென்னையைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், பாசன மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் ஊடுபயிர்கள் சாகுபடி குறித்து, தென்னை விவசாயிகள் பயனடையும் வகையிலான முன்மாதிரி கள ஆய்வுகள், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பூச்சக்காட்டு வலசு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம், மூலனூர் ஊராட்சி, திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி, குறிஞ்சி நகர் ஆகிய இடங்களில், தென்னையைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் உர நிர்வாகம் குறித்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, வேளாண் விஞ்ஞானிகளின் ஆலோசனைகளும், விவசாயிகளின் அனுபவங்களும் பகிரப்பட்டன.
இந்தக் கள ஆய்வுகளும், கருத்தரங்கச் செய்திகளும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை சாகுபடி விவசாயிகளைச் சென்றடைந்தால் தான், எடுத்த செயலில் முழுப் பயனை அடைந்ததாக இருக்கும் என்பதை உணர்ந்த அமைச்சர், இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக உருவாக்கி, தென்னை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டர்.
அந்த வகையில், கள ஆய்வுகள் மற்றும் கருத்தரங்கச் செய்திகளை மட்டுமின்றி, வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்கள், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள், திருப்பூர் மாவட்டம் தளியில் உள்ள தென்னை மகத்துவ மையத்தின் உதவி இயக்குநர் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் வேளாண் பெருமக்களின் அனுபவக் கருத்துகளையும் பெற்று, தென்னை மரங்களையும், தென்னை விவசாயிகளையும் காக்கும் வகையில், தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேடு என்னும் தலைப்பில் மிகச் சிறந்த நூலைத் தயாரித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் உருவாக்கிய இந்நூலை, தலைமைச் செயலகத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் வெ.ஷோபனா, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!