தமிழ்நாட்டில் அதிகளவில் தோட்டங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, சில்லி, சிறிய கீரைத்தண்டு என, வேறு பெயர்களும் உண்டு. இந்தச் செடியின் நீளமான தண்டும், இலையும், மருத்துவப் பலன்கள் நிறைந்தவை.
நம்முடைய வீடுகளில் இன்றுவரை தவிர்க்க முடியாத கீரை, இந்தச் சிறுகீரை. இதற்குக் காரணம், இதிலுள்ள சத்துகளை நம் முன்னோர்கள் அன்றே கணித்தும், அறிந்தும், பயன்படுத்தியும் வந்தது தான். இந்தக் கீரையின் தண்டு நீளமாக இருக்கும். நார்ச்சத்து நிரம்பிய கீரைகள் பட்டியலில், இந்தச் சிறுகீரையும் அடங்கும்.
சிறுகீரை பயன்கள்
+ நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், எளிதில் செரித்து வயிற்றைச் சுத்தப்படுத்தும், மலச்சிக்கலையும் போக்கும்.
+ சுண்ணாம்பு மற்றும் இரும்புச்சத்து மிகுந்த இக்கீரையில், 90 சதம் நீர்ச்சத்து மற்றும் புரதம், கொழுப்பு, தாதுப்பு, மாவுச்சத்தும், சம அளவில் வைட்டமின்கள் ஏ, பி, சி-யும் உள்ளன.
+ சர்க்கரை நோயாளிகள், இக்கீரையைத் தினமும் சாப்பிட்டால், இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.
+ இந்தக் கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவற்றின் இனத்தைச் சார்ந்த சிறிய கீரை வகையாகும்.
+ சுமார் இருபது செ.மீ. உயரம் வரை செங்குத்தாக வளரக் கூடியது.
+ நிறையக் கிளைகளுடன் இருக்கும். இச்செடி மிக மெல்லிய வடிவில் இருக்கும்.
சாகுபடி
பருவம்: சித்திரைப் பட்டம், ஆடிப்பட்டம், மார்கழிப் பட்டம் மற்றும் மாசிப்பட்டம் ஏற்றது. இதை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஒரு எக்டரில் சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
மண்: நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத் தன்மையுள்ள இருமண் நிலம், செம்மண் நிலம் உகந்தவை. அதிகக் களிமண் நிலத்தைத் தவிர்க்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்: புழுதி புரள நிலத்தை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், சுமார் 10 டன் தொழுவுரத்தை இட்டு, நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். கீரை விதைகளோடு மணலைக் கலந்து தூவினால், விதைகள் சீராக விழுந்து முளைக்கும். பிறகு, கையால் கிளறிப் பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைகளை விதைத்ததும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க, பூவாளி மூலம் நீரைத் தெளிக்கலாம். வாய்க்கால் பாசனமாக இருந்தால், கவனமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். இக்கீரைக்கு நீர் அதிகம் தேவையில்லை. ஆனால், நிலம் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். நிழல் பகுதியாக இருக்கக் கூடாது. அதிக வெளிச்சம் தேவைப்படும்.
களை நிர்வாகம்: ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். களைகளால் கீரைகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். எனவே, விதைத்து 10-15 நாட்களில் களையெடுக்க வேண்டும். முதல் களையெடுப்பின் போது, பயிரின் எண்ணிக்கையைப் பொறுத்து, பயிர்களைக் களைதல் வேண்டும்.
உரமிடுதல்: மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றை இடலாம். இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து தெளிக்கலாம். மாதம் இருமுறை, ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு: புதினாவைப் பெரும்பாலும் பூச்சியோ நோயோ தாக்குவதில்லை. அப்படியும் ஏதேனும் பூச்சித் தாக்குதல் இருந்தால், இஞ்சி, பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சம அளவில் எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தைக் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இக்கரைசல் தயாராகி விடும். இதை, பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, அதிகாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: கீரை, 25 நாட்களில் தயாராகி விடும். 40-50 நாட்களில் இக்கீரையைச் செடியோடு பிடுங்கிப் பயன்படுத்தலாம்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.