கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021
மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, கூண்டுப்புழு, புகையான் போன்ற பூச்சிகளால் கடுமையான மகசூல் இழப்பு உண்டாகும். இதைத் தவிர்க்க, அவற்றின் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்ததும் தடுப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்.
தண்டுத் துளைப்பான்
அறிகுறிகள்: இலை நுனியின் அருகில் பழுப்புநிற முட்டைகள் நிறைய இருக்கும். தழைப் பருவத்தில் வளரும் தண்டுக்குள் இருந்து கொண்டு அதை உண்ணும். இதனால், தண்டின் நடுப்பகுதியான குருத்துக் காய்ந்து விடும். கதிரும் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்துதல்: ஏக்கருக்கு 2 சிசி வீதம் டிரைக்கோ கிரம்மா ஜப்பானிக்கம் என்னும் ஒட்டுண்ணியை, நடவு செய்து 30, 37, 44 ஆகிய நாட்களில் விட வேண்டும். நெருக்கி நடக்கூடாது. நாற்றின் நுனியைக் கிள்ளி விட்டு நட வேண்டும்.
பாதிப்பு அதிகமாக இருந்தால், ஏக்கருக்கு 400 கிராம் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு அல்லது 200 கிராம் தியாக்ளோ பிரிட் அல்லது 400 மில்லி அசாடி ராக்டினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைச்சுருட்டுப்புழு
அறிகுறிகள்: முட்டைகள் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நீளவாக்கில் மடிக்கப்பட்ட இலைகளில் புழுக்கள் இருக்கும். இவை பச்சையத்தைச் சுரண்டித் தின்பதால் இலைகள் காய்ந்து விடும். பாதிப்புக் கடுமையாக இருந்தால், பயிர்கள் முழுவதும் காய்ந்ததைப் போல வெள்ளையாக இருக்கும்.
கட்டுப்படுத்துதல்: ஏக்கருக்கு 5 சிசி வீதம், டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளை, நடவு செய்து 30, 37, 44 நாட்களில் விட வேண்டும். தேவைக்கு மேல் யூரியாவை இடக்கூடாது. களையேதும் இல்லாமல் வரப்புகள் சுத்தமாக இருக்க வேண்டும்.
மேலும், 5 சத வேப்பங் கொட்டைக் கரைசல் அல்லது 3 சத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு 400 மில்லி அசாடி ராக்டின் அல்லது 500 மில்லி குளோர் பைரிபாசை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
கூண்டுப்புழு
அறிகுறிகள்: இளமஞ்சள் நிறத்தில் முட்டைகள் இருக்கும். பச்சையத்தைச் சுரண்டித் தின்பதால், இலைகள் வெள்ளையாக இருக்கும். இலைகளின் நுனிகள் வெட்டப்பட்டு இருக்கும். தூர்களைச் சுற்றி, குழாய் வடிவக் கூண்டுகள் கிடக்கும்.
கட்டுப்படுத்துதல்: வடிகால் வசதியற்ற வயல்களில் இதன் தாக்கம் இருக்கும். எனவே, இளம் பயிர்களின் குறுக்கே கயிற்றைப் போட்டு, ஒருபுறம் இருந்து மறுபுறத்துக்கு இழுத்தால், புழுக்கள், முட்டைகள் நீரில் விழுந்து விடும். அதன் பின் வயலிலுள்ள நீரை வடித்து விட்டு, ஏக்கருக்கு 400 மில்லி பெந்தோயேட் மருந்தை, 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
புகையான்
அறிகுறிகள்: நீர் மட்டத்தில் இருக்கும் பயிரின் பகுதியில் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதனால், பயிர்கள் காய்ந்து தீய்ந்ததைப் போலத் தெரியும்.
கட்டுப்படுத்துதல்: அதிகமாக நீரைப் பாய்ச்சக் கூடாது. யூரியா இடுவதையும் தவிர்க்க வேண்டும். விளக்குப் பொறியை அமைத்துப் புகையானைக் கவர்ந்து அழிக்க வேண்டும். வயலிலுள்ள நீரை வடித்து விட்டு, அடித்தூரில் படும்படி, ஏக்கருக்கு 400 மில்லி அசாடி ராக்டின் அல்லது 320 மில்லி பியூரோஃபெசின் அல்லது 120 கிராம் பைமெட்ரோசைன் மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
முனைவர் சி.அருள்பிரசாத், முனைவர் வி.அ.விஜயசாந்தி, முனைவர் கோ.சதீஷ், முனைவர் யோகமீனாட்சி, முனைவர் மணிமேகலை, முனைவர் பெ.சாந்தி, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர் – 602 025. முனைவர் வெங்கடேஸ்வரி, வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் – 623 536.
சந்தேகமா? கேளுங்கள்!