தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப் பட்டமாகும். அதாவது, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படும் நெல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பெரும்பாலும், 150-160 நாட்கள் வயதுள்ள இரகங்களே இந்தப் பருவத்துக்கு உகந்தவை எனக் கருதப்படுகிறது. இப்பருவம், வானம் பார்த்த பூமி என்னும் மானாவாரியில் பயிரிடுவதற்கு ஏற்றது. தென்மேற்குப் பருவமழை மூலம் நாற்றுகளை வளர்த்து, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் அல்லது அக்டோபர், நவம்பர் மாதங்களில், வடகிழக்குப் பருவ மழையைக் கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தப் பருவத்தில், நீண்டகால இரகங்களான, ஏடிடீ 44, பொன்மணி (சி ஆர் 1009), சிஆர் 1009 சப்1, பிபிடி 5204, பிஒய் 4 (ஜவகர்), ஏடிடீ 51 ஆகியன, அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஏடிடீ 44
இந்த இரகம், 150 நாட்கள் வயதை உடையது. எக்டருக்கு, 6,500 கிலோ மகசூலைத் தரவல்லது. ஆயிரம் தானிய மணிகளின் எடை 23.9 கிராம் இருக்கும். தானியம் தடித்த குண்டு வடிவில் இருக்கும். அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். பயிர், நடுத்தர உயரமானது. குலைநோய், பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பான், பழுப்புப்புள்ளி நோய், இலை மடக்குப்புழு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
பொன்மணி (சிஆர் 1009)
இந்த இரகம், 155-160 நாட்கள் வயதை உடையது. எக்டருக்குச் சராசரியாக 5,300 கிலோ மகசூலைக் கொடுக்கும். ஆயிரம் தானிய மணிகளின் எடை 23.5 கிராம் இருக்கும். தானியம், தடித்தும் குண்டு வடிவிலும் இருக்கும். நீண்டு வளரும் பயிர் இரகம். அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
சிஆர் 1009 சப். 1
இந்த இரகம், மரபுக் குறியீட்டைப் பயன்படுத்தி, பயிர் இனப்பெருக்க முறைகளில் தேர்வு செய்யப்பட்டது. நட்டதும் 15 நாட்கள் வரை நீரில் மூழ்கினாலும், அதைத் தாங்கி வளரும். இதன் வயது 151 நாட்கள். எக்டருக்கு 5,759 கிலோ மகசூலைத் தரும். இலைப்புள்ளி நோய், குலைநோய், புகையான், வெண்முதுகுத் தத்துப்பூச்சி ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.
அரிசி குட்டை மற்றும் பருமனாக இருக்கும். அதிக அரவைத் திறனும் முழு அரிசி காணும் திறனும் மிக்கது. மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், இட்லி தயாரிப்புக்கு மிகச் சிறந்தது. தமிழ்நாட்டில் சம்பா பருவத்திலும், ஏனைய நீண்ட கால இரகங்களை சாகுபடி செய்யும் பகுதிகளுக்கும் ஏற்றது. இந்த இரகத்தை, சிஆர் 1009 நெல் இரகத்துக்கு மாற்று இரகமாகப் பயிரிடலாம்.
பிபிடி 5204
இந்த இரகம், ஆந்திரா பொன்னி, சம்பா மசூரி என்று அழைக்கப்படும். இதன் வயது 150 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 6,000 கிலோ மகசூல் கிடைக்கும். தானியம், நடுத்தரச் சன்ன இரகமாக இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். நடுத்தர குட்டைப் பயிர். சாதமாகச் சமைக்கச் சிறந்தது. குலை நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ளது. மானாவாரி தாழ்நிலங்களுக்கு ஏற்ற இரகம்.
பிஒய் 4 (ஜவகர்)
இந்த இரகம், 150 நாட்கள் வயதை உடையது. எக்டருக்கு 6,600 கிலோ மகசூலைத் தரவல்லது. ஆயிரம் தானிய மணிகளின் எடை 24.8 கிராம் இருக்கும். தானியம் நீண்ட குண்டு இரகமாக இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். நடுத்தரக் குட்டைப் பயிர். பாக்டீரியா இலைக்கருகல், பழுப்பு இலைப்புள்ளி, துங்ரோ வைரஸ், இலையுறை அழுகல், இலை மடக்குப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
ஏடிடீ 51
இந்த இரகம், 155-160 நாட்கள் வயதை உடையது. இது, பிபிடி 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகியவற்றின் கலப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. எக்டருக்கு 6,500-7,000 கிலோ மகசூலைத் தரவல்லது. தானியம், நீண்ட சன்ன இரகமாக இருக்கும். சாதம் சமைக்க ஏற்ற நெல் இரகம்.
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி மிக்கது. பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படாது. 70.3 சதம் அரவைத் திறன், அதாவது, 100 கிலோ நெல்லுக்கு 70.3 கிலோ அரிசி கிடைக்கும். சம்பா பருவத்தில் அதிகமாகப் பயிரிடப்படும் இரகம். இது, சிஆர் 1009 இரக நெல்லுக்கு மாற்று இரகமாகும்.
முனைவர் அ.கோபிகிருஷ்ணன், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம். முனைவர் தி.பாலாஜி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டம். முனைவர் பெ.வீரமணி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!